

காதல் ஒரு அடிப்படைத் தகுதி என்னும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. ஆனால் காதல் என்பது என்ன? நினைத்து நினைத்து ஏங்குவது, மனமுருகிப் போவது, சிறகடித்துப் பறப்பது போன்ற உணர்வு கொள்வது, சந்திக்கும் நேரங்களில் சிலிர்ப்பில் இருப்பது... இவை போன்ற சிலவற்றை நாம் காதலுக்கான அடையாளங்கள் என்று வைத்திருக்கிறோம். இவை இருந்தால் போதும். உண்மையில் காதல் என்றால் என்ன என்பது முக்கியமே இல்லை.
வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்தும் அதன் அர்த்தமற்ற நிலையிலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்குக் காதலைப் பயன்படுத்திக்கொள்கிறோம். அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும், விடாமல் மணிக் கணக்கில் செல்போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். முடிந்தால் சினிமாவில் காட்டுவதைப் போல இரவு முழுவதும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கை பற்றிய சிந்தனையோ, புரிதலோ வேண்டாம். இதுதான் இன்றைய நிலை.
இந்த நிலை இளைய தலைமுறையினரின் மனங்களை அலைக்கழிக்கிறது. அவர்களைச் சிந்திக்க விடாமல் கவனத்தைத் திசை திருப்பிவிடுகிறது. இளைய தலைமுறையினர் சற்று விழித்துக்கொண்டால் இந்த நிலையிலிருந்து விடுபட வழி பிறக்கும். உண்மையான உறவு என்பது என்ன என்று அறிந்துகொள்வதற்கு அது வழிவகுக்கும்.
என் உயிரினும் மேலாக ஒருவரை நான் காதலிக்கிறேன். அவரிடம் என் காதலைச் சொன்னபோது தான் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் இருந்தாலும் என் மீது அளவு கடந்த அன்பு இருப்பதாகவும் சொன்னார். எங்கள் காதல் வளரத் தொடங்கியது. மிக நெருக்கமாகக் காதலைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால் எனக்கு முன்பு காதலித்து வந்த பெண்ணோடு திருமணம் நிச்சயம் செய்துகொண்டார். அப்போதும், அந்தப் பெண் மீது காதல் இல்லை என்னைத்தான் மனப்பூர்வமாக விரும்புவதாகச் சொன்னார். இதனால் நான் மனமுடைந்துபோனேன்.
அந்தச் சூழலில் கடந்த நான்கு வருடங்களாக என்னை மட்டுமே காதலித்துக்கொண்டிருக்கும் வேறொரு ஆண் மீண்டும் என்னைச் சந்தித்து என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். இவர் மேல் எழுந்த கோபத்தில் அவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டேன். இப்போது எனக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது. என் காதலன் அவர் நிச்சயம் செய்துகொண்ட பெண்ணோடு மிக இயல்பாக இருக்கிறார். ஆனால் எனக்கு நிச்சயமான ஆணோடு என்னால் சகஜமாகப் பழக முடியவில்லை. இதற்கிடையில் தான் அந்தப் பெண்ணை மணந்தாலும் என்னோடு உள்ள உறவு தொடரும் என்றார் என் காதலன். இப்படியாக எங்கள் காதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நான் செய்வது தவறு என்கிறது மனம். ஆனால் அவரைக் கண்டதும் நான் உருகிப் போய்விடுகிறேன். மிகவும் குழப்பமாக உள்ளது. எனக்கு உதவுங்கள்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மட்டுமே உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்கள் காதலர் என்று நீங்கள் சொல்லும் நபர் உங்களைத் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு தன் இஷ்டப்படி வளைத்துக்கொண்டிருக்கிறார். தனக்கு நிச்சயம் செய்திருக்கும் பெண்ணைவிட உங்களைத்தான் அவர் அதிகம் விரும்புகிறார் என்றால் உங்களை ஏன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது? இதை அவரிடம் கேட்டீர்களா? அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாலும் உங்கள் உறவு தொடரும் என்பதற்கு என்ன பொருள்? அப்படிப்பட்ட உங்கள் உறவுக்கான அங்கீகாரம் என்ன? நீங்கள் என்ன இரண்டாம் தரம் கொண்ட பொருளா?
உங்கள் மீது உங்களுக்குச் சற்றும் மதிப்போ பிரியமோ இல்லையா? உங்களை நீங்கள் சற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. உங்கள் மனத்தில் உங்களைப் பற்றியும் உங்கள் வாழ்க்கை பற்றியும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த நபர் உங்கள் வாழ்க்கையோடு சிறிதும் பொறுப்பின்றி விளையாடிக்கொண்டிருக்கிறார். அதற்கு நீங்கள் இடமளித்துக்கொண்டிருக்கிறீர்கள். இதை முதலில் நிறுத்துங்கள். அப்போது உங்களுக்கு உறவு என்பது என்ன என்று புரியத் தொடங்கும். உங்களைக் காதலிக்கும் அந்த மனிதரைத் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழத் தொடங்குங்கள்.
எனக்கு 25 வயதாகிறது. படித்து முடித்துவிட்டு நான்கு வருடங்களாக வீட்டிலேயேதான் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்னால் என் திருமணத்தை ஒரு காரணமும் இன்றி நானே நிறுத்திவிட்டேன். என்னைக் கல்யாணம் செய்துகொள்வதாய் இருந்த அந்த நபர் மீது தவறொன்றுமில்லை. என் மனக் குழப்பம்தான் காரணம். எதை எடுத்தாலும் எனக்குக் குழப்பமாக உள்ளது. நினைப்பது ஒன்று பேசுவது வேறொன்றாக இருக்கிறது. யாரிடமும் தெளிவாகப் பேச முடியவில்லை. என்னால் என் பெற்றோருக்கும் மனக் கவலை. சதாசர்வகாலமும் பதற்றமாகவே இருக்கிறேன்.
என் மன அழுத்தத்தை நானே குறைத்துக்கொள்ளக் கற்பனையான உலகில் வசிக்கிறேன். சினிமா கதாபாத்திரங்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து கனவுலகில் மிதக்கிறேன். நான் ஒரு சூப்பர் உமன் எனச் சொல்லிக்கொள்கிறேன். ஆனால் எதிர்மறையான எண்ணங்கள் அடிக்கடி எழுகின்றன. கைகள் எப்போதும் நடுங்குகின்றன. நான் எதைச் செய்தாலும் அது தவறு எனத் தோன்றுகிறது. இப்படி வெவ்வேறு எண்ணங்கள் அலை மோதுகின்றன. நான் தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாக மாறவேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஆழமான மன அழுத்தம் இருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு அளவில் மன அழுத்தம் என்பது வேதனை நிரம்பியதாக இருந்தாலும் அது மனமாற்றத்தையும் அக வளர்ச்சியையும் தூண்டும் ஒரு விஷயம். அந்த அளவில் அது நன்மை தரக்கூடியது என்று சொல்லலாம். உங்களை நீங்களே சூப்பர் உமன் என்று சொல்லிக்கொள்வது நல்ல விஷயம்தான். உங்களுக்குள் ஒரு சூப்பர் உமன் இருக்கிறாள் என்பதற்கு அது ஒரு அடையாளம். அவள் வெளியே வர வேண்டும்.
அதே நேரம் உங்கள் மனத்தில் உங்களைப் பற்றி மிகவும் தாழ்மையான ஒரு மன பிம்பம் இருக்கிறது என்பதும் தெரிகிறது. உங்களை நீங்கள் குறைவாக மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே ஒரு சுயவிமர்சனம் இருந்துகொண்டே இருக்கிறது. அது உங்களை வளரவிடாமல் தடுக்கிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் முழுமையான சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் வாழ்வதை அது கட்டுப்படுத்துகிறது.
நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் இரண்டு: ஒரு மன நல மருத்துவரைப் பாருங்கள். கூடவே உளவியல் ஆலோசகர் ஒருவரையும் சந்தியுங்கள். உங்கள் அக வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி:
இளமை புதுமை,
தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in