

ஐ.டி. வேலை தந்த கசப்பான அனுபவங்களின் காரணத்தால் வேலையில் இருந்து வெளியேறியவர்களையும், வெளியேற்றப்பட்டவர்களையும் குறி வைத்து இயங்குகிறது ஒரு கும்பல்.
பிஸினஸ் பிடித்து தருகிறேன், புராஜக்ட் வாங்கித் தருகிறேன், கன்சல்டன்ஸி என்று பல பெயர்களில் வலம் வரும் அவர்களை நம்பி மோசம் போனவர்கள் ஏராளமானவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் ஐ.டி. ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.டி.யில் வேலைக்குச் சேர்ந்து, ஒரு பத்து ஆண்டுகளைக் கடந்து விட்டால், ஊழியர்களுக்கு இரண்டு விதமான எண்ணங்கள் உண்டாகும். ஆஃபீஸ், புராஜக்ட், மேனஜர், கிளையண்ட், மீட்டிங் என்று எல்லாமே ஒருவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தாலும், ஏதோ சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்று ஒரு தரப்பினர் கூறுவர். இது முதல் வகைச் சிந்தனை.
இன்னொரு தரப்பினரோ, ஆஃபீஸ், புராஜக்ட், மேனஜர், கிளையண்ட், மீட்டிங் என்று எல்லாமே மோசமாகவுள்ளது, வாழ்க்கை வீணாகிறது என்று சொல்வார்கள். இது இரண்டாவது ரகம். இந்த இரு தரப்பும் முடிவாகச் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான். ‘ஐ.டி. வேலை இனியும் வேண்டாம்’ என்பதுதான் அது! இப்படி முடிவெடுத்துவிட்டுச் சும்மாவும் இருக்க முடியாது.
ஐ.டி. புரொஃபஷனில் இருந்து விலகும் நகரப் பின்னணியைக் கொண்ட பலர், தாங்களே ஒரு கம்பெனியை ஆரம்பிப்பதைக் கனவாகக் கொண்டிருப்பார்கள். கம்பெனி என்றால் பெரிய முதலீடுகள் கிடையாது. 10-க்கு 10 அறையில் 4 கம்ப்யூட்டர்கள் உபயத்தில் ஆரம்பிக்கப்படுவதுதான் அந்த நிறுவனம். இப்படி ஆரம்பிப்பவர்களுக்கு வேலை என்பது அத்துப்படி. ஆனால், நிர்வாகம், மார்க்கெட்டிங், மனித வளம் உள்ளிட்ட விஷயங்களில் கத்துக்குட்டியாக இருப்பார்கள்.
அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதாகச் சிலர் வருவார்கள். அவர்களிடம் பெருந்தொகை கொடுத்து ஏமாந்தவர்கள் பலர். அப்படிப்பட்ட ஒருவர் "நான் 10 வருடமாக சென்னையில் உள்ள மிகப் பெரிய ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றினேன். எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததுபோல் இருந்தது. என்னவென்று யோசித்தபோதுதான் புரிந்தது எனக்கான சுதந்திரம் என்று எதுவும் இல்லை. முழுக்க முழுக்க நான், ஒரு நிறுவனத்துக்கு அடகு வைக்கப்பட்டது தெரிய வந்தது" என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலா.
மேலும், அவர் கூறும்போது, "அதன் பிறகு வேலையை விட்டுவிட்டு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே மென்பொருள் சார்ந்து நிறுவனத்தைத் தொடங்குவதற்குப் பொருளாதார ரீதியாக நிறைய முதலீடு தேவை. அதனால் கேபிஓ (நாலெட்ஜ் ப்ராசஸ் அவுட்சோர்சிங்) எனப்படும் அவுட்சோர்ஸிங் நிறுவனம் ஒன்றை சின்ன அளவில் ஆரம்பித்தேன்.
கேபிஓ-வுக்கான புராஜக்ட்டுகளை அதே வேலையைச் செய்கிற பெரிய நிறுவனத்திடமிருந்துதான் வாங்க வேண்டும். அந்த வகையில் நான் எனது நண்பரின் உதவியோடு யுவராணி என்னும் பெண்ணிடமிருந்து புராஜக்ட்டுகளை வாங்கினேன். இதற்காக நான் ரூ.70 ஆயிரம் கொடுத்தேன்.
இரவு, பகல் பாராமல் 3 மாதங்கள் உழைத்து எல்லா புராஜக்ட்டுகளையும் நானே முடித்துக் கொடுத்தேன். அந்த உழைப்புக்கு எனக்குச் சேர வேண்டிய தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம். ஆனால், புராஜக்ட் முடித்துக் கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை எனக்கு அந்தப் பணம் கிடைக்கவில்லை. முதலீடு செய்த ரூ.70 ஆயிரமும் நட்டாற்றில் போட்டதாக ஆகிவிட்டது. அந்தப் பெண்ணின் எண்ணோ தற்போது சுவிட்ச் ஆஃபில் உள்ளது" என்று பொருமுகிறார் பாலா.
சுரேஷின் அனுபவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். அவருக்கும் ஐ.டி.யில் நல்ல அனுபவம். ஆனால், அலுவலகச் சிக்கல் காரணமாக வேலையிலிருந்து வெளியேறிய அவர், நண்பர் ஒருவரின் மூலம் ஹைதாராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தாம்பரம் அருகே கிளை தொடங்குவதை அறிந்துகொண்டார். அந்நிறுவனத்தில் உயர் பொறுப்பு ஒன்றுக்காக அணுகினார் சுரேஷ்.
'நீங்கள் கேட்கிற பொறுப்பைத் தருகிறோம். இன்னும் அலுவலகம் தயாராகவில்லை. எனவே, சோதனை அடிப்படையில் ஒரு திருமண மண்டபத்தில் ஒரு மாத காலத்துக்கு அலுவலகத்தை நடத்தவுள்ளோம். இதற்காக நீங்கள் ஒரு 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்' என்றது நிறுவன தரப்பு. இவரும் கொடுத்துள்ளார்.
புதிதாக கல்லூரி முடித்திருந்த பலரும் சுரேஷைப் போலவே, கணிசமான தொகையை அளித்தது தனிக் கதை. ஒரு மாத காலத்துக்கு எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. வழக்கம் போல், ஒரு நாள் வேலைக்குக் கிளம்பிச் சென்றபோது, மண்டபத்திலிருந்த ஹைதராபாத் கும்பல் 'ஜுட்' விட்டிருந்தது. இது தொடர்பாக 2012 ஆகஸ்ட் மாதம் போலீஸார் வழக்குக்கூட பதிவு செய்து சிலரைக் கைது செய்தனர்.
சென்னயில் பல பகுதிகளில் இப்படியான மோசடி கும்பல்கள் அதிக அளவில் பணம் பறித்துள்ளனர். ஐ.டி.தான் வேலைக்கு ஆகவில்லை என்று சொந்தக் காலில் நிற்க முயன்றால், அங்கேயும் கீழே தள்ளிவிடுவதற்கு ஆட்கள் இருப்பதாக நொந்துகொள்கின்றனர் பாலா, சுரேஷை போன்றவர்கள்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து அறிவுசார் ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அருண் கூறும்போது, "ஐ.டி.யில் பணிபுரிபவர்களுக்கு என்று சங்கங்கள்தான் இல்லை. குறைந்தபட்சம் நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டாவது ஒரு வலைப் பின்னலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம், ஐ.டி.துறையின் போக்குகளுக்கு ஏற்ப எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதுதான் ஊழியர்களின் கனவு" என்கிறார். ஆனால், அந்த வலைப் பின்னலை உருவாக்கும் முயற்சிக்காக ஒருவர் பிள்ளையார் சுழி போடும்போது, அவரது மின்னஞ்சலில் ‘டெர்மினேஷன்’ கடிதம் வந்து விழுவதுதான் சோகம்.
ஓவியம்: முத்து