Published : 19 May 2020 08:43 am

Updated : 19 May 2020 08:43 am

 

Published : 19 May 2020 08:43 AM
Last Updated : 19 May 2020 08:43 AM

கரோனா காலம்: இளைஞர்களுக்கு எப்படிப் போகிறது ஊரடங்கு?

corona-period
பரத்

ரேணுகா

விடுமுறை நாட்களில்கூட வீட்டிலிருக்கவே விரும்பாத இளைஞர்களை கரோனா வைரஸ் தொற்று வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டிருக்கிறது. இதற்கு முன்புவரை எந்தத் தலைமுறையினரும் பார்த்திராத இந்த ஊரடங்கு, இந்தக் கால இளைஞர்களுக்குப் பெரும் சோர்வுதான். வழக்கமான விடுமுறை நாட்களில் மதிய சாப்பாட்டுக்குத் தலைகாட்டிவிட்டு, பெரும்பாலான நேரம் மைதானம், மால், தியேட்டர், அரட்டைக் கச்சேரி என்றே இளைஞர்கள் கழிப்பது வாடிக்கை. ஆனால், இந்த கரோனா ஊரடங்கில் இளைஞர்கள் விடுமுறையை எப்படிக் கழித்தார்கள், கழிக்கிறார்கள்?

எப்போதும் வீட்டிலேயே தங்க விரும்பாத இளைஞர்கள் பலர் கேரம், செஸ், சீட்டு என வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளில் மூழ்கவும் செய்தார்கள். பெரும்பாலான இளைஞர்கள் கைபேசி மூலம் ஃபேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் எனத் தங்களுடைய பொழுதைக் கழித்துவருகிறார்கள்.

இவற்றைத் தாண்டி வேறு எந்த வழியில் பொழுதைக் கழிக்கிறார்கள் என்பது குறித்துப் பேசிய சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அக்‌ஷயா, “கல்லூரி இருந்தபோது அவசரஅவசரமாகக் காலை 8 மணிக்கெல்லாம் வகுப்பில் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதால் பதற்றத்தோடு ஓடுவேன். தற்போது அந்தப் பதற்றம் இல்லை.

படிப்பைத் தவிர்த்து ஓவியம் வரைதல், மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்யும் பயிற்சி, ஆன்லைன் நடனப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டுவருகிறேன். கூடுதல் நேரம் ஒதுக்கி செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். வீட்டுக்குப் பக்கத்திலேயே அம்மாவுக்கு இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது என இந்த ஊரடங்கு மகிழ்ச்சியாகக் கடந்தது. உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கு நண்பர்களுடன் இணைந்து எங்களால் முடிந்த உதவியைச் சில நாட்கள் செய்தோம்” என்று மனநிறைவுடன் கூறுகிறார் அக்‌ஷயா.

பரத்

அதேபோல் சென்னையைச் சேர்ந்த இன்னொரு கல்லூரி மாணவரான பரத், இந்த கரோனா விடுமுறையில் சில நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். “நண்பர்களுடன் எப்போதும் ஜாலி அரட்டையில் இருப்பவன் நான். ஆனால், திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு நேரமே போகவில்லை. எவ்வளவு நேரம்தான் டிவியையும் செல்போனையும் பார்ப்பது? அதோடு நான் நடத்திவந்த சிலம்ப வகுப்பையும் நடத்தமுடியாமல் போய்விட்டது.

இதனால், குட்டிபோட்ட பூனையைப் போல வீட்டையே சுற்றி வந்தேன். பிறகு ஆன்லைன் மூலமாகச் சிலம்ப வகுப்பு எடுக்கும் யோசனை உதித்து, தற்போது இரண்டு வேளை சிலம்பம் வகுப்பு எடுத்துவருகிறேன். அதேபோல் குறுகியகால ஆன்லைன் வகுப்பு மூலம் இணைய வர்த்தகம் (E-Commerce) படித்துவருகிறேன். தற்போது குடும்பத்தினருடன் உரையாடும் நேரமும் அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் இந்த கரோனா ஊரடங்கு வெறுமையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், போகப் போக எல்லா நேரத்தையும் திட்டமிட்டுப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டேன்” என்கிறார் பரத்.

தம்மை முடக்கிப்போட்ட ஊரடங்கையும் புத்திசாலித் தனமாகக் கையாண்டு வாழ்வின் முடுக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறார்கள்.


கரோனா காலம்கரோனாCorona PeriodCorona VirusCoronaCovid19விடுமுறை நாட்கள்இளைஞர்கள்கேரம்செஸ்சீட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author