யூடியூப் பக்கம்: தள்ளிப் போகாதே நண்பா!

யூடியூப் பக்கம்: தள்ளிப் போகாதே நண்பா!
Updated on
1 min read

சுமார் ஒரு வருடமாகக் காதலில் நம்மை மூழ்கடித்த ‘தள்ளிப் போகாதே’ பாடல் இப்போது வேறொரு வடிவத்தில் தேசம் கடந்த நட்பை ஊட்டுகிறது. நாம் அந்நியர்கள் அல்ல நண்பர்களே என்கிற அர்த்தத்தில் ‘யாரா ஹம் நஹி அஜ் நபி’ என இந்தியில் இசைப் புயலோடு இளம் பாடகர் பட்டாளமே பாடி-நடித்திருக்கிறார்கள்.

யூடியூப் ஸ்டார்கள்

விவசாயி, கட்டுமானத் தொழிலாளி, எலெக்ட்ரீஷியன், துப்புரவுத் தொழிலாளி, நெசவாளர் இப்படி மிகச் சாதாரணமானவர்களாகக் கருதப்படும் மனிதர்களின் கடின உழைப்பால்தான் இந்த உலகமே இயங்குகிறது. ஆனால் அவர்களுடைய முக்கியத்துவத்தைப் பலரும் அங்கீகரிப்பதே இல்லை. விண்ணிலிருந்து பாயும் ஒளியும் வீசும் காற்றும் நாம் அனைவரும் ஒன்றே என்பதை உணர்த்துகின்றன.

இனியாவது நாம் அந்நியர்கள் அல்ல நண்பர்களே என்பதைப் புரிந்துகொள்வோம் என ‘தள்ளிப் போகாதே’ பாடலின் ட்யூனில் புதிய கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இப்பாடல் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான முறை யூடியூப்பில் பார்க்கப்பட்டிருக்கிறது.

பிரபல இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சேகர் கபூர் மற்றும் மும்பை தொழிலதிபர் சமிர் பங்காராவோடு சேர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஏ.ஆர்.ரஹ்மான் ‘குயிக்கி’ (Qyuki) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். ‘மன மன மெண்டல் மனதில்’ பாடிய ஜோனிதா காந்தி, உட்பட ஏகப்பட்ட பாலிவுட் பாடகர்களும், யூடியூப் ஸ்டார்களும் இதில் ரஹ்மானோடு யூடியூப்பில் களம் இறங்கினார்கள்.

‘ஜேம்மின்’ எனப்படும் இந்தக் குழுவின் தனிச் சிறப்பு இதில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கு நிகரான வாய்ப்பை யூடியூப்பில் தங்களுடைய தனிப்பட்ட பாடல்களை வெளியிட்டுத் திறமையை நிரூபித்தவர்களுக்கும் ரஹ்மான் வழங்குகிறார்.

‘ஜேம்மின்’ நேரம்

இன்று எத்தனையோ இளம் இசைக் கலைஞர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர சரியான பக்கபலம்தான் தேவை. யூடியூப் போன்ற டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் அதற்கு அற்புதமான களம். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் திறமைசாலிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஜேம்மின் யூடியூப் சேனல் (Jammin YouTube channel) நடத்துவதைவிடப் பெரிய வாய்ப்பு என்ன இருக்க முடியும்! ஆனால் ஒன்று ‘யாரா’ என 16 பேர் பாடினாலும் சித் ஸ்ரீராம் ஒருவரின் குரல் செய்யும் மாயாஜாலம் வேறுதான். அதிலும் தமிழ் ராப் பகுதி அளவுக்கு இந்தியில் இம்ப்ரஸ்ஸிவ்வாக இல்லை. அசல்தான் அசத்தல்!

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in