

நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவள். என் ஒரே மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான். மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன். அதிக மதிப்பெண்கள் பெறுகிறான். என்னுடைய மகனின் நடவடிக்கையில் இப்போது சில மாறுதல்கள் தெரிகின்றன. எப்போதும் தனி அறையிலேயே இருக்கிறான். யாருடனும் பழுகுவதில்லை. ஏதேச்சையாக அவனது அறையைச் சுத்தம் செய்யும்போது ஒரு பாலிதீன் கவரை எடுத்துப் பார்த்தேன்.
அதில் பெண்கள் அணியும் உள்ளாடைகள் டஜன் கணக்கில் இருந்தன. அவனிடம் இதை நான் கேட்க விரும்பவில்லை. இவையெல்லாம் அக்கம்பக்க வீடுகளில் காணாமல் போன பெண்களின் உள்ளாடைகள். நாகரிகம் என்ற அடிப்படையில் எந்த வஸ்துவையும் நான் அணிவதில்லை. எங்கள் குடும்பச் சூழ்நிலை அது.
எந்தப் பெண்ணையும் நேராகப் பார்ப்பதில் அவனுக்குத் தடுமாற்றம் உள்ளது. நானே பேசத் தயங்கும் இந்த விஷயத்தை எப்படிப் பேசி அவன் தடுமாற்றத்தைப் போக்க முடியும். அவனது இந்த நிலைக்கு என்ன காரணம். இப்போது நான் என்ன செய்ய?
அம்மா, உங்கள் மகனின் நடவடிக்கையை வைத்து அவர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டார், கெட்டுப் போய்விட்டாரென்று எண்ணாதீர்கள். வெளிப்படையாக இதை நீங்கள் பகிர்ந்துகொண்டது நல்லதே. சில ஆண்களுக்குப் பெண் சம்பந்தப்பட்ட பொருட்கள் (உள்ளாடைகள், கைக்குட்டை, பெண்ணின் காலணிகள் போன்றவை) பாலியல் ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தத் தேவையாக இருக்கின்றன (Fetishism). அந்தப் பொருளைத் தன் மீது தேய்த்து சுகம் பெறுவார்கள். வேறு சிலர் ரகசியமாகப் பெண்கள் அணியும் ஆடைகளைப் போட்டுப் பார்த்து இன்பம் அடைவார்கள் (Cross Dressers). இவர்கள் ஆணாக இருப்பது குறித்து சங்கடப்படுகிறார்கள்.
பெண்ணின் ஆடை அணியும்போது மன அழுத்தம் குறைகிறது. மேலே கூறப்பட்ட இரண்டுமே மன நோய் அல்ல. மாறுபட்ட நடத்தையுள்ள ஒரு பாலியல் குறைபாடு. உங்கள் மகனுக்கு உள்ள குறைபாடு எது என்கிற கணிப்பை மன நல மருத்துவரிடமே விட்டுவிடுகிறேன். ஆம். அவர் மனநல மருத்துவரைச் சந்தித்து, மருந்தும் ஆலோசனையும் பெற வேண்டும். ரகசியமான தனது செயல்களால் உங்கள் மகனுக்கு மனஅழுத்தமும், குற்ற உணர்வும் இருக்கலாம்.
யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூச்சமாக இருப்பதால் தனிமையில் வாழ்கிறார். மன நல வல்லுநர்களிடம் மனம் விட்டுப் பேசமுடியும். மனச் சுமை குறையும். மகனிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்காதீர்கள். அவர் நடத்தை வித்தியாசமாக இருப்பது அவருக்கு மன உளைச்சலைக் கொடுப்பதால், மனநல வல்லுநர்களின் உதவி அவருக்குத் தேவை என்று பக்குவமாகப் பேசிப் புரியவையுங்கள்.
இருபத்தைந்து வயதுப் பெண் நான். படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள்கூட எனக்குக் கனவு வராமல் இருந்ததே இல்லை. அருவருப்பான கனவுகள் வருகின்றன. பல நேரங்களில் தோற்றுப்போவதுபோல கனவுகளும் வருகின்றன. ஒரு விஷயத்தைச் செய்ய முடியாமல் போவதுபோல, கடைசி வரைக்கும் முயற்சி பண்ணினாலும் கடைசி நிமிடத்தில் கை நழுவிப் போவதுபோல கனவு வருகிறது.
ஏதோ ஒன்று என்னைத் துரத்துவதுபோன்ற கனவு வருகிறது. அத்தகைய கனவுகளின் தாக்கம் நாள் முழுக்க இருக்கிறது. பார்க்கிற, கேட்கிற சின்ன விஷயங்கள்கூடக் கனவுகளாக வருகின்றன. அழுத்தம் தாங்க முடியாமல் தூக்கத்திலேயே அழுதிருக்கிறேன். பாதி ராத்திரியில் தூங்க முடியாமல் போகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அருவருப்பான விஷயங்களைப் பார்க்க மாட்டேன். தைரியமாக, தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் எனும் ஆசை உடையவள் நான். ஆனால் ஏன் இது போன்ற கனவுகள் வருகின்றன? கனவுகள் இன்றித் தூங்கவே முடியாதா? கனவு இல்லாத நிம்மதியான தூக்கம் வேண்டும். எனக்கு உதவுங்கள்.
கனவுகளுக்கு அர்த்தங்கள் உள்ளன என்று அவை பற்றிய உளவியல் ரீதியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது ஆழ்மனதில் வரும் ஆசைகள், ஏமாற்றங்கள், கோபங்கள், எண்ணங்கள் போன்றவற்றின் வெளிப்பாடே அவை என்கிறார்கள். உதாரணமாக, தன்னை மேடைப் பேச்சாளராகக் கனவு காண்பவருக்குப் பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் எனும் ஆசை ஆழ்மனதில் இருக்கலாம்.
கனவில் கண்டவற்றை விழித்த பின் நினைவில் கொண்டுவந்தாலும், கனவைப் பற்றிய நம் ரிப்போர்ட்டாகத்தான் அது இருக்குமே ஒழிய, அதே அனுபவத்தை முழுமையாக விவரிக்க முடியாது! உங்கள் கனவுகளில் ஆழ்மனம் எதையோ சொல்ல வருகிறது. வெளிப்படையாகத் தென்படுவது அல்ல அதனுடைய பொருள்! விழித்தவுடன் மறக்காமல் கனவுகளை எழுதிக்கொள்ளுங்கள். உங்கள் கனவுகளின் அடிப்படையில் ஒரு பயம், பாதுகாப்பின்மை தெரிகிறது.
சிறு வயதிலிருந்து உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவற்றை நீங்கள் புரிந்துகொண்ட விதம், இன்றைய சூழலில் உங்கள் மனதில் உள்ள போராட்டங்கள், அழுத்தங்கள், உறவுகளையும், பிரச்சினைகளையும் நீங்கள் கையாளும் விதம் மற்றும் உங்கள் தன்னம்பிக்கை போன்ற பல விவரங்களையும் ஒரு உளவியல் ஆலோசகரிடமோ, மனநல மருத்துவரிடமோ சொல்லுங்கள்; கூடவே கனவுகளைப் பற்றி நீங்கள் எழுதிய பதிவேட்டையும் காட்டுங்கள். உங்களுக்குப் புரியாத சில விவரங்கள் அவர்களுக்குப் புரியலாம். என்னிடம் கேட்பதைவிட கனவு விளக்க வல்லுநரைக் (கண்டுபிடிக்க முடிந்தால்!) கேட்பது சிறந்தது! ஆனாலும் உங்களைப் பற்றிய மேற்கொண்ட விவரங்களைச் சேகரித்து நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள அவர் உதவினாலே கனவுகளின் தாக்கம் குறையலாம்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in