கரோனா காலம்: விளையாட்டை முடக்கிய கரோனா!

ப்ரீத்தி
ப்ரீத்தி
Updated on
2 min read

2

விளையாட்டையே தொழில்முறையாகச் செய்துவரும் இளைஞர்களுக்கு கரோனா ஊரடங்கு சோதனையான காலம்தான். இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் முதல் உள்ளூர் போட்டிகள்வரை அனைத்தும் கரோனாவின் தாக்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால் வீரர், வீராங்கனைகள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மைதானங்களில் பயிற்சி எடுக்கவேண்டிய இவர்கள், இப்போது எப்படி அதை மேற்கொள்கிறார்கள்?

சாலைகளில் பயிற்சி

விளையாட்டு துறையினரைப் பொறுத்தவரை தொடர் பயிற்சிகள்தாம் அவர்களுடைய வெற்றியைத் தீர்மானிக்கும். வெயில், மழை, இரவு, பகல் என நேரங்காலம் பார்க்காமல் முழுமூச்சுடன் பயிற்சியில் ஈடுபடுபவர்களே, வெற்றியை சுவைக்க முடியும். ஆனால், இந்த கரோனா காலம் விளையாட்டுத் துறையினரின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் பாதித்துள்ளது.

ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் 4 தங்கம், சீனாவில் உலகக் காவல் துறையினருக்கான தடகளப் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றவர் பிரமிளா. சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். தற்போது ஊரடங்கால் விளையாட்டு அரங்கம் மூடப்பட்டுள்ளதால் சாலைகளில் பயிற்சிகளைச் மேற்கொண்டுவருவதாகச் சொல்கிறார்.

“தடகள வீராங்கனையான என்னைப் போன்றவர்கள் உடற்கட்டைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். தற்போதுள்ள எடையைவிடச் சற்றுக் கூடினாலும் குறைந்தாலும் பிரச்சினைதான். ஊரடங்கால் பயிற்சி விட்டுப்போகக் கூடாது என்பதற்காகத் தற்போது சாலையில் பயிற்சி எடுத்துவருகிறேன். ஆனால், மைதானத்தில் முறையாக எடுக்கும் பயிற்சிதான் போட்டிகளில் கலந்துகொள்ளப் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் இவர்.

முதலிலிருந்து தொடங்கணும்

தடகளத் துறையினருக்கு ஓடிப் பயிற்சி செய்வதற்கு இடமில்லை என்றால், பளுதூக்குபவர்களுக்கோ வீட்டிலிருப்பதே பெரும் பிரச்சினைதான். உடற்கட்டைச் சிரத்தையுடன் பாதுகாக்கும் பளுதூக்குபவர்கள், ஊரடங்கால் பயிற்சிகளைச் செய்ய முடியாமல் உடல் எடை அதிகரிப்பதாகச் சொல்கிறார் மாநில அளவிலான பளுதூக்கும் வீராங்கனை ப்ரீத்தி. “பளுதூக்குவதுதான் என்னுடைய விளையாட்டே. ஆனால், ஊரடங்கால் வீட்டில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

40 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற நான், இனி 50 கிலோ எடைப் பிரிவில்தான் பங்கேற்க முடியும் என நினைக்கிறேன். பயிற்சி செய்யாமல் வீட்டிலிருப்பதே எடை கூடியுள்ளதற்குக் காரணம். வீட்டில் நடைஇயந்திரத்தில் மட்டுமே பயிற்சிசெய்கிறேன். வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியவில்லை. ஊரடங்கு முடிந்து பயிற்சிக்குச் செல்லும்போது மீண்டும் தொடக்க நிலையிலிருந்தே பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்” என்கிறார் ப்ரீத்தி.

தற்போது ஊரடங்குத் தளர்வால் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்போருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால் மாநில, தேசிய, ஆசியப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தயாராக இருந்த வீரர்கள் பயிற்சி செய்ய முடியாமல் உள்ளனர். இது குறித்துப் பேசிய பயிற்சியாளர் சாந்தி, “விளையாட்டு வீரர்களை ஊரடங்கு சோம்பேறிகளாக்கிவிட்டது. முன்பு அவர்களிடம் தொடர்ச்சியான செயல்பாடு இருக்கும். தற்போது ஊரடங்கால் அனைத்தும் தடைப்பட்டுள்ளன. பல தேசியப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தயாராக இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். நிலைமை சரியான பிறகு மீண்டும் வீரர்களுக்குப் பயிற்சிகொடுத்து அவர்களைத் தயார்படுத்துவது கடினம்” என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

கரோனாவால் ஒவ்வொருவருக்கும் எத்தனை விதமான பாதிப்புகள்?!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in