

ஒரு சொல்லுக்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள நினைத்தாலோ, புதிய தகவல்களை அறியும் ஆர்வம் முளைத்தாலோ, நாம் செய்யும் முதல் வேலை கூகுள் சர்ச் என்ஜினை தேடுவதுதான். எதற்கெடுத்தாலும் கூகுளைக் குடைவது சகஜமாகிவிட்டது. கூகுளும் நம்முடைய அபத்தமான சந்தேகங்கள் முதல் அறிவார்த்தமான கேள்விகள்வரை அத்தனைக்கும் சளைக்காமல் பதில் தேடித் தருகிறது.
சகலகலா கூகுள்
தகவல்களின் என்சைக்ளோபீடியாவான கூகுள் ஒரு மனிதனாக இருந்தால் எப்படியிருக்கும்? அந்தக் கற்பனையின் விளைவுதான் “இஃப் கூகுள் வாஸ் அ கய்” (If Google was a Guy) குறும்படம். காலேஜ் ஹியூமர் டாட் காம் (collegehumor.com) என்ற இணையதளம் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் விதவிதமான குறும்படங்களை வெளியிட்டு வருகிறது. அவற்றில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான இணையவாசிகள் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த படம் “இஃப் கூகுள் வாஸ் அ கய்”. முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகம் அடைந்து அடுத்தடுத்து மேலும் இரண்டு பாகங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது காலேஜ் ஹியூமர் இணையதளம்.
முதல் சீன்
“நெக்ஸ்ட்” என்ற குரல் கேட்டதும் நீண்ட வரிசையில் நிற்கும் ஆட்களில் முதல் நபர் ஒரு அறைக்குள் நுழைகிறார். ஃபைல்கள், புத்தகங்கள், காகிதங்கள் நிறைந்த அந்த அறையில் உட்கார்ந்தவுடன் பதற்றமான
குரலில் “இன்றைக்கும் நாளைக்கும் நியூசிலாந்துதானா?” எனக் கேட்கிறார்.
எதிரில் இருக்கும் மேஜைக்கு மறு புறத்தில் வழுக்கைத் தலை, மூக்குக் கண்ணாடி, கழுத்தில் டை, கையில் வாட்ச் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நடுத்தர வயது ஆண் தன் வாட்ச்சைப் பார்த்துவிட்டு “ஆம்” என்கிறார். அவருக்கு முன்னால் “கூகுள் சர்ச் என்ஜின்” என்ற பெயர்ப் பலகை உள்ளது. அந்த மேஜை முழுவதும் காகிதக் குவியல் இருக்கிறது, ஆங்காங்கே காகிதங்கள் சிதறிக் கிடக்கின்றன.
அடுத்தடுத்து வரும் ஆட்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார்கள். ஒரே சொல்லை விதவிதமாக உச்சரிப்பவர்கள், ஒரு வார்த்தை சொன்ன அடுத்த நொடியே அதனோடு மற்றொரு வார்த்தையைச் சேர்ப்பவர்கள், புரியாத கசா முசா சொற்களை மீண்டும் மீண்டும் சொல்பவர்கள், ஒன்றுமே இல்லாமல் வெறும் கூகுள் டாட் காம் என்பவர் என கூகுளை டென்ஷன் பண்ணுகிறார்கள். ஒரு கட்டத்தில் கூகுள் தலையைப் பிய்த்துக்கொண்டு வெறுப்பின் உச்சத்தில் கத்திவிடுகிறார்.
பார்க்க செம்ம காமெடி கலாட்டாவாக இருக்கிறது. அட நாமும் இதே போல எக்கச்சக்கமான இம்சைகளை கூகுளுக்குக் கொடுத்திருக்கிறோமே என நினைத்து சிரிக்க >http://bit.ly/1zsz6RC