Published : 05 Nov 2019 01:06 PM
Last Updated : 05 Nov 2019 01:06 PM

காட்சிகள் உலா: கல்குவாரி மனிதர்களும் அசையும் ஓவியங்களும்

என். கௌரி

‘பெர்ச்’ (Perch) என்ற கலை அமைப்பின் சார்பில் ‘சிறகை விரி’ என்ற கண்காட்சி சமீபத்தில் சென்னை மாக்ஸ்முல்லர் பவனில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் நாடகம், ஓவியங்கள், ஒளிப்படங்கள், குறும்படம் உள்ளிட்ட ஏழு கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ‘சிறிகை விரி’ திட்டத்தின் கீழ், ஏழு கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் படைப்புகளை உருவாக்க ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கி இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது ‘பெர்ச்’ அமைப்பு. இந்தக் கண்காட்சியில், கலைஞர்கள் ப்ரேமா ரேவதி, வ. சரண்ராஜ், ஜெ. தக்‌ஷிணி, கே. பத்மப்ரியா, முத்துவேல், நவநீத், பகு ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

தன் சொந்த ஊரான மதுரைக் கரடிப்பட்டியில் இருக்கும் கல்குவாரியில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கையை ஒளிப்படங்கள், சிற்பங்கள், ஒலிகள் போன்ற கலைவடிவங்களில் உயிர்ப்புடன் பதிவுசெய்திருந்தார் ஓவியர் சரண்ராஜ். “இப்போது எங்கள் ஊர்க் கல்குவாரியில் நிறைய பேர் பணியாற்றவில்லை.

ஒரு காலத்தில் 300-க்கு மேற்பட்டோரின் வாழ்வதாரமாக இருந்த அந்தக் கல்குவாரியில் இப்போது வெறும் 50 பேர்தான் பணியாற்றுகிறார்கள். எங்கள் ஊரில் அந்தக் கல்குவாரியில் கல் உடைத்தால்தான் அடுப்பு எரியும் என்ற நிலை இருந்தது. வேலை எதுவும் நடக்காத அமைதியான ஒரு நாளில் கல்குவாரிக்குச் சென்றிருந்தேன். அந்தக் கல்குவாரியிலும் எங்கள் ஊர் மக்களிடமும் உள்ள வாழ்க்கைமுறையைப் பதிவுசெய்ய வேண்டுமென்ற எண்ணம் அப்போது தான் வந்தது” என்று தன் படைப்புகள் உருவானதைப் பற்றிச் சொல்கிறார் சரண்ராஜ்.

இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த தக்‌ஷிணியின் படைப்புகள் தனித்துவமானவை. தான் வரைந்த ஓவியங்களில் இடம்பெற்றிருக்கும் வடிவங்களால் நகர முடிந்தால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையிலிருந்து தன் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் அவர். “எனது அரூப ஓவியங்களில் இடம்பெற்றிருக்கும் வடிவங்கள் நகர்ந்து சென்று ஒரு புதிய வடிவமாக மாறும்படி ஒரு கற்பனை எனக்கு வந்தது. அந்தக் கற்பனையில்தான் என் படைப்புகளை உருவாக்கியிருக்கிறேன்” என்று தன் அசையும் ஓவியங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் தக்‌ஷிணி.

‘பெண்களின் பயணங்கள்’ என்ற தலைப்பில் பத்மப்ரியாவின் ஒளிப்படங்கள், ஓவியங்கள், ‘ஒரு கொடும் அழகு’ என்ற ப்ரேமா ரேவதியின் நாடகம், நாடகக் கலைஞர் பகுவின் படைப்பும், முத்துவேல், நவநீத் ஆகியோரின் படைப்புகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ‘பெர்ச்’ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான ‘சிறகை விரி’ திட்டத்தைப் பற்றி

மேலும் தகவல்களுக்கு: www.facebook.com/Perch.Chennai/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x