

நான் முதுகலைப் பட்டப் படிப்பு முடித்துள்ளேன். எனக்கு அம்மா இல்லை. நான் மூன்று வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்துவந்தேன், இப்போதும் காதலிக்கிறேன். எங்களது சிந்தனை ஒன்றாகவே இருக்கும். எங்கள் காதலை அவள் வீட்டில் தெரிவித்தோம். அவர்கள் உன்னை மகன் மாதிரிதான் நினைத்துப் பழகினோம். இதுக்கு ஒத்துக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். சில காலம் பொறுமையாக இருந்தால் சம்மதம் வாங்கலாம் என்று இருந்தோம். ஆனால் ஒரு நாள் அவள் எனக்கு போன் செய்தாள். இந்தக் காதலை மறந்துவிடுங்கள், வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
இப்போதுவரை அவள் போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கிறது. என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவள் நினைவாக இருக்கிறது. அதனால் வேலையைச் சரியாகச் செய்யாததால் வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்கள். அவள் என்னை இன்னும் காதலிக்கிறாள். அவள் பெற்றோருக்காக என்னை விட்டு விலகி இருக்கிறாள். அவளை மறந்து வேறு ஒரு பெண்ணை ஏற்றுக்கொள்ள எனக்கு மனம் இல்லை. அந்தப் பெண்ணின் வாழ்க்கையை வீணடிக்க விருப்பம் இல்லை. நான் என்ன செய்ய? எனக்கு ஒரு வழி கூறுங்கள்.
வேலையைத் தொலைத்துவிடும் அளவுக்குக் காதலியின் நினைவுகளா? அடடா... இது சரியில்லையே! இருவரும் எவ்வளவு காலம் பொறுமையாக இருந்தீர்கள், அந்தக் காலகட்டத்தில் பேசிக்கொண்டிருந்தீர்களா என்பது தெளிவாக இல்லை. காதலை அவர் மறக்கச் சொன்னதன் காரணம் அவரது பெற்றோர் உறுதியாக மறுத்திருப்பார்கள் என்றும், போனை அணைத்து வைத்திருப்பதன் காரணம் தனது உண்மையான உணர்வுகள் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்கிற அவருடைய பயம் என்றும் நம்புகிறேன். ஆக, பெற்றொர் சம்மதமில்லாமல் உங்களை அவர் மணக்க மாட்டார் என்று தெரிந்துவிட்டது. அப்படி என்றால் அவருக்கு யார் முக்கியம் என்பதும் தெளிவாகி விட்டதல்லவா?
பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதலிப்பவர்களுக்கு ஒன்று அவர் சம்மதம் இல்லாமலேயே மணந்துகொள்ளும் துணிச்சல் வேண்டும்; அல்லது காதல் தோல்வியால் பாதிக்கப்படாமல் இருக்கும் மனப் பக்குவம் வேண்டும். உங்கள் காதலிக்கு அந்தத் துணிவு இல்லை; உங்களுக்கு அந்தப் பக்குவம் இல்லை. உங்கள் அன்புக்குத் தகுதி இல்லாதவரை எண்ணி எண்ணி எதிர்காலத்தைக் கோட்டைவிடும் உங்களைப் பார்த்துப் பரிதாபம் வரவில்லை, கவலை வருகிறது.
ஒரு தோல்வியை எதிர்கொள்ள முடியாத நீங்கள், எதிர்காலத்தில் வரப்போகும் மற்ற தோல்விகளை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? காதல் என்பது இருவருடைய மனம், உணர்வு சம்பந்தப்பட்டது; திருமணம் குடும்பம், பிற உறவுகள் சம்பந்தப் பட்டது. எல்லா காதல்களும் திருமணத்தில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. சில காலம் வாடி வதங்கிய பயிராக இருப்பீர்கள். மறுபடி பயிர் துளிர்க்கும், நம்புங்கள். வேறு ஒரு பெண் வருவார். அப்போது கவனமாகவே தேர்வு செய்வீர்கள்.
நான் வேலைக்குச் சென்றபோது எனது தற்போதைய மனைவியைச் சந்தித்தேன். எந்த விதமான ஆசையோ ஈர்ப்போ இல்லாம ரொம்ப சகஜமாகப் பழகினேன். அவங்க தன்னோட முதல் காதல் முறிவுக்குப் பிறகு என்னைக் காதலிக்க ஆரம்பிச்சாங்க. அது எனக்குத் தெரிந்த பிறகு நானும் சரின்னு சொன்னேன். அவங்க வீட்டில் சொன்னவுடனேயே கல்யாணத்தைப் பற்றி ஒரு மாசத்துக்குள்ளையே பேச ஆரம்பிட்டாங்க. ஆனா என் வீட்டில் ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான் என்றார்கள். கல்யாணம் நடந்தது. என் மனைவி முதலில் ஒரு மூணு மாசம்தான் என்கிட்ட பொசசிவா இருந்தாங்க. அதற்குப் பிறகு தொலைபேசியோடதான் கூடுதலான நேரம் கழித்தார். இப்பவும்கூட அவரோட பெண் நண்பர்களோடதான் தொலைபேசில பேசுறாங்க. அவங்க ரொம்ப அன்பா செல்லம் கொஞ்சிப் பேசுறது எனக்கு எரிச்சல உண்டாக்கும்.
எனக்கு அடிப்படையா கிடைக்க வேண்டிய பாசம் கிடைகாததால நான் எரிச்சல் அடைகிறேன். நான் இதைப் பற்றி அவங்ககிட்ட பேசியிருக்கேன். தினமும் சண்டை நடக்கும். இப்படி மூணு வருஷமாச்சு. இப்ப சமீபத்தில நடந்த சண்டையில் அவங்க என்னிடம் இருந்து விவாகரத்து பெறப்போவதாகச் சொன்னாங்க. ஆனா நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், ஒத்து வராவிட்டால் உடனே பிரிவோம் என்று. ஆனால் தன்னைத் திருத்திக்கொள்வதாகச் சொன்னார். நானும் ஏற்றுக்கொண்டேன். இந்த உறவில் மூன்று வருஷம் நான் எழுப்பிய கற்பனைக் கோபுரத்தை இப்ப உடைக்கப்போவதாகச் சொல்வது நியாயமா? என்ன செய்யலாம்?
திருமணத்தைப் பற்றிய கனவுக் கோட்டை தகர்ந்துபோனால் தாங்க முடியாதுதான். ஆனால் உங்கள் மனைவியினுடைய கோட்டையும் உங்களுடையதும் வேறு வேறாக இருந்தால், யாருடைய கனவு நியாயமானது என்று கொள்வது? ஒரு காதல் முறிந்த பின், அந்த வெற்றிடத்தை நிரப்ப, சிலரது மனம் இரண்டாவது காதலை அவசரமாகத் தேடும். அந்த அவசரத்தில் சீர்தூக்கிப் பார்க்கும் பக்குவம் இல்லாததால், தேர்வு சரியாக இருக்காது. இந்த வம்பில்தான் நீங்கள் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள்!
ஆரம்பத்திலேயே பொருத்தம் சரியில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டாலும், சரிசெய்துகொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் பயணத்தைத் தொடர்ந்து, இப்போது ஒரு முட்டுச் சந்தில் போய் இருவரும் நிற்கிறீர்கள். உங்கள் மனைவியின் நடத்தையைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகையில் அவர்கள் தோழிகளோடு 'ரொம்ப அன்பா, செல்லம் கொஞ்சி பேசுறது' நீண்ட நேரம் நடப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த வார்த்தைகளில் ஏதோ நெருடல் இருப்பதுபோலத் தோன்றுகிறது (என் ஊகம் தவறாகவும் இருக்கலாம்).
உங்களுக்கிடையே இருக்கும் தாம்பத்திய உறவைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை; விவாகரத்துவரை மனைவி போக வேண்டிய காரணமும் வலுவாகத் தெரியவில்லை. மேலும் பல விவரங்கள் இல்லாததால், எனக்குத் தெளிவான ஒரு வரைபடம் கிடைக்கவில்லை; அதனால் ஒரு உளவியல் ஆலோசகரைச் சந்தியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். கால தாமதம் செய்யச் செய்ய பிரச்சினையுடனேயே வாழப் பழகிவிடுவீர்கள். உடல், மன ரீதியான பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டேபோகும்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in