

ஆழ்ந்த உறக்கத்துக்குப் பிறகு எழுந்து பல் தேய்த்து, அலுவலகத்துக்கான ஆடைகளை அணிந்து, ஐடி கார்டை மாட்டி, தேவையான கோப்புகளையும் மறக்காமல் பையில் எடுத்துக்கொண்டு, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் டிபன் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது இரவு மணி 1.
சாதாரணமாகக் காலையில் பணிக்குச் சென்று மாலையில் வீடு திரும்புபவர்களுக்கு வேண்டுமானால் இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் பல ஆயிரக்கணக்கான ஐ.டி. தொழிலாளர்களுக்கு இது மிக இயல்பான ஒன்று. ஐ.டி. பணியாளராக விரும்பும் யாரும் நைட் ஷிப்ட் வேலைக்குத் தயாராக இருந்தாக வேண்டும்.
பல ஐ.டி. நிறுவனங்களின் வணிகமே வெளிநாட்டு நிறுவனங் களோடுதான். அந்த நாடுகளின் நேரச் சுழற்சி என்னவோ அதே நேரத்துக்கு இந்தியாவில் பணியாற்றினால்தான் வாடிக்கையாளரைத் தக்கவைக்க முடியும். நல்ல சம்பளத்துக்காகவும், வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்கவும், இந்தச் சுழற்சியோடு போராடி உழைக்கிறார்கள் ஐ.டி. பணியாளர்கள்.
சென்னையில் இரவுப் பணிச் சூழலில் பணியாற்றும் பாரதி தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, “முதலில் நண்பர்களுடன், உறவினர்களுடன் நேரம் செலவிடுவது குறைந்தது. திருமணத்துக்குப் பின் நான் வீடு திரும்பும் நேரத்தில், எனது கணவர் ஷிப்டுக்குக் கிளம்பிவிடுகிறார். இப்போது நாங்கள் இருவரும் சந்தித்து நேரம் செலவிடுவதே கடினமாகிவிட்டது” என்கிறார்.
மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றும் எஸ்.கண்ணன், “இரவு நேரத்தில் பணியாற்ற வேண்டும் என்று தெரிந்துதான் பணிக்கு ஒப்புக்கொண்டேன். தூங்கும் நேரத்தை மட்டும்தான் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எனது வாழ்க்கையே தலைகீழானது போல் உள்ளது. குடும்பத்துடன் நான் சேர்ந்து சாப்பிட்டுப் பல நாட்களாகி விட்டன. இந்தப் பணிச்சூழல் மனதை அமைதியிழக்கச் செய்கிறது”என்கிறார்.
இரவுப் பணிகளுக்குச் செல்பவர்கள் அதற்கேற்ற விதத்தில் உடல் பழகுவதற்காகச் சில மாதங்கள் சிரமப்படுவார்கள். உடல் பழகிவிட்டால், வேலை சற்று எளிதாகும். அதே நேரத்தில், இரவுப் பணிகளால் ஏற்படும் மனச் சிக்கலையும் உறவுச் சிக்கலையும் அத்தனை எளிதில் தீர்த்துவிட முடியாது. இதன் காரணமாக ஐ.டி. நிறுவனப் பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போது முக்கிய ஐ.டி. நிறுவனங்கள் சில, இரவுப் பணிக்கான சலுகைகளை நிறுத்திவருகின்றன. ஓவர் டைம் ஊதியம் மறுக்கப்படுகிறது. இதனால் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
இரவுப் பணி முடித்து வீடு திரும்பிய ஐ.டி. பெண் பணியாளர் கொலையான சம்பவம் அனைவரும் அறிந்ததுதான். அது தொடர்பான விவரங்கள் வெளிவந்துள்ளன. பெண் பணியாளர்களை ‘டாக்ஸி’ (கேப்) மூலம் வீட்டில் விடுவதுதான் அந்த நிறுவனத்தின் வழக்கம். ஆனால், ஒருவர் தனக்கு டாக்ஸி வேண்டுமென்று முன்பே கோரியிருக்க வேண்டும். கணினி மூலம்தான் கோர முடியும். அவர் பதிவுசெய்ததில் ஒரு எண் தவறாகிவிட்டதால் ‘டாக்ஸி’ பதிவாகவில்லை. ‘டாக்ஸி’ வராததால் அந்தப் பெண் தனியே பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இயந்திரத்தனமான அணுகுமுறையின் விளைவு அந்த மரணம்.
இத்தகைய அணுகுமுறை பற்றி ஐ.டி. பணியாளர் ஜீவலட்சுமி, “எனது புராஜக்ட் மேனேஜர் வெளிநாட்டில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் இரவில் வீடு செல்வதற்கு கேப் வேண்டும் என அவருக்கு மெயில் அனுப்பி, அதற்கு அவர் ஒப்புக்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும். இந்த வழிமுறை சிக்கலானது என்பதாலேயே பேருந்திலோ, ஆட்டோவிலோ வீட்டுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது” என்கிறார்.
ஐ.டி. நிறுவனங்களின் பணிக் கலாசாரம் மேம்படாததுதான் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை என்கிறார் உளவியல் நிபுணர் அர்ச்சனா. “ஊழியர்களிடம் அவர்களின் சக்திக்கு மீறிய வேலைகளை ஒப்படைத்து அவற்றை விரைவில் முடிக்குமாறு விரட்டுகின்றனர். வாடிக்கையாளரின் அழைப்பு எந்த நேரத்தில் வரும் என்பதில்கூடத் தெளிவிருக்காது. அழைப்பு தாமதமானாலோ, குறித்த நேரத்தைக் கடந்தாலோ அதன் விளைவுகள் பணியாளர் களுக்குத்தான்.
இப்படி நடத்தப்படும் ஐ.டி. பணியாளர்கள் நெருக்கடிகளைச் சமாளிக்க இயலாதவர்களாக உள்ளனர். தங்களுக்கு அவசியமானவற்றைக்கூட கேட்டுப் பெறுவதில்லை. வேலை செய்யுமிடத்தின் சூழல் ஒழுங்குபடுத்தப்பட்டால், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படும். அது வேலைத் திறனில் வெளிப்படும்” என்றார்.