

காதல் கொண்டாலே நிறைய லூஸுத் தனமான விஷயங்களைக் காதலர்கள் செய்வார்கள். டூரிஸ்ட் ஸ்பாட்களில் எங்கெங்கே இடம் கிடைக்கிறதோ அங்கங்கே தங்கள் பெயரைப் பொறித்துச் செல்வார்கள் நம்மூர் காதலர்கள். இதே போன்ற பழக்கம் மேலை நாடுகளிலும் அதிக அளவில் காணப்படுகிறது. லவ் லாக் எனப்படும் பழக்கம் அவற்றில் ஒன்று. அதாவது தங்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகத் தாங்கள் போகும் டூரிஸ்ட் ஸ்பாட்களில் ஒரு அழகான பூட்டைப் பூட்டிவிட்டு சாவியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் காதலர்கள். இது ஐரோப்பாவில் பத்தாண்டுகளுக்கு முன்னரே தொடங்கிய பழக்கமாம்.
இப்போது அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் க்ளிப் வாக் என்னும் இடத்துக்கு வரும் காதலர்கள் இதே போல் பூட்டைத் தொங்கவிட்டுச் செல்கிறார்கள். அங்குள்ள வேலிகளில் எல்லாம் இப்படி ஏராளமானோர் பூட்டைத் தொங்கவிடுவதால் நூற்றுக் கணக்கான பூட்டுகள் வேலிகளின் மேலே நிரம்பியுள்ளன. ஆகவே அவற்றை எல்லாம் வெட்டி எறிந்துவிடலாம் என்று நகர நிர்வாகம் முடிவுசெய்திருக்கிறதாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓரிரு ஜோடிகள் இப்படிப் பூட்டைத் தொங்கவிடும் பழக்கத்தைத் தொடங்கிவைத்துள்ளார்கள். ஆரம்பத்தில் நகர நிர்வாகம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விளையாட்டுத்தனமாகச் செய்கிறார்கள் என்று விட்டுவிட்டார்கள். ஆனால் இப்போது கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு நிறத்தைப் பூட்டுகளில் பூசிச் செல்லும் வழக்கம் தொடங்கியிருக்கிறது. ஆகவே இதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்ற முடிவுக்கு நகர நிர்வாகம் வந்திருக்கிறது.
தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பழக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் என நகர நிர்வாகம் எச்சரித்திருக்கிறது. ஆனால் காதல் உணர்வு பொங்கி எழும்போது அது கட்டுக்கடங்குமா? பூட்டு அதுவும் பளீரென்ற கலரில் கண்ணைச் சுண்டி இழுக்கும் பூட்டுகள் தொங்கவிடப்பட்டுவது நிற்கவேயில்லை. வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டில் இப்படியானதொரு பழக்கத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதால் நகர நிர்வாகத்துக்குப் பூட்டுகளை வெட்டி எறிவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையாம்.
காதலர்கள் தங்கள் அன்பை, பிணைப்பை உலகுக்கு உணர்த்த பூட்டுகளை தொங்கவிட்டுச் செல்லும் பழக்கம் உலகத்தின் பல பகுதிகளில் காணப்படுகிறது. பாரிஸில் உள்ள பாண்ட் டே ஆர்ட்ஸ் பாலத்திலும் இதைப் போல காதலர்கள் பூட்டைத் தொங்கவிட்டுச் செல்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற இந்த இடத்தில் சுமார் 40 டன் எடையில் பூட்டுகளை வெட்டி எறிந்துள்ளார்கள். இப்போது அந்த உலோகப் பாலத்தில் கைப்பிடிச் சுவரில் கம்பிகளுக்குப் பதிலாகக் கண்ணாடியைப் பொருத்தி இருக்கிறார்களாம்.
நியூயார்க்கின் புரூக்ளின் பாலத்திலும், ப்ளோரன்ஸ் நகரத்திலும் இதே போன்று ஏராளமான பூட்டுகளை நகர நிர்வாகம் வெட்டி எறிந்திருக்கிறது. நிர்வாகத்தால் பூட்டுகளை எளிதில் அறுத்து எறிந்துவிட முடிகிறது. ஆனால் இளங்காதலர்கள் மனதில் பொங்கி எழும் காதல் வேட்கையை அதிகாரத்தால் எதுவும் செய்துவிட முடியுமா?