

கரோனா வைரஸ் பரவலும் அதன் விளைவான ‘கோவிட்19’ நோயும் உலக அளவில் லட்சக்கணக்கானவர்களைப் பாதித்திருக்கும் சூழலில் உலகம் இதுவரை கண்டிராத அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ‘கோவிட்19’ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. வைரஸ் அதிகமாகப் பரவியுள்ள வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை முறையான சோதனைகளுக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தி தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறது அரசு.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, தனிமைப்படுத்தப்படுவது போன்றவற்றுக்கு அஞ்சி இந்த நடைமுறையிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். கேரளத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் சிலர் இப்படித் தப்பித்து அதன் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்றைப் பரப்பியிருக்கிறார்கள்.
தடைபட்ட பயணம்
இந்த பீதியான சூழ்நிலையில் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள இரிட்டியைச் சேர்ந்த ஷாகிர் சுபான், வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகியிருக்கிறார். பயண ஆர்வலரான ஷாகிர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் உலக நாடுகள் பலவற்றுக்கும் பைக்கில் தனியாகப் பயணம்செய்து அந்தப் பயணங்களின்போது படம்பிடிக்கப்பட்ட காணொலிகளைத் தன்னுடைய ‘மல்லு டிராவலர்’ (Mallu Traveller) யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவார்.
இந்த அலைவரிசையைச் சுமார் ஏழு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒரு தனிமனிதரின் சாகசங்களை மட்டும் நம்பியிருக்கும் இந்த அலைவரிசைக்கு இவ்வளவு பின்தொடர்வோர் இருப்பதன் மூலம், இவரது காணொலிகளுக்கு இருக்கும் வரவேற்பைப் புரிந்துகொள்ளலாம்.
சில மாதங்களுக்குமுன் தனியாக உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தைத் தொடங்கினார் ஷாகிர். ஜனவரி 28 அன்று ஈரானை அடைந்தவர், பிப்ரவரி 16 வரை அங்கே தங்கியிருந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் ஈரானில் கரோனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவியது. ஈரான் எல்லைகள் பலவும் மூடப்பட்டன. அஸெர்பைஜானுக்குச் செல்லும் எல்லை மட்டும் மூடப்படாமல் இருந்தது. அங்கிருந்து அஸெர்பைஜானுக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஜார்ஜியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஈரானில் இவர் பயணித்த நாட்களில்தான் அங்கே கரோனா தீவிரமாகப் பரவியிருக்கிறது. இவர் தனது ஹெல்மெட், கிளவுஸ், ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்திருந்தாலும் இவர் ஈரானில் கடந்துசென்ற பகுதிகளில் அநேகருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பயணத்தைக் கைவிட்டு தன்னுடைய டிவிஎஸ் அபாச்சே ஆர்டிஆர் 200 பைக்கைச் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அஸெர்பைஜான் தலைநகர் பாகூவில் உள்ள தனது நண்பரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறார்.
அங்கு ஓர் அறையில் தனிமையில் இருந்தபோது நான்கு நாட்கள் கழித்துக் கடுமையான ஜலதோஷம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பாகூவில் மட்டும் ஐந்து பேருக்கு ‘கோவிட்19’ வந்திருப்பது உறுதியான தகவல் இவரை அடைந்தது. உடனடியாகத் தாய்நாடு திரும்ப முடிவெடுத்தார். அந்த அவசரத்திலும் அரிதான பொருட்களாகிவிட்ட முகக்கவசங்களையும் கிருமிநாசினிகளையும் வாங்கிக்கொண்டு மார்ச் 5 அன்று விமானத்தில் ஏறியவர் துபாய் வழியாக கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமானத்தில் சமயோசிதம்
துபாய் விமான நிலையத்தில் இடை நின்றபோது கூடுமானவரை மற்றவர்களிட மிருந்து விலகியே இருந்திருக்கிறார். கண்ணூரைச் சேர்ந்த பலர் இந்த வழியாகப் பயணிப்பவர்கள் என்பதால், தனது யூடியூப் அலைவரிசையைப் பார்ப்பவர்கள் யாரும் தன்னை அடையாளம் கண்டு அருகில் வந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.
அத்துடன் விமானத்தில் தன் அருகில் அமர்ந்திருந்தவர்களையும் தன் இருக்கைக்கு அருகில் வந்து சென்றவர்களையும் மொபைலில் ஒளிப்படம் எடுத்திருக்கிறார். தனக்கு ஒருவேளை கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானால் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சோதனை செய்ய உதவியாக இருக்கும் என்று சமயோசிதமாக இதைச் செய்திருக்கிறார்.
கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் தனது பயண விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸில் கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
மொபைல் போன், லேப்டாப், ஒளிப் படக்கருவி தவிர தான் சுமந்து சென்ற மற்ற பொருட்கள் அனைத்தையும் பாகூவிலேயே அப்புறப்படுத்திவிட்டார் ஷாகிர். அதோடு தன்னை வரவேற்க யாரும் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்றும் நேரடியாகத் தானே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளப் போவதாகவும் தன் குடும்பத்தினருக்குத் தெரிவித்துவிட்டார்.
கற்பிதங்கள் உடைந்தன
தன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் பலவற்றைக் காணொலிப் பதிவுசெய்து யூடியூப் அலைவரிசையில் வெளியிடும் வழக்கம் கொண்ட ஷாகிர் மருத்துவமனையில் இருந்த நாட்களிலும் அதைச் செய்திருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடி, இவர் வெளியிட்டிருக்கும் மலையாளக் காணொலிகள் கரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறித்த தேவையற்ற அச்சங்களை விலக்குகின்றன; அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து விளக்குகின்றன.
“நான் சேர்க்கப்பட்ட வார்டு மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு படுக்கைக்கும் இடையே பாதுகாப்பான இடைவெளி விடப்பட்டிருந்தது. பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் தங்களுக்குள் எந்த வகையிலும் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை” என்கிறார். அத்துடன் இவரது ரத்தம், உடல் திரவ மாதிரிகளை எடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மார்ச் 8 அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
30 வயதாகும் ஷாகிர் “கரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் கரோனா நம்மை எதுவும் செய்யாது” என்று முகக் கவசம் அணிந்தபடி அந்தக் காணொலியில் சொல்லும் வார்த்தைகள் அனைவருக்குமானவை. ஷாகிரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தானாக முன்வந்து மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்பட்டுத்திக்கொண்டதையும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா பாராட்டியிருக்கிறார்.
இந்த கரோனா அச்சுறுத்தல் முற்றிலும் நீங்கியபின் பாகூவுக்குச் சென்று தனது பைக் பயணத்தை மீண்டும் தொடங்க முடிவெடுத்திருக்கிறார் ஷாகிர்.
இணையச் சுட்டி: https://www.youtube.com/watch?v=pGqpoz56bS8