Published : 05 Jun 2015 04:04 PM
Last Updated : 05 Jun 2015 04:04 PM

இசையால் மயக்கும் இளைஞர்

தளும்பாத நிறைகுடமாய் இருக்கிறார் தனது புதுமையான இசை ஆல்பத்தை மலேசியக் கலையரங்கில் இசைத்துவிட்டு வந்திருக்கும் ஜஸ்டின் கெனன்யா.

நெல்லையைச் சேர்ந்த கெனன்யாவின் குடும்பம் மூன்று தலைமுறை இசைப் பாரம்பரியம் கொண்டது. லண்டன் டிரினிடிக் இசைக் கல்லூரியில் பியானோ இசையில் டிஸ்டிங்ஷன் பெற்றவர் ஜஸ்டின் கெனன்யா. மேற்கத்திய இசையை இந்திய இசையுடன் இணைத்து அண்மையில் இவர் உருவாக்கியிருக்கும் இசை ஆல்பம் பிரபலமாகிவருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த இசைக் கலவையில் ஒரே ஒரு பாடலை மட்டும் வலைதளத்தில் வலம்வர விட்டார். அதற்கு 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து அதே பாணியில் பதினைந்து பாடல்களைக் கொண்ட இசை ஆல்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

அந்த முயற்சி கைகூடியபோது, ஏற்கெனவே, இவரது முந்தையப் பாடலைக் கேட்டிருந்த மலேசிய கலாச்சார அமைப்பான ‘பி.ஜே. லைவ் ஆர்ட்ஸ்’ கெனன்யாவைத் தொடர்புகொண்டது. பிறகு நடந்தவற்றைக் கெனன்யாவின் குரலிலேயே கேளுங்கள்.

“பிரபலமான இசைக் கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பு அது. அவர்கள் எனக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசியதே பெருமைக்குரிய விஷயம். இது யாருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு வாய்ப்பு. ‘உங்களது பாடலை நாங்கள் கேட்டோம். ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. எங்களோட இசை நிகழ்ச்சியில் உங்களது ஆல்பத்தை இசைக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். தட்டாமல் ஒத்துக்கொண்டேன். ஏப்ரல் 18-ம் தேதி மலேசிய அரங்கில் எங்களது இசை ஆல்பத்தை இசைத்தோம்.

தமிழர்கள், சீனர்கள், மலாய் மக்கள் எனக் கலவையான ரசிகர்களைக் கொண்ட அந்த அரங்கில் எங்களது அத்தனை பாடல்களுக்கும் அரங்கு நிறைந்த கரவொலி. நிகழ்ச்சி முடிந்ததும் பாராட்டிக் கைகுலுக்கியவர்கள், ‘வித்தியாசமான முயற்சி.. இதேபோல் இன்னும் நிறைய ஆல்பங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க் கிறோம்’ என்று சொன்னது எங்களது களைப்பை எல்லாம் போக்கிவிட்டது’’ என்று பூரிப்புடன் சொல்கிறார் ஜஸ்டின் கெனன்யா.

இவர் உருவாக்கி இருக்கும் ‘நியூ ஏஜ் மியூசிக்’ ஆல்பத்தில் பாடல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மெல்ல நனைந்து வருகின்றன. இயற்கையைப் போற்றுதல், அமைதியான உலகம் படைக்க அழைப்பு விடுத்தல் எனப் பாடல்களின் ’தீம்’களும் கெனன்யாவைப் பாராட்ட வைக்கின்றன.

தனக்குள்ளே நிறையத் திறமைகள் இருந்தாலும் அதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல், தற்போது நெல்லையில் தனியார் பண்பலை ஒன்றில் சவுண்டு இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார் கெனன்யா. இவருக்கெனத் தனியாக இசைக் குழு இல்லை. சின்னதாய் ஒரு ரெக்கார்டிங் தியேட்டர் மட்டும் வைத்திருக்கிறார். இசைக் கருவிகளைக் கையாளத் தெரிந்த நண்பர்கள்தான் இவரது இசை நிகழ்ச்சிகளுக்குத் தோள் கொடுக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் குழுவைக் கலைத்துவிட்டு அவரவரும் அவரவரது வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

“சென்னை போன்ற பெருநகரங்களில் இசை ஆல்பங்களைத் தருபவர்கள் இருக்கலாம். ஆனால், நெல்லை போன்ற ஒரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் இசை ஆல்பம் தந்திருப்பது இதுதான் முதல் முறை” என்று சொல்லும் ஜஸ்டின் கெனன்யா, “நம்மூரில் பெரும்பாலும் சினிமா பாடலுக்கு இசை அமைப்பவர்கள்தான் பிரபலமாகிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் சினிமா அல்லாத இசை ஆல்பங்களுக்குத்தான் மவுசு அதிகம். அப்படியொரு இடத்தைப் பெறுவதுதான் என் லட்சியம்” என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் ஜஸ்டின் கெனன்யா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x