

கிரிக்கெட்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை 5-வது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது இந்திய அணி. கடந்த காலத்தில் இளையோர் உலகக் கோப்பையிலிருந்து புதிய நாயகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பைத் தொடரில் பரிணமித்த புதிய நாயகன் யார்?
கடந்த காலத்தில் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய முகமது கைஃப், யுவராஜ் சிங் (2000), பார்த்திவ் பட்டேல் (2002), அம்பாதி ராயுடு (2004), விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா (2008), இஷான் கிஷான் (2016), பிரித்வி ஷா, சுப்மன் கில் (2018) எனப் பல வீரர்கள் இந்திய சீனியர் அணியிலும் பிற்காலத்தில் இடம் பிடித்து அசத்தினர். நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பையில் மூன்று லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்று இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வசப்படுத்தியது. இந்த வெற்றியின் பின்னணியில் பல வீரர்களின் சிறந்த பங்களிப்பு இருந்தது. என்றாலும், உலகக் கோப்பையில் கவனம் ஈர்த்த வீரராக ஜொலிக்கிறார் ஒருவர். அவர், ஆல்ரவுண்டர் ராஜ் அங்கத் பாவா. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றவர் இவர்தான்.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பாவா, பேட்டிங்கில் 35 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணியைச் சேர்ந்த ஒருவர், இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல, லீக் போட்டியில் உகாண்டா அணிக்கு எதிராக 108 பந்துகளில் 162 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து, பாவா சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை அழுத்தமாக நிரூபித்தார். இத்தொடரில் மொத்தமாக 252 ரன்களைக் குவித்திருந்த பாவா, ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதில் ரன் சராசரி 63; விக்கெட் சராசரி 16.5.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிற ராஜ் அங்கத் பாவாவுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. 1948ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த தர்லோச்சன் சிங் பாவாவின் பேரன்தான் ராஜ் பாவா. ஒலிம்பிக்கில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இதில், ஒரு கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றினார் தர்லோச்சன். மேலும், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பெற்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பதால், தர்லோச்சன் புகழ் பெற்றார். இன்று அவரைப் போலவே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்குப் பங்காற்றியிருக்கிறார் அவருடைய பேரன்.
இந்திய அணியில் கபில்தேவுக்குப் பிறகு சிறந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் உருவாகவில்லை. இன்று அந்த இடத்தைப் பிடிக்கப் பலரும் போட்டிபோடும் சூழலில், ராஜ் பாவாவுக்கும் அதற்கான கதவு திறக்கலாம்!