

விளையாட்டு வீரர், வீராங்கனையின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து இனி அந்த வீரரைக் களத்தில் காண முடியாது என்பதைத் தாண்டி நுணுக்கமான சில விஷயங்களை ’மிஸ்’ செய்யப்போவதாக ரசிகர்கள் குறிப்பிடுவது வழக்கம். அது, உசைன் போல்ட்டின் வெற்றிக் கொண்டாட்டமாக, எம்.எஸ்., தோனியின் போட்டிக்குப் பிந்தைய உரையாடலாக, கங்குலியின் விவேகமாக, சச்சினின் சிரிப்பாகவும் இருக்கலாம்! அப்படி ஓர் உணர்வைத்தான் தந்திருக்கிறார் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர். வெற்றியோ தோல்வியோ ஃபெடரர் டென்னிஸ் கோர்ட்டில் இருந்தால் போட்டியின் கடைசி வரை போராடுவார். ஆகச்சிறந்த போட்டி அனுபவத்தைக் காண வழிவகுப்பார் என்கிற எதிர்ப்பார்ப்பு இனி இருக்காது என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் பிறந்த ஃபெடரர், தனது 24 வருட டென்னிஸ் பயணத்தில் 1,500-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். டென்னிஸ் வரலாற்றில் முதன்முதலில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் இவர்தான். இவருக்குப் பிறகே அந்த மைல்கல்லைப் பிற வீரர்களும் தொட்டனர். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக வலம்வந்த ஃபெடரர், 2004 - 2008காலகட்டத்தில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துகொண்டிருந்தார். டென்னிஸ் விளையாட்டில் ஃபெடரர் செலுத்திய ஆதிக்கத்துக்காகவும் அவர் வென்ற கோப்பை களுக்காகவும் நிறைய ரசிகர்கள் இருந்தாலும் டென்னிஸுக்கு வெளியேவும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. போட்டி நடக்கும் இடத்தில் உள்ள உதவியாளர்கள், பந்து சேகரிக்கும் சிறுவர்களிடம் கனிவாக நடந்துகொள்வது என ஃபெடரரின் நற்பண்புகளுக்கும் ரசிகர்கள் ஏராளம்.
விளையாட்டில் நேர்மையாக நடந்துகொண்டதற்கான விருதுகளை ஃபெடரரைப் போல வேறு எந்த வீரரும் பெறவில்லை. ஏடிபி டென்னிஸ் அமைப்பு வழங்கும் ’ஸ்டெஃபென் எட்பெர்க் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்’ விருதை 13 முறை ஃபெடரர் வென்றிருக்கிறார் என்பதே அவரது நற்பண்புக்குச் சான்று. இந்த விருதுக்குரியவர்களைச் சக வீரர்கள்தாம் தேர்வு செய்கிறார்கள் என்பது இன்னும் சிறப்பானது. அது மட்டுமல்ல, ரசிகர்களால் தேர்வுசெய்யப்படும் ‘ஃபேன்ஸ் ஃபேவரைட்’ விருதையும் 2004 முதல் 2021 வரை தொடர்ந்து 19 முறை பெற்றிருக்கிறார் ஃபெடரர். இதுவரை எந்த வீரருக்கும் கிடைக்காத சிறப்பு இது!
டென்னிஸில் ஃபெடரரின் பயணம் ஏறுமுகமாக மட்டுமே இருந்திருக்கவில்லை. அவர் சறுக்கியும் இருக்கிறார். ஆனால், அந்த வேகத்திலேயே மீண்டு வந்திருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஃபெடரர், தனது 41ஆவது வயதில் ஓய்வை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை டென்னிஸ் தொடருடன் ஃபெடரரின் டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. கடைசிப் போட்டிக்குப் பிறகு கண்ணீருடன் விடைபெற்ற ஃபெடரரை ரஃபேல் நடால், நோவக் ஜோக்கோவிச் போன்ற முன்னணி வீரர்கள் கட்டித்தழுவி, தூக்கி கொண்டாடி வழியனுப்பி வைத்தனர். போட்டி களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், மெச்சத்தக்க வீரரின் விடைப்பெறுதலுக்கு சக வீரர்களும் கண்ணீர் சிந்தியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது!
“ஃபெடரர் விளையாடியபோது இருந்த டென்னிஸ் இனி இருக்காது” என ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். உலகெங்கிலும் ஃபெடரரை டென்னிஸின் ஆதர்ச நாயகனாகக் கொண்டாடு பவர்கள் ஏராளம். ஆனால், டென்னிஸ் சாதனையாளர் என்கிற வரையறைக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாத இணையில்லா நாயகன் அவர்!
| உதவிய கரங்கள்: விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் தங்களுடைய விளையாட்டுக்காகப் பேசப்படுவார்கள். ஆனால், ஃபெடரர் விளையாட்டுக்காக மட்டுமல்ல தன்னுடைய சேவைகளுக்காகவும் பேசப்பட்டவர். இதுவரை, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளின் குழந்தைகளின் கல்வி, உடல்நலத்துக்காகவும் உதவி இருக்கிறார். இதற்காகவே, 2003இல் ‘ரோஜர் ஃபெடரர் பவுண்டேஷ’னை தொடங்கினார். டென்னிஸில் வெற்றிபெற்று கோடிகோடியாகச் சம்பாதித்திருந்தாலும், ஃபெடரரின் உதவிக்கரம் நீளாதப் பகுதிகள் குறைவு. |