

1. நான் எம்.பி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறையில் பணிபுரிகிறேன். எனக்கு இரண்டு சகோதரிகள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சகோதரர்கள் இல்லை. எனக்கு ஒரு அண்ணன் இருந்திருக்கக் கூடாதா என்னும் ஏக்கம் எனக்கு உண்டு. அலுவலகத்தில் என்னைவிடப் பெரியவர்களோடு பழகும்போது அவர்களை அண்ணனாக நினைத்துப் பழகுகிறேன். பல சமயம் இதுபோன்ற உறவில் விரிசல் விழுந்துவிடுகிறது.
எனவே யாரிடமும் உணர்வுபூர்வமாக நெருங்க வேண்டாம் என முடிவுசெய்துகொண்டேன். என்றாலும் அதன் பிறகும் என் பணியிடங்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் கிடைத்தார்கள். அவர்களிடம் நான் அன்பாகப் பழகினேன். அவர்கள் மாற்றலாகி வெவ்வேறு ஊர்களுக்குப் போனார்கள். நாங்கள் தினமும் கான்ஃபரன்ஸ் அழைப்பில் பேசிக்கொள்வோம். அவர்கள் ஊருக்கு வந்தபோது அவர்களை என் வீட்டுக்கு அழைத்தேன்.
அவர்களில் ஒருவன் மட்டுமே வந்தான். அன்றிரவு தூங்கும்போது நான் அவனிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டேன். எல்லை மீறி நடந்துகொண்டேன். நடந்தது பற்றி எனக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டது. அவன் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவன் கிளம்பிப் போய்விட்டான். போன் செய்தாலும் எடுக்கவில்லை. மன்னிப்புக் கேட்க வாய்ப்பே தரவில்லை.
இந்தச் சம்பவம் மற்ற நண்பர்களுக்கும் தெரிந்துவிட்டது. அவர்களில் இருவர் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். ஒரே ஒரு நண்பன் மட்டும் என்னிடம் பழையபடி பழகிவந்தான். அவன் நட்பை இழக்கக் கூடாது என்று நான் மிகவும் போராடினேன். நான் நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. நண்பனின் கடன்களைக்கூட அடைத்தேன். என்னுடைய பழைய நண்பர்கள் என்னிடம் மீண்டும் பேசவே இல்லை. எனக்கு ஆறுதலாக இருந்தவனும் ஒரு கட்டத்தில் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டான். குற்ற உணர்வும் கோபமும் வேதனையும் என்னை வாட்டுகின்றன. தனிமைப்பட்டு நிற்கிறேன். நான் என்ன செய்வது?
நண்பரே மிகவும் குழம்பிப் போயிருக்கிறீகள்-விவரங்களைத் தெளிவாகக் கூடச் சொல்ல முடியாத அளவுக்கு! கோபத்தையும், குற்ற உணர்வையும் வளர்க்கிறீர்கள். கோபம், நியாயமானதாக இருந்தாலும், உங்களை அழித்துவிடும்; யார்மீது கோபமோ, அவர்களை ஒன்றும் செய்யாது! பலரும் நட்பை 'பேப்பர் கப்ஸ்' மாதிரிதான் உபயோகிக்கிறார்கள்! அவரவர் நியாயங்கள் அவரவருக்கு!! அவர்களை மாற்றுவது உங்கள் வசத்தில் இல்லை என்று புரிந்துகொள்ளுங்கள்.
குற்ற உணர்வு ஏன்? உங்களுடைய பாலியல் நாட்டம் (Sexual orientation) பெரும்பாலான ஆண்களிலிருந்து வித்தியாசப்பட்டு ஓரினச் சேர்க்கையாகவோ (Homosexuality) ஈரினச் சேர்க்கையாகவோ (Bisexuality) இருக்கலாம் என்று (மேலும் சில தகவல்கள் கிடைக்காததால்) ஊகிக்கிறேன். ஒரு நண்பரை 'வேறு மாதிரி' அணுகி, நிராகரிக்கப்பட்டது (வெளிப்படையாகக் கூறப்பட்ட ஒரே சம்பவம்), குற்ற உணர்வு, அவமானம், கோபம், ஏமாற்றம் போன்ற பல எதிர்மறை உணர்வுகளைத் தூண்டிவிட்டதில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்.
பாலியல் நாட்டம் மாறுபட்டு இருப்பதையும் அதன் விளைவாக நீங்கள் எதிர்கொள்ளும் மனப் போராட்டங்களையும் புரிந்துகொள்வதால் இது தவறு அல்லது குற்றம் என்று என்போன்ற உளவியலாளர்கள் தீர்ப்பு சொல்வதில்லை. பலருக்கு எதிர்பாலினத்தார் மீது பாலினக் கவர்ச்சி வரும். சிலருக்குத் தன் பாலினத்தார்மீது மட்டும் வரும்; வேறு சிலருக்கு இரு பாலினத்தார் மீதும் வரும். இப்படித்தான் இவர்களுடைய பிறப்பு, இயல்பு. இதில் அவர்களது தவறு என்ன? நம் சமுதாயமும். சட்டமும் இதுமாதிரி உறவுக்கு அங்கீகாரம் கொடுக்காததால் குற்ற உணர்வு அதிகமாகும்; தான் படும் அவஸ்தையை இவர்கள் வெளியே சொல்லவும் முடிவதில்லை.
உங்களுக்கு யார் அல்லது எது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்களுடையதுதான். உங்கள் நிலையில் உள்ளவர்களுக்கென்று ஆதரவுக் குழுக்கள் உள்ளன; அதன் மூலம் தெளிவு பெற்றுத் தனிமையைத் தவிர்க்க முடியும். ஒரு உளவியல் ஆற்றாளரையும் சந்திக்கலாம். கடிதம் எழுதிய துணிச்சலுக்கு 'ஓ' போடத்தான் வேண்டும்.
2. நான் ஒரு பெண்ணை இரண்டு வருடங்களாகக் காதலித்துவந்தேன். அவளுக்கு என் மேல் உண்மையான அன்பு இருந்தது. ஆனால் இப்போது இல்லை. சமீப காலமாக என்னை ஒதுக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் என்னை வெறுத்துவிட்டாள். இப்போது அவள் இன்னொருவரைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். என்னால் அவளை விட்டு வெளியே வர முடியவில்லை. அவளிடம் ஏன் என்னைப் பிடிக்கவில்லை என்று கேட்டபோது “பிடிக்கவில்லை” என்று மட்டும் கூறிப் பேச்சை முடித்துவிட்டாள். என்னால் அத்தகைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போதெல்லாம் அதிகமாகப் புகைபிடிக்கிறேன்.
வேறு ஒரு பழக்கமும் வந்துவிட்டது.அவளை நினைத்து மிகவும் ஏங்குகிறேன். அவளுடன் இருந்த நாட்கள் நொடிக்கொரு முறை வந்து போகின்றன. அவள் என்னை வெறுத்ததற்கான காரணம் புரியவில்லை. அவள் என் அருகில் இருப்பதுபோலக் கற்பனை செய்துகொண்டு, நானும் அவளும் பேசுவதுபோலத் தனியாகப் பேசிக்கொள்கிறேன். கடந்த ஐந்து மாதங்களாகச் சரியாகச் சாப்பிட முடியவில்லை. தூக்கமும் இல்லை. தினமும் காலை 6.30 மணியளவில் அவளின் ஞாபகங்கள் வந்து எழுப்புகின்றன. என்னிடம் தினமும் ஒரு முறையாவது பேசு என்று கூறினேன்.
ஆனால் அவள், “எப்போது உன்னோடு பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போது நானாக போன் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டாள். இப்படியெல்லாம் அவளாகப் பேசவில்லை யாரோ சொல்லித் தருகிறார்கள் எனத் தோன்றுகிறது. அவள் என் வாழ்வில் மீண்டும் வர வேண்டும். ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் இப்போது காதலிக்கும் நபருக்கு நாங்கள் காதலர்கள் என்பது நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் ஏதோ பேசி அவளை மாற்றிவிட்டான். அவள் என்னிடம் மறுபடியும் வருவாளா என்று கூறுங்கள். எனக்கு உதவுங்கள்.
உங்கள் கருத்துப்படி மற்றொருவர் சொல்லி மனம் மாறிவிடும் காதலியாக இருந்தால் அவருக்காக நீங்கள் இப்படி உருக வேண்டுமா? அவரது மனதை யாரும் கலைக்கவில்லை; உங்களை ஒதுக்கி வேறு ஒருவரை நாடிப் போகும் அளவுக்கு உங்களிடம் ஏதோ அவருக்குப் பிடிக்கவில்லை.
காரணத்தைச் சொல்லியிருக்கலாம். சொல்லிவிட்டு விலகியிருந்தால் மட்டும் ஏற்றுக்கொண்டு அமைதியாக உட்கார்ந்துவிட முடியுமா என்ன? உங்களை அவருக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்துக்கொள்ள மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். அது கொடுக்கப்படவில்லையே!
அந்தரங்கங்கள் கலந்து, இடைவெளி நீங்கி நெருக்கத்தில் வளரும் உறவு காதல். முகத்திரை தேவையில்லை என்று நம்புவதால் விகார முகத்தைத் தயங்காமல் காட்டிவிடுவோம். அப்படி நடந்த ஏதோ நிகழ்வுகளால் காதலி விலக முற்பட்டாரோ என்னவோ! காதலருடன் அடிக்கடி பிரச்சினை வரும்போது, விலகிவிடுவதுதான் சரி என்று சிலர் தீர்மானிப்பார்கள் (உங்கள் காதலி மாதிரி); பாசத்தின் காரணமாக விலகவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் தவிப்பவர் சிலர் (உங்களை மாதிரி). அந்தப் பெண்ணின் வாழ்வில் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது.
அதில் உங்களுக்குப் பங்கு இல்லை! சட்டென்று 'ஸ்விட்ச் ஆஃப் செய்ய முடியாதுதான். அவரைப் பற்றி இனிய நினைவுகள் வரும்போதெல்லாம், அதை ஒதுக்கி, புண்பட்ட நிகழ்வுகளைப் பற்றிப் பலவந்தமாக நினையுங்கள். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் எனும் ரீதியில் அவரது நினைப்பே கசப்பாக வேண்டும். அப்போதுதான் அவர் மீண்டும் வந்தாலும் திருப்பிவிடுவீர்கள். நீங்களாக வேறு ஒரு உறவைத் தேடுவீர்கள். சும்மா இருந்தால்தான் நினைவுகள் வாட்டும். புகைக்கச் சொல்லும்; ‘வேறு ஒரு பழக்கமும்' வரும். ஏதாவது பகுதிநேர வேலையையும் எடுத்துக்கொள்ளுங்கள். பணமும் வரும். தூக்கமும் வரும்!
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in