டி.ஜே. பிளாக் ஆனது எப்படி?

டி.ஜே. பிளாக் ஆனது எப்படி?
Updated on
2 min read

‘பொன்னியின் செல்வன்’, ‘டான்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு ‘டிஜே’ செய்துவருகிறார் சுதன் குமார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற டிஜே ப்ளாக் ஆக அறியப்படும் சுதன், அரசு வழங்கிய இலவச மடிக்கணியைப் பயன்படுத்தி ‘DJ’ வேலையைக் கற்றுக்கொண்டவர். சுதனின் பூர்விகம் கடலூர். சென்னை வியாசர்பாடியில் வளர்ந்தார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான சுதன், அரசுப் பள்ளியில் படித்தவர். பிளஸ் டூ படித்தபோது அரசு வழங்கிய இலவச மடிக்கணியை அலசி ஆராய்ந்தபோது சுதனுக்குத் தெரியாது அதிலிருக்கும் மென்பொருள் ஒன்று தன் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று!

கணினியில் இருந்த ‘டிஜே’ மென்பொருளைக் கற்றுகொண்ட அவர், தொடக்கத்தில் வீடுகளில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ‘டிஜே’ செய்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சூழலுக்கு ஏற்ற பாடல், இசைத் துணுக்குகள், கவுன்டர் வசனங்கள் போடுவதே ‘டிஜே’வின் வேலை. குடும்பத்தினர், நண்பர்கள் சுதனின் ‘டிஜே’வைக் கொண்டாட, தொடர்ந்து அப்பணியில் ஈடுபட்டார். பள்ளிப் படிப்பை முடித்து விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்த அவருக்கு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘டிஜே’ செய்ய வாய்ப்பு கிடைத்தது. “விஜய் டிவியின் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ‘டிஜே’ செய்துவந்தேன். தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக ரியாலிட்டி ஷோ ஒன்றின் படப்பிடிப்பின்போதே ‘டிஜே’ செய்யும் வாய்ப்பு ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் கிடைத்தது. அது ஹிட்டானதை அடுத்து சேனலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் ‘டிஜே’வைச் சேர்த்தனர். அப்படிதான் ‘குக் வித் கோமாளி’ வாய்ப்பு அமைந்தது” என்கிறார் சுதன்.

“குக் வித் கோமாளியில் இடம்பெற்ற டிஜே வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகின. கூடவே என்னுடைய வித்தியாசமான வேலையும் கவனிக்கப்பட்டது. ‘டிஜே’ வேலையைப் பொறுத்தவரை ஜாலியான கவுன்டரைத் தட்டிவிடுவது மட்டுமே வேலையல்ல. மற்றவர்கள் முகம் கோணாமலும் அதேநேரம் ஜாலியாகவும் டைமிங்கிலும் கவுன்டர்களை அனுப்பவதுதான் முக்கிய வேலை. இதில் காப்புரிமை பிரச்சினை அடிக்கடி ஏற்படும். நிகழ்ச்சித் தயாரிப்பின் உரிமையில் கிடைக்கக்கூடிய இசை, வசனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடி நிகழ்ச்சிகளின்போது இந்தச் சூழலைச் சமாளித்து டைமிங் தவறாமல் வேலையைச் செய்து முடிப்பது சற்று சவாலாகவே இருக்கும்” என்கிறார் சுதன். டிஜிட்டல் யுகத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சியில் உருவான எண்ணற்ற புதிய வேலைகளில் ஒன்றுதான் டிஜே. இந்தக் காலத்தில் சுயமாகக் கற்றுத் தேர்ச்சிபெறும் துறைகளில் தங்களை வளர்த்துக்கொள்ள இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் ‘டிஜே’ வேலை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்திருப்பது மட்டுமன்றி, இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் நிறைய உள்ளதாகச் சொல்கிறார் சுதன்.

“டிஜே வேலையைக் கற்றுக்கொள்ள முறையான படிப்புகள் இல்லை. என்றாலும், ‘Add on’ எனப்படும் டிஜே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் இருக்கின்றன. ஹோட்டல், பார்ட்டி, தனியார், கார்ப்பரேட், தொலைக்காட்சி, சினிமா, நேரடி நிகழ்ச்சிகள் எனப் பல துறைகளில் ‘டிஜே’ வேலைக்கான தேவை இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் இசை வெளியீடு, டீசர் வெளியீடு, வெற்றிக் கொண்டாட்டம் என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புதுவிதமான ‘டிஜே’வை செட் செய்யலாம். நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருப்பவர்களை வைபில் வைத்திருக்கலாம். முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக ‘டிஜே’ வேலை செய்து சம்பாதிக்கலாம்” என்கிறார் சுதன். ஏ.ஆர் ரஹ்மான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் சுதனின் டிஜேவைப் பாராட்டி வாழ்த்தியிருக்கின்றனர். “பிரபலங்கள் சிலர் வாழ்த்தும்போது உற்சாகமாக இருக்கும். ஆனால், அதே நேரம் ‘டிஜே’ என்றால் பளிச்சிடும் முகத்தோற்றத்துடன் ஸ்டைலான ஆடைகளை அணிந்த ஒருவரையே சிலர் எதிர்பார்ப்பார்கள். அனைவருக்கும் இதே மனநிலை என்று சொல்ல முடியாது. திறமையை மட்டும் கண்டு வாய்ப்பளிக்கும் நல்ல உள்ளங்களும் உண்டு. அவர்களைப் போன்ற சிலரால்தான் நானும் இந்த நிலையை எட்டியிருக்கிறேன்” எனக் கூறுகிறார் சுதன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in