ஐ.டி. உலகம் 24: நோகடிக்கும் ‘நோட்டீஸ் பீரியட்!

ஐ.டி. உலகம் 24: நோகடிக்கும் ‘நோட்டீஸ் பீரியட்!
Updated on
2 min read

ஒருவருக்கு ஐ.டி. துறையில் வேலை கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயமோ, அதைவிட பெரிய விஷயம் வேலை கிடைத்த நிறுவனத்திலிருந்து சுமுகமாக வெளியேறுவது. ஆனால் அப்படி ஒரு வரம் நூற்றில் தொண்ணுற்றி ஒன்பது ஊழியர்களுக்கு வாய்ப்பதில்லை.

ஐ.டி.துறை பணிச்சூழலில் ஊழியர்கள் ஆயிரம் சிக்கல்களை அனுபவிக்கின்றனர். பணியின்போது அனுபவிக்கின்ற சிக்கல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற விதமாக உள்ளது நோட்டீஸ் பீரியட் இம்சைகள்.

ஒரு ஊழியர், தனக்கு இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. ஆகவே, உங்கள் அலுவலகத்திலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று கடிதம் கொடுப்பதுதான் நோட்டீஸ் பீரியட். இதனை ‘பேப்பர் போடுவது' என்று டெக்கிகள் அழைக்கின்றனர்.

‘பேப்பர் போட்டேன். இந்த 40 நாள்ல என்னென்ன வகையில குடைச்சல் கொடுக்க முடியுமோ அத்தனை வழியிலயும் கொல்லப் போறானுக' என்ற கதறல்கள் ஐ.டி.யில் சாதாரணம் என்கிறார் ஐ.டி. ஊழியர் சுரேஷ்.

"ஐ.டி.யில் வேலைக்குச் சேருவது என்பது கையில் தங்க ஊசி கிடைக்கிற மாதிரி. அதை வைத்து வாழ்க்கை எனும் ஆடையை அழகுற தைக்கலாம். ஆனால், நோட்டீஸ் பீரியட் என்பது அந்தத் தங்க ஊசியைத் தொண்டையில் குத்திக்கொள்வதற்குச் சமம்" என தனக்கு நேர்ந்த அனுபவங்களை இப்படிக் கூறுகிறார் சுரேஷ்.

வேலைக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் சுரேஷுக்கு இப்போது ரூ.30 ஆயிரம் சம்பளம். நெட்வொர்க்கிங் அத்துப்படி.

இந்தச் சூழலில் தனது அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு தன் ரெஸ்யூமைவை அனுப்பியுள்ளார். நண்பர் ஒருவரின் ரெஃபரன்ஸ் கைகொடுக்கவே, இப்போது ரூ. 58 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை கிடைத்துவிட்டது. அந்த சந்தோஷமான விஷயத்தை நோட்டீஸ் பீரியட் சிக்கல் சீரழித்துவிட்டது.

இதுபற்றி அவர் கூறும்போது, "நோட்டீஸ் பீரியட் காலம் என்பது 40 முதல் 60 நாள்வரை இருக்கும். நிறுவனத்தை விட்டு விலகுவதற்கு முன்பாக நாமிருந்த புராஜக்ட்டில் வேறு ஒருவரை அமர்த்துவார்கள். அந்த நபருக்கு புராஜக்ட் குறித்த தொழில்நுட்ப மற்றும் அணுகுமுறை ரீதியான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதர்கு பேர் KT என்பார்கள், அதாவது Knowledge Transfer. ஆனால், இந்தப் பணியின்போது ஏகப்பட்ட சிக்கல் வரும்.

நாம் பயிற்சியளிக்க வேண்டிய நபர் புதியவர் என்றால், நோட்டீஸ் பீரியட் உள்ள 40 நாட்களில் புராஜக்ட்டைப் பற்றி அவரிடம் முழுமையாக விளக்குவது என்பது உடுக்கைக்குள் உலக்கையை நுழைக்கிற கதையாகிவிடும். நாம் கற்றுத் தருகிற விஷயம் சம்பந்தமாக புதிய நபரை பரிசோதிக்கும் விதமாக நமக்கே தெரியாமல் மேனேஜர் டெஸ்ட் வைப்பார்.

அதில், அந்த நபர் சரியாகச் செய்யாவிட்டால், சொல்லிக்கொடுத்த ஆள் பலியாகிவிடுவார். ‘நோட்டீஸ் பீரியட் என்பதால் நீங்கள் சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை. இன்னும் 20 நாட்கள் இங்கு இருக்க வேண்டும்' என்று மெயில் அனுப்பி விடுவார்கள்.

இதனால் சொன்ன தேதியில் புதிய நிறுவனத்திலும் சேர முடியாமல் போகும். இதனால் புதிய நிறுவனம் நம் மீது கோபமாகி விடுவார்கள். அங்கே வேலை கிடைத்தாலும், முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடும். அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், 20 பேரை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றால் ஒரு எம்.என்.சி. நிறுவனம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம்வரை செலவு செய்யும்.

அப்படி 20 பேரைத் தேர்வு செய்து முடித்ததும், சான்றிதழ் சரிபார்ப்பு, பின்புல சோதனை போன்ற விஷயங்களை அறிய, 20 பேரையும் ஒரே நாளில் வரச் சொல்வார்கள். அன்றைய தினம் நாம் அங்கு இல்லாவிட்டால், கிடைத்த வேலை இல்லாமல் போகிற சூழல் ஏற்படும். ஆனால், இது பற்றியெல்லாம், நிகழ்காலத்தில் நாம் பணி செய்கிற நிறுவனத்தார் கண்டுகொள்ள மாட்டார்கள். இதனால் கிடைத்த வாய்ப்பை இழந்தவர்கள் பலர். இப்படியொரு நிலை எனக்கு ஏற்பட்டு நூலிழையில் தப்பிப் பிழைத்தேன்" என்கிறார் அவர்.

இதுபற்றி ஐ.டி. ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சீதாராமன் கூறும்போது, "நோட்டீஸ் பீரியடில் இப்படி இழுத்த‌டித்து நோகடிக்கச் செய்வதற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. ஊழியர் தான் பணியாற்றிய காலத்தில் திறமை மிக்கவராக இருப்பார். அவரை நிறுவனம் இழக்க விரும்பாது. இனிமேல் எனது நிறுவனத்துக்கு உழைக்காத நீ, வேறொரு நிறுவனத்துக்கு உழைத்துக் கொட்டுவாயா என்கிற வன்மம்தான் இந்தப் பந்தாட்டத்துக்குக் காரணம்" என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in