

இன்றைய இளைஞர்களுக்குப் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது என்பது பெரியவர்களது புகார். ‘நாங்கள் எல்லாம் ஒரு காலத்துல ஒரு புத்தகம் வந்தா எவ்வளவு தூரம் வேணும்னாலும் போய் வாங்கிப் படிப்போம்’ என்று புலம்புகிறவர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட இதோ வந்துவிட்டார்கள் நம் இளைஞர்கள்.
யோசிக்க வைக்கும் புத்தகங்கள் பிடிக்கும்
எதையோ பரபரப்பாகத் தேடுவதைப் போன்றே பட படப்பாகப் பேசுகிறார் மூவிஜா.
“அதிகமா என்னை யோசிக்க வைக்கும் புத்தகங்களைத்தான் நான் விரும்பிப் படிப்பேன். அதிலும் வரலாறு சம்பந்தமான புத்தகங்கள்தான் மிகவும் பிடிக்கும்” என்று கூறும் அவர் ஸ்கூல் படித்தபோது கதைகளைத்தான் அதிகம் படித்தாராம்.
பிறகு எப்படி வரலாறு மீது ஆர்வம் என்று கேட்டதற்கு, “வரலாறு பக்கம் என்னைத் திருப்பியதும் ஒரு புத்தகம்தான். சிட்னி ஷெல்டன் எழுதிய ‘மேக் இட் ஃபேஸ்’ என்ற புத்தகம் சைக்கலாஜிக்கலா என்னை யோசிக்க வைத்தது. பிறகு வெறும் கற்பனைக் கதைகளின் மேல் எனக்கு நாட்டம் குறைந்து வரலாறு, சமூகம் சார்ந்து எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்தது. அப்படி நான் இப்போது அதிகம் விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள் சிட்னி ஷெல்டன், டான் பிரவுன், பேட்ரீஷியா கார்ன்வெல், ஜேம்ஸ் பாட்டர்சன், ஆகியோரை அதிகம் படிக்கிறேன். இந்திய எழுத்தாளர்களான ஜெய மிஸ்ரா, அபூர்வா புரோஹித் போன்றோரின் புத்தகங்களும் பிடிக்கும். இவர்களுடைய புத்தகங்கள் வெளியான உடனே வாங்கிப் படித்துவிடுவேன்” என்றார்.
ஆங்கில எழுத்தாளர்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ள இவருக்கு மின் புத்தகங்கள் என்றாலே சுத்தமா பிடிக்காதாம் “எனக்கு மின் புத்தகங்கள் மீது அந்த அளவு ஆர்வம் இல்லை. படிக்கும்போது ஒரு புத்தகம் படிக்கும் உணர்வே இருக்காது போகிற போக்கில் எதையோ படித்த உணர்வுதான் இருக்கும். இப்போது ஆன்லைனில் எல்லாப் புத்தகங்களும் கிடைக்கின்றன. எனவே நாம் புத்தகங்களைத் தேடி அலைய வேண்டிய வேலையும் கிடையாது. புத்தகம் வீடு தேடி வந்துவிடும்” என்று அடைமழை கொட்டுவது போல மூச்சு விடாமல் பேசி முடித்தார்.
மின் புத்தகங்கள் வரப்பிரசாதம்
“எனக்கு மின் புத்தகங்கள் என்பது ஒரு வரப்பிரசாதம் போன்றது” என்று கட்டை விரலை உயர்த்துகிறார் ஷீபா. “600க்கு மேல் மின் புத்தகங்களின் கலெக்ஷன்ஸ் வைத்திருக்கிறேன். அவை எல்லாம் புத்தக வடிவில் இருந்திருந்தால் வீட்டில் எங்கே வைத்துப் பராமரிப்பது என்ற கவலைதான் எனக்கு அதிகமாக இருந்திருக்கும்.
இவற்றை நண்பர்களுக்கும் பகிர்வேன். அய்யோ, போன புத்தகம் திரும்பி வருமா என்ற ஏக்கமும் இருப்பதில்லை” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். இவர் ரொமான்ஸ், அட்வென்சர் போன்ற கதைகளைத் தான் விரும்பிப் படிப்பாராம்.
திருடிப் படிப்பதில் தனி சுகம்
பார்க்கும் போதே கையில் மாக்ஸிம் கார்க்கி எழுதிய “தூக்கு மேடைக் குறிப்புகள்” என்ற புத்தகத்தோடு நிற்கிறார் சாய் தர்ஷன். இந்தப் புத்தகத்தை எங்கே வாங்குனீர்கள் என்று கேட்டால் “எனக்குப் புத்தகம் வாங்கும் பழக்கமே கிடையாது” என்று குபீரென ஒரு போடு போட்டார். “நான் படிக்கும் புக்ஸ் எல்லாமே நண்பர்களிடம் இருந்து திருடியதுதான்” என்று ஷாக்குக்கு மேல் ஷாக் கொடுக்கிறார். எப்படித் திருடுவீர்கள் என்று கேட்டால் “ஏன் நீங்களும் முயற்சி செய்யப் போறீங்களா?” என்று பதிலடி கொடுக்கிறார்.
அவர் நண்பர்கள் அனைவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறதாம். அவர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது மரியாதைக்கு ஒரு புத்தகத்தை மட்டும் காட்டி இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவர்கள் ‘அசால்டாக’ இருக்கும் நேரத்தில் சாய் தனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் பையில் போட்டுக்கொள்வாராம்.
வாழ்க்கை வரலாறு படிப்பது மிகவும் பிடித்த விஷயம் என்கிறார் இந்தப் புத்தகப் படையெடுப்பாளர். மின் புத்தகங்கள் மீது துளியும் ஆர்வம் இல்லையாம், காரணம் “எல்லாரும் மின் புத்தகங்கள் பக்கம் திரும்பி விட்டால் பிறகு நான் எப்படிப் புத்தகம் திருடிப் படிப்பது?” என்கிறார்.
புத்தக வாசனை பர்ஃப்யூமிலும் கிடைக்காது
பேச்சில் ஒரு தெளிவு, பார்க்கும் விஷயங்கள் அத்தனையிலும் ஒரு தெளிவு என்று தெளிவுத் திலகமாகப் பேசுகிறார் தனசேகர். “எனக்கு டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆசை ஆனால் நான் படங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்ட விஷயங்களைவிடப் புத்தகங்களை படித்து கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் அதிகம்.
புத்தக வாசனை என்பது எந்த பர்ஃப்யூமிலும் கிடைக்காது. எங்கு போனாலும் கையில் புத்தகம் எடுத்துச் சென்றுவிடுவேன். தூங்கும்போதுகூட என் பக்கத்தில் புத்தகம் இருக்கும்” என்று நம்மைப் பேச விடாமல் பேசி முடிக்கிறார். இவருக்கு எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்து என்றால் கொள்ளப் பிரியமாம். அவருடைய எழுத்துகள் சந்தைக்கு வந்தால் உடனே வாங்கிவிடுவாராம் தற்போது எஸ்.ரா.வின் பண்டைய கால இந்தியா புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாராம்.
புத்தகங்கள் நம் எண்ணங்களோடும் உணர்வுகளோடும் நேரடியாக உரையாடுபவை என்பதை உணர்ந்து படிக்கும் இவர்கள், இளைஞர்கள் என்றாலே வேறு வழியின்றி பாடப்புத்தகங்களை மட்டும்தான் படிப்பார்கள் என்ற பொதுக் கருத்தைப் புரட்டிப் போடுகிறார்கள்.