

26 வயது நிரம்பியவன் நான். கடந்த மூன்று ஆண்டுகளாக போர்னோ படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு உள்ளது. எப்படியும் வாரத்துக்கு ஒரு முறையாவது ஆபாசப் படங்களைப் பார்த்துவிடுகிறேன். அப்படிப் பார்ப்பதைத் தவிர்க்க முயன்றாலும் தனிமையை உணரும் நேரங்களில் மீண்டும் பார்க்கத் தூண்டப்படுகிறேன்.
அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறேன். ஆபாசப் படங்களுக்கு அடிமையானால் பாலியல் சிக்கல்கள் உண்டாகும் எனச் சமீபத்தில் படித்தேன். அது உண்மையா? சுய இன்பம் செய்துகொள்வது மற்றும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதிலிருந்து விடுபடுவது எப்படி?
நண்பரே, மிகவும் பயந்துபோயிருக்கிறீர்கள். 26 வயதில் ஒரு பெண்ணின் கற்பனை உருவம் / படம் / புடவை / துப்பட்டா வாசம் போதுமே உங்களுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ண! 66 வயதினர்தான் எழுச்சியை ஏற்படுத்தப் பாலியல் வலைத்தளங்களை நாடுவார்கள். நீங்கள் வாரம் ஒரு முறை பார்ப்பதால் (நீண்ட நேரங்களாக இல்லாதவரை) அடிமைத்தனத்தின் நுழைவாயிலில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. பழக்கம் அதிகரித்தால் அடிமையாகலாம்!
ஒரு பட்டனைத் தொட்டால் கிடைக்கும் இந்த வலைத்தளங்களுக்கு அடிமையாவதால் ஒருவரது மூளை, மனம், உடல், உறவுகள், குறிப்பாக தாம்பத்திய உறவு ஆகியவை பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ‘பலான’ வலைத்தளங்கள் இவர்களை மன எழுச்சியின் உச்சக்கட்டத்துக்கே அழைத்துச் செல்வதால் அந்த மட்டத்துக்குக் கீழ் எதுவுமே கிளர்ச்சியை ஏற்படுத்துவதில்லை.
டிஜிட்டல் உருவங்களைப் பார்த்து மகிழ்ந்தவர்களுக்கு, ஒரு நிஜமான பெண்ணின் நெருக்கம் உத்வேகத்தையோ பரவசத்தையோ அளிக்காது. ஒரே ஒரு பெண் என்பது அவர்களுக்குச் ‘சப்’பென்று போய்விடும். ரசிப்பதற்கு அவர்களுக்கு ‘வெரைட்டி’ தேவை! பாலியல் சேர்க்கையிலும் மனைவி மூலம் உச்சக்கட்டத்தை அடைவதைவிட சுய இன்பத்திலேயே ஆர்வம் காட்டுவார்கள். தன்னை ஏன் மணந்துகொண்டார் என்று மனைவிக்கு எரிச்சல் வரும்!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! அளவோடு நிறுத்த முடியவில்லை என்றால் மூளையை வேறு திசையில் திருப்புங்கள். விளையாட்டு, இசை, நடனம், வரைதல் போன்ற எதிலாவது செலுத்துங்கள். விரைவில் உங்களுக்கேற்ற ஒரு பெண்ணை மணந்துகொண்டு ஆரோக்கியமான இல்வாழ்க்கையில் ஈடுபட என் வாழ்த்துகள்.
எனக்கு 27 வயதாகிறது. ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒருவரைக் காதலித்துவருகிறேன். நாங்கள் காதலிப்பது எங்களுடைய இரு வீட்டாருக்கும் தெரியும். நானும் என் காதலனும் ஐடி துறையில் வேலைபார்க்கிறோம். சமமான சம்பளம் வாங்குகிறோம். அவருக்கும் 27 வயதுதான். ஆனால் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எங்கள் காதலை மறுக்கிறார்கள். சொந்தக்காரர்களின் பேச்சுக்குப் பயந்து என் சாதியைச் சேர்ந்த ஒருவரைத்தான் நான் மணந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். இந்தப் பிரச்சினையால் கடந்த ஐந்து வருடங்களாக என் குடும்பத்தாருடன் நான் சரிவரப் பேசுவதே இல்லை.
அவர்கள் மனம் மாறும் எனக் காத்திருக்கிறேன். என்னுடைய காதலனோ கோழையாக இருக்கிறார். இரு வீட்டாரும் முழு மனதுடன் சம்மதம் தந்தால் மட்டுமே கல்யாணம் என்கிறார். சில சமயம், “உன் பெற்றோரின் விருப்பப்படியே திருமணம் செய்துகொள்” என்கிறார். என் காதலன் எந்த முயற்சியும் எடுக்காததால் குழப்பத்தில் இருக்கிறேன். என் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளவா? வேறொருவரை மணந்துகொள்ளும் பட்சத்தில் என் கடந்த காலக் காதலைப் பற்றி அவரிடம் சொல்வதா அல்லது மறைப்பதா? மறைத்துவிட்டு மகிழ்ச்சியாக வாழ முடியுமா? அல்லது எல்லாத் தடைகளையும் கடந்து என் காதலனை மணந்துகொள்ளவா?
காற்றுப் புகாத இடத்தில்கூடச் சாதி புகுந்துவிடும். இப்போது உங்களுக்கு ஒரு கதவுதான் திறந்திருக்கிறது - பெற்றோர் தேர்ந்தெடுப்பவரை மணப்பது. தைரியம் இல்லாத காதலர் காதலைத் தியாகம் செய்துவிட்டு, உங்களுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டார்! எதையோ பெரிதாக இழந்துவிட்டதாக நீங்கள் வருந்த வேண்டாம். அரைகுறை மனதோடு வேறு ஒருவரை மணக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் வருங்காலக் கணவரிடம் உங்கள் கடந்தகாலக் கதையைச் சொல்லலாமா என்கிற கேள்விக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும் தோழியே? காதலருடன் ‘எதுவரை’ போயிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. வருங்காலக் கணவர் நீங்கள் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வார் என்பதும் தெரியாது. உளவியல் ஆலோசனையில் என் அனுபவத்தில் இந்த விஷயத்தில் இரண்டு விதமான எதிர்வினைகள் வருவதை அறிந்திருக்கிறேன்.
சில ஆண்கள் தகவலைக் கேட்டுக்கொண்டு மேலும் துளைக்காமல் எனக்கும் ஒரு ‘பாஸ்ட்’ இருக்கிறது என்று சமப்படுத்திப் பேசிவிட்டு, பின் அந்த விஷயத்தை இழுக்கவே மாட்டார்கள். வேறு சிலர் உண்மையைக் கறக்க அனுகூலமாகப் பேசி எல்லாம் தெரிந்தபின் குத்திக் காட்டிப் பேசிப் பேசி இருவர் வாழ்க்கையையும் நரகமாக்கிவிடுகிறார்கள். உங்கள் வருங்காலக் கணவர் எந்த ரகமோ, யாரால் ஜோஸ்யம் சொல்ல முடியும்? முதலில் காதலர் நினைவை விட்டொழியுங்கள். பிறகு வருங்காலக் கணவரை விரும்பத் தொடங்குங்கள். தானாகவே காதல் மலரும்.
காதலிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை: பெற்றோரைக் கணிப்பது மிகவும் கடினம். முதலில் விறைப்பாக மறுத்துவிட்டு மணமான பின் ஏற்றுக்கொள்ளும் பெற்றோர், ஜன்மத்துக்கும் ஒதுக்கிவைக்கும் பெற்றோர், சாதிக்குப் பயந்து திருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் எனப் பல வகைகள் உண்டு. ஆகவே காதலிக்கும்போதே எல்லாச் சாத்தியக் கூறுகளைப் பற்றியும் அலசுங்கள் (பேச்சில் ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ மட்டும் போதாது). அப்போதுதான் நிலைமையினுடைய தீவிரம் புரியும்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in