

நேரலை இசை நிகழ்ச்சிகளுக்கும் சுயாதீன இசைக்கலைஞர்களுக்கும் எந்த ஊரிலும் இல்லாத வரவேற்பு சென்னையில் இருக்கிறது. மொட்டை மாடி தொடங்கி பாண்டி பஜார் வரை எந்த இடமானாலும் சென்னையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கெனெத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், புதுப்புது முயற்சிகளால் மக்களையும் இசையையும் ஒன்றிணைத்த இசைக்குழுக்கள், சுயாதீன இசைக்கலைஞர்கள் சிலரிடம் பேசினோம்.
மொட்டை மாடி மியூசிக்: “பாடத் தெரிந்தவர்கள், இசையை ரசிப் பவர்கள், இசைக் கருவி வாசிப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் எங்க வீட்டு மொட்டை மாடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்” என ‘மொட்டை மாடி மியூசிக் குழு’வை நிர்வகிக்கும் பத்ரி, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவுக்கு அமோக வரவேற்பு. நண்பர்கள், அக்கம்பக்கதினர் எனக் கூட்டம் கூட மொட்டை மாடி ஜாமிங் நிகழ்ச்சி பிரபலமானது. வழக்கத்துக்கு மாறாக இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துமாறு இசைக் குழுவுக்கு மக்கள் கோரிக்கை விடுக்க, ‘ரஜினி நைட்’, ‘ஏ.ஆர் ரஹ்மான் நைட்’, ‘எம்.எஸ்.வி நைட்’ என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன. ‘மொட்டை மாடி’ நிகழ்ச்சி அடுத்து சில மாதங்களில் ‘மாடிட்டோரியம்’ ஆனது. பொதுவாக ஓரிடத்தில் இசைக் கலைஞர்கள், மக்கள் கூடி பாடி மகிழ்வதுதான் இந்த ‘மாடிட்டோரியம்’. இதற்கும் வரவேற்பு கிடைக்க, வீட்டு மொட்டை மாடியில் பாடி வந்த இந்த இசைக்குழு இன்று இந்தியா முழுவதும் பல நகரங்களில் ‘மாடிட்டோரியம்’ நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
சென்னையின் தெருப்பாட்டு: அண்ணா நகர் டவர் பூங்கா, மெட்ரோ ரயில் நிலையம் என சென்னையின் முக்கிய இடங்களில் துடிப்பான இளைஞர் பட்டாளம் இசையுடன் பாடுகிறது. அந்த இடங்களில் மக்களும் அவர்களுடன் சேர்ந்து பாடி கைத்தட்டி கொண்டாடி மகிழ்கின்றனர். வாரம்தோறும் பத்துக்கும் அதிகமான பொதுஇடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்திவருகிறது ‘ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை’ இசைக்குழு. கடந்த சில ஆண்டுகளில் 800க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் இக்குழுவின் நிகழ்ச்சிகளைக் காண மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஷாப்பிங், வாக்கிங், ஹோட்டல் என வரும் மக்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டே இக்குழுவின் இசை நிகழ்ச்சிகளை ரசிக்கின்றனர். இதனால் தாங்களும் ஜாலியாகப் பாடி மகிழ்வதாக சொல்கிறார் இக்குழுவின் இணை நிறுவனர் கிருஷ்ணா.
சமூக வலைத்தளத்தில் இசை: இந்தக் காலத்தில் எளிமையாக மக்களைச் சென்றடைய சமூக வலைத்தளம் பெரிய கருவி. பாட்டு, இசை எனத் தனித்திறனை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராம், ஸ்பாடிஃபை, யூடியூப் எனப் பல தளங்கள் இருக்கின்றன. இவற்றை நேர்த்தியாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சுயாதீன இசைக்கலைஞர் வைசாக். “ஃபேஸ்புக்கில் மீம் கலாச்சாரம் மக்களை எளிதில் சென்றடையும். 2015க்குப் பிறகு இன்ஸ்டாகிராம், ஸ்பாடிஃபை போன்ற ஆப்களின் ஆதிக்கம் வரத் தொடங்கியபோது, பாடல்களை இயற்றி அதில் பதிவேற்றினோம். இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. சமூக வலைத்தளத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்; நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்; அவர்களால் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது சுயாதீன இசைக்கலைஞர்களின் பாடல்களை சென்னை மக்கள் அதிகம் கேட்டு ரசிக்கிறார்கள். சமூக வலைத்தளத்தின் உதவியால் கோவை, மதுரை போன்ற நகரங்களிலும் நமது இசையைக் கேட்க வைக்க முடியும். எந்தத் துறையாக இருந்தாலும் படைப்பாளர்களுக்கு ‘ரீச்’ ஆவது முக்கியம். அதனால், தமிழில் எழுதிப்பாடக்கூடிய சுயாதீன இசைக்கலைஞர்களுக்குச் சமூக வலைத்தளம் மிகப்பெரிய வரம். ஆன்லைன் மூலம் நிறைய மக்களைச் சென்றடையலாம். அதன்மூலம் நகரம், கிராமங்களுக்குச் சென்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்” என்கிறார் வைசாக்.