Published : 21 Apr 2017 10:21 am

Updated : 20 Jun 2017 10:20 am

 

Published : 21 Apr 2017 10:21 AM
Last Updated : 20 Jun 2017 10:20 AM

விடுமுறையில் வடுவூருக்கு வாங்க...!

என்னைப் பற்றி சொல்லிக் கொள்ளப் பெரிதாக ஒன்றும் இல்லை. நான் பறவைகளை நேசிப்பவன். அதனால், கிடைக்கும் விடுமுறைகளில் எல்லாம் பறவைகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறேன். அவ்வளவே!

சென்னையில் வசிப்பவன் என்பதால், இந்த மாநகரத்துக்கு அருகில் உள்ள வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்களைப் பார்த்து முடித்துவிட்டதால் அடுத்து எங்கு செல்லலாம் என்ற யோசித்தேன். சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வடுவூர் பறவைகள் சரணாலயம், மனதில் நிழலாடியது. ஏற்கெனவே சேகரித்துவைத்த தகவல்களைக்கொண்டு தஞ்சாவூர் வழியாக வடுவூர் செல்வது சுலபம் என்று முடிவுசெய்தேன். ஒரு வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேட்டில் தஞ்சை பஸ்ஸைப் பிடித்தேன்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்குத் தஞ்சாவூரில் இறங்கினேன். இரவில் உறங்காமல் வேடிக்கை பார்த்துச் செல்ல வேண்டும், விக்கிரவாண்டி அருகில் இருக்கும் உணவகத்தில் காபி குடிக்க வேண்டும், கோலியனூர் கூட்ரோடைக் கடக்கும்போது குளிர் எவ்வளவு இருக்கிறது என்று ஜன்னலைத் திறந்து பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு சென்றதில், நினைத்தபடி குளிர் அளவை மட்டும் பார்க்க முடியவில்லை. காரணம், அந்த அளவுக்கு பஸ்ஸுக்கு உள்ளேயே குளிர் வாட்டியது.

வரத்துக் குறைவு

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்த விசாரணை அதிகாரியிடம் ‘வடுவூர் சரணாலயம்' என்று கேட்டால், ‘கோடியக்கரை சரணாலயமா? ' என்று என்னைத் திருப்பிக் கேட்டார். ‘இல்லை சார். வடுவூர் பறவைகள் சரணாலயம்' என்று அழுத்திச் சொன்னதில் ‘ஓ... அந்த ஏரியா?' என்றார். அதிலிருந்த ஒரு எள்ளல் என்னை யோசிக்க வைத்தது. ‘ஏழு மணிக்கு ஒரு டவுன் பஸ் வரும், அதில் போகலாம். இல்லன்னா, புதிய பேருந்து நிலையம் போய் மன்னார்குடி போகிற பஸ்ஸில் போகலாம்' என்று தகவல் சொன்னார்.

பேருந்து வந்தது. நடத்துநரிடம் இடத்தைத் தெளிவாகச் சொன்னதால் சரணாலயத்தின் நுழைவாயிலிலேயே இறக்கிவிட்டார். அங்கு நின்றிருந்த போலீஸ்காரர் ஒருவரிடம், சரணாலயம் எப்படி இருக்கு என்று விசாரித்தேன். “இந்தத் தடவை தண்ணீர் அதிகம் இல்லாததால், பறவைகள் அதிகம் வரவில்லை” என்றவர், அருகிலிருக்கும் பரந்த ஏரியைக் காண்பித்தார்.

அதிகம் நீர் இல்லாத ஏரியில் இருநோக்கியை (பைனாகுலர்) வைத்துப் பார்த்ததில் ஒரே ஒரு நத்தைகுத்தி நாரை, மூன்று பெரிய கொக்குகள், இரண்டு கறுப்பு வெள்ளை மீன்கொத்திகள் தென்பட்டன.

நாமக்கோழிகளும் தாழைக்கோழிகளும்

அது மிகப் பெரிய ஏரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், போதுமான நீர் இல்லாதது மட்டுமே பறவைகள் எண்ணிக்கை குறையக் காரணம். என்றாலும், இருக்கும் நீரில் எண்ணற்ற நீர்ப்பறவைகளைப் பார்க்க முடிந்து. அன்றைக்கு அங்கிருந்த எண்ணிக்கையில் வேடந்தாங்கலிலோ, பள்ளிக்கரணையிலோ நாமக்கோழியைப் பார்க்க முடியாது. ஏறக்குறைய நூறு இருக்கலாம். நீலத் தாழைக்கோழியும் அதிகமாகவே தென்பட்டது. இவை அனைத்தும் நீரில் உலாவிக் கொண்டிருந்தன.

சரணாலயத்தில் அதிக அளவில்

மக்கள் நடமாட்டம் இல்லை. இன்றுதான் இப்படியா என்று விசாரித்தால், வருடத்தில் பல நாட்கள் இப்படித்தான் சரணாலயம் காத்தாடுகிறது என்பதை அறிந்தேன். மிக அருமையான நடைபாதை, பறவைகளைப் பார்க்கக் கோபுரங்கள், அமர்ந்துகொள்ள நாற்காலிகள், சிமெண்ட் இருக்கைகள் என்று கச்சிதமாக அமைத்திருக்கிறார்கள். மற்ற சரணாலயங்களைப் போல உள்ளே செல்வதற்கும் கேமராவுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

மரங்கள் சூழ்ந்து

சூரியஒளி உள்ளே வராமல் இருப்பதால், சோர்வு இல்லாமல் சுற்றி வரலாம். மன்னார்குடி சாலையில் பறவைக் கோபுரம் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் மற்றொன்று. இதனால், மறுகரையில் அமைந்துள்ள நீர்ப் பறவைகளை எளிதாகப் பார்க்க முடியும்.

இலையின் பெயரில் ஒரு கோழி

மறுகரையிலிருந்த மன்னார்குடி சாலையில் நடந்து சரணாலயத்தின் நுழைவாயிலை அடைந்தேன். அங்கே பெயர்ப்பலகை இல்லை. இதனால் புதியவர்கள், இது ஒரு சரணாலயம் என்று தெரிந்துகொள்வது சிரமமே. பொறுமையாக நடந்து சென்று பறவைகளைக் குறிப்பெடுத்துக்கொண்டே வந்தேன். பக்கத்தில் குளத்துடன் கோயில் உள்ளதால் பச்சைக்கிளிகள் பறப்பதும், மரங்கள் நடுவில் சுற்றி வருவதும் என்று அவற்றின் குரலை வைத்து, அவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டே வந்தேன்.

பறவைகள் அனைத்தும் தத்தமது செயல்பாடுகளில் இருக்க, நான் என்னுடைய பணியில் இருந்தேன். புள்ளிப்புறா ஒன்று ஏரியின் நடுவில் இருக்கும் மரத்தில் அமர்ந்திருந்தது. மடையான் வழக்கம் போலத் தன்னுடையை வேலைகளைச் செய்து கொண்டிருந்தது. யார் கவனித்தால் என்ன என்ற மனநிலையில் இருக்கும் போலத் தெரிந்தது. ஒரே ஒரு உள்ளான் சுறுசுறுப்பாகத் தன் பணியில் ஈடுபட்டிருந்தது.

நான்கு இலைக்கோழிகள் சாவகாசமாக நடமாடிக் கொண்டிருந்தன. இதற்கு ஏன் இலைக்கோழி என்ற பெயர்? இவற்றின் கால்கள், விரல்கள் நீளமாக இருப்பதால், இவை இலைகள் மேல் எளிதாக நடந்து செல்ல முடியும். தமிழில் பெரும்பாலும் பறவைகளுக்கு அதன் செயல்பாடுகள், உருவ அமைப்பை வைத்தே பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

நடந்து கடந்த 2 நாட்கள்

இரண்டு மணி நேரத்துக்கு மேல் சுற்றியதில், சுமார் முப்பது பறவை வகைகளுக்கு மேல் பதிவு செய்ய முடிந்தது. ஏன் இந்தச் சரணாலயத்துக்கு யாரும் வருவதில்லை என்ற யோசனை மனதுக்குள் ஓடியது. தண்ணீர் இல்லை என்றாலும் நிறைய பறவைகள் இருக்கின்றனவே? சுலபமாகச் சென்று வர, எந்த நேரமும் தஞ்சையிலிருந்து மன்னார்குடிக்கு பஸ் உள்ளது. ஆனால் சுற்றிப் பார்க்க மனிதர்கள் மட்டும் இல்லை என்பது, இயற்கை மீது நமக்கு உள்ள ஆர்வக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டியது. உள்ளூர் மக்களுக்குக்கூட இந்தச் சரணாலயம் பற்றி தெரியவில்லை என்பதுதான் சோகம்.

பறவைகளைப் பார்த்து முடித்துவிட்டு, காலை பதினோரு மணியளவில் வடுவூர் பேருந்து நிலையத்தில் இருந்தேன். தஞ்சாவூர்ப் பயணம். கூட்டம் காரணமாக நின்றுகொண்டே வந்ததில், ஜன்னல் வழியாக வயல்வெளிகளில் பறந்து திரிந்த பறவைகளைப் பார்க்க முடிந்து.

அன்று மாலை, மறுநாள் முழுவதும் தஞ்சாவூரைச் சுற்றி வந்ததில் திவ்யா டீக்கடை, தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மகால் நூலகம், சரபோஜி அரண்மனை, தஞ்சாவூர் அழகைப் பற்றி நாற்பது நிமிட ஆவணப்படம், நடராஜா புதிய துணிக்கடையில் துணி, நிறைய தேநீர் என்று அந்த இரண்டு நாட்களை நடந்தே கடந்தேன். அடுத்து இனி எங்கே போகலாம்?

- கட்டுரையாளர், பறவை ஆர்வலர்
தொடர்புக்கு: lapwing2010@gmail.com


பறவைகள் ஆர்வலர்வேடந்தாங்கல்கரிக்கிலி சரணாலயம்பறவைகள் சரணாலயம்வடுவூர் பறவைகள் சரணாலயம்நத்தைகுத்தி நாரைமீன்கொத்திகள்நாமக்கோழிதாழைக்கோழி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author