

சோழர்களின் வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன் பாகம் 1’ கதையை எழுத்து வடிவில் மட்டுமே படித்துவந்த நிலை மாறி, ஒளியும் ஒலியும் கலந்த சித்திரமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்துக்கு அப்பால், அதன் கதை உருவானதன் பின்னணித் தகவல்கள்:
தொடர் கதை: 1950 முதல் 1954ஆம் ஆண்டு வரை ’கல்கி’ இதழில் வாரந்தோறும் எழுத்தாளர் ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவல் ’பொன்னியின் செல்வன்’.
வரலாறு: தமிழகத்தில் மட்டுமல்லாமல் கிழக்கு ஆசியா வரை ஆதிக்கம் செலுத்தி நீண்ட காலம் ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழர்களின் வரலாற்றை மக்களிடம் பிரபலப்படுத்த உதவியது ’பொன்னியின் செல்வன்’ நாவல்.
பயணம்: இந்தக் கதையை எழுத தஞ்சாவூர், நாகப்பட்டினம், இலங்கை ஆகிய இடங்களுக்கு கல்கி பயணித்தார். ஓவியர் மணியமும் உடன் சென்றார்.
உண்மையும் கற்பனையும்: அவர் வாழ்ந்த காலத்து வரலாற்று நூல்களிலிருந்து சில குறிப்புகளை கல்கி எடுத்துக்கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்று ’பொன்னியின் செல்வ’னைக் கூற முடியாது. சோழ ஆட்சியின் பொற்காலம் என வர்ணிக்கப்படுவது ராஜராஜன் (அருள்மொழிவர்மன்), ராஜேந்திரரின் ஆட்சிக்காலமே. ஆனால், கதையோ அவர்களது ஆட்சிக்காலத்துக்கு முந்தையது.
பொன்னியின் செல்வன் யார்?: அருள்மொழிவர்மன் முடிசூடுவதற்கான தருணத்தோடு கதை முடியும். அவரே ’பொன்னியின் செல்வன்’ என வர்ணிக்கப்பட்டுள்ளார். பொன்னி என்பது காவிரி ஆற்றின் இன்னொரு பெயர்.
கதாப்பாத்திரங்கள்: நாவலின் முதன்மைக் கதாபாத்திரம் வந்தியத்தேவன். நாவலில் அதிகக் கவனம் ஈர்க்கும் நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியான் போன்ற முக்கியக் கதாபாத்திரங்கள் கற்பனையே!
நூல் வடிவம்: 2000 பக்கங்களுக்கு மேல் ஐந்து பாகங்களாக ’பொன்னியின் செல்வன்’ கதைப் புத்தகங்களாக வெளியானது. பல்வேறு பதிப்பகங்கள், பல்வேறு வடிவங்களில் ‘பொன்னியின் செல்வனை’ வெளியிட்டுள்ளன.
விற்பனை: ‘பொன்னியின் செல்வ’னின் முதல் புத்தகப் பிரதி வெளியாகி 65 ஆண்டுகளைக் கடந்தும், இப்போதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பிரதிகள் விற்பனை ஆவதாகக் கூறப்படுகிறது.
மொழிபெயர்ப்பு: அதிகம் விற்பனையான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உண்டு.
திரைப்படமாக...: எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக எடுக்க முயன்று பின் கைவிட்டனர். ஆங்கில, தமிழ் காமிக்ஸ் புத்தகங்களாக சில பகுதிகள் வெளியாகியுள்ளன.
தொகுப்பு: ரா. கார்த்திகா