

சுற்றுலா போவதே குஷிதான், அதிலும் சாகச சுற்றுலாப் பயணம் போனால் எப்படி இருக்கும்? இயற்கையும் மனிதர்களும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதைக் கண்கூடாகப் பார்க்க ஒரு மலையோரக் கிராமத்துக்குச் சொல்வோம் வாருங்கள். ஊட்டியிலிருந்து முதுமலை சரணாலயத்துக்குச் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகிய கிராமம் மசினகுடி. இங்கு சென்றால் நீங்களும் காடும் தனித்தனியாக இருக்க முடியாது. இயற்கை உங்களை முழுவதுமாக வாரி அணைத்துத் தன் மடியில் வைத்துத் தாலாட்டும்.
யானை மேல சவாரி
மசினகுடியில் வாழும் மக்கள் யானைகள், மான்கள், மயில்கள், எண்ணற்ற பறவைகள் என இயற்கையோடு இயைந்து வாழ்கிறார்கள். அதிலும் யானைகள் முகாம் மற்றும் யானைச் சவாரி இந்தப் பகுதியின் தனிச் சிறப்பாகும். நூற்றுக் கணக்கான யானைகள் மசினகுடியில் வசிப்பதால் குட்டி யானைகள் குளித்து, விளையாடி, ஆட்டம்போடுவது, தண்ணீர் குடிப்பதற்காக யானைகள் தார்ச் சாலையை சகஜமாகக் கடந்து செல்வது, மெகா உணவுக் கவளங்களைச் சாப்பிடுவது என யானை வாழ்வின் பல அம்சங்களைப் பார்த்து ரசிக்கலாம்.
பயிற்சி அளிக்கப்பட்ட யானைகளில் காட்டைச் சுற்றிப்பார்க்க சொகுசு சவாரி மேற்கொள்ளலாம். யானை சவாரி தவிர வாகன சவாரியும் உண்டு. அப்படிக் காட்டுக்குள் செல்லும் போது புலி, சிறுத்தை, கரடி, மான்கள், கழுதைப்புலி போன்ற விலங்குகளை அருகில் பார்க்கக்கூடிய மயிர் கூச்சல் அனுபவங்களும் ஏற்படும்.
சுத்தமான நீர், ஊர்
ஊட்டிக்கு மிக அருகில் மசினகுடி இருந்தாலும் வணிகமயமாக்கப்பட்ட சுற்றுலா தலங்களைப் போல மாசடையாமல் இருக்கிறது. இந்த வனத்தின் வனப்பு குறையாமல் பாதுகாத்து வருவது இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்களே. மசினகுடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருப்பதும் இந்த மண்ணின் மைந்தர்களே. இங்கு வளமாகப் பாயும் மாயாறு சுவையான, சுத்தமான குடிநீரை அனைவருக்கும் அளிப்பதால், மினரல் வாட்டர் பாட்டில்களை யாரும் தூக்கிச் சுமக்கத் தேவையில்லை.
மர உச்சியில் தங்கலாம்
மரத்தாலான வீடு, மர உச்சியில் வீடு, பழங்குடியினர் குடிசை, காட்டுக்குள் வீடு, குடில், தனியார் தங்கும் விடுதி என விதவிதமான தங்கும் வசதிகள் உள்ளன. காட்டிற்குள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் விலங்குகளை துன்புறுத்தாத வகையில் இரவு நேரங்களில் மங்கலான ஒளி வீசும் விளக்குகள் மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுகின்றன.
அதே போல இரவு நேரங்களில் இங்கு சத்தம் எழுப்பக் கூடாது, வெளியே செல்வதும் ஆபத்து. இங்கு வீடுகள், விடுதிகள் என அனைத்து இருப்பிடங்களும் காட்டுக்கு நடுவே இருப்பதால் பெரும்பாலும் காட்டுப் பன்றி, காட்டு யானை ஆகியவை சர்வசாதாரணமாக அறைவரை வந்து போகும்.
பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் வழக்கமான உணவுவகைகளை வழங்கும் உணவகங்கள் இங்குள்ளன. அவ்வளவு ஏன் புரொஃபெஷ்னல் உடற்பயிற்சி மையங்கள் கூட இருக்கின்றன. சிறிய பலசரக்கு கடைகள், சோப், பேஸ்ட், மருந்து போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான சிறு அங்காடிகளும் உள்ளன. இயற்கை மற்றும் சாகசத்தில் விருப்பம் என்றால் உங்கள் வருகைக்கு மசினகுடி என்னும் வேறொரு உலகம் காத்திருக்கிறது!