சென்னை பைக்தான் டாப்!

சென்னை பைக்தான் டாப்!

Published on

ஹார்லே டேவிட்சன் பைக் என்ற பெயரைக் கேட்டதும் பைக் பிரியர்களின் கண்கள் ஒளிரும், புருவம் உயரும். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த ஹார்லே டேவிட்சன் கம்பீரமாகவும், வசீகரமாகவும் காட்சியளிக்கும். உலகின் பழமை வாய்ந்த மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றான இந்த ஹார்லே டேவிட்சன் இளைஞர்கள் பலரின் கனவு பைக் எனச் சொல்லலாம். இதுவரை இரு சக்கர வாகனங்களின் உலகச் சந்தையை ஆட்சி செய்து வந்த ஹார்லே டேவிட்சன் பைக்கைச் சென்னையில் தயாரிக்கப்படும் ராயல் என்பீல்ட் பைக் வென்றுவிட்டது என்றால் நம்பமுடிகிறதா? 2014-ம் ஆண்டில் மட்டும் 3 லட்சம் ராயல் என்பீல்ட் பைக்குகள் உலக அளவில் விற்பனையாகியுள்ளன. ஆனால் ஹார்லே டேவிட்சன் பைக்குகள் வெறும் 2.67 லட்சம்தான் விற்பனையாகியுள்ளன. இது இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் ஒரு திருப்புமுனை எனச் சொல்லப்படுகிறது.

கனவா, நிஜமா?

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான ராயல் என்பீல்ட் சென்னையைச் சேர்ந்த நிறுவனம். 2014-ல் கண்ட மாபெரும் வளர்ச்சியால் பூரித்துப்போன அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார் லால் உலகப் புகழ் வாய்ந்த ஹார்லே டேவிட்சன் பைக்கை ராயல் என்பீல்ட் வெல்லும் கனவுகூட இதுவரை கண்டதில்லை என்கிறார். அடுத்த கட்டமாக ராயல் என்பீல்ட் பைக்கை மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் கொண்டு சேர்க்கும் குறிக்கோளுடன் செயல்படத் தொடங்கிவிட்டார் சித்தார் லால்.

வெற்றியின் ரகசியம்

கடந்த ஆண்டு மட்டும் ராயல் என்பீல்ட் பைக்கின் விற்பனை உலகளவில் 70 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே ஹார்லே டேவிட்சன் 3 சதவீத அதிக விற்பனை மட்டுமே கண்டுள்ளது. ஹார்லே டேவிட்சன் 700சிசி திறன் கொண்ட பைக், ஆனால் ராயல் என்பீல்டின் புதிய மாடலான காண்டினெண்டல் ஜிடி மோட்டார் மாடலின் திறனோ 535 சிசிதான். இருப்பினும் ஹார்லேவை, நம்ம ஊர் பைக்கான ராயல் தூக்கி சாப்பிட ஒரு முக்கியக் காரணம் உள்ளது. இந்தியச் சந்தையைப் பொறுத்தவரை ஹார்லே டேவிட்சனின் மிகச் சல்லிசான பைக்கின் விலை ரூ.5 லட்சம். ஆனால் ராயல் பைக்கின் அதிகபட்ச விலையே ரூ.2 லட்சம்தான்.

உலகச் சந்தையை வெல்ல இதைவிட வேறென்ன வேண்டும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in