

விடலைப் பருவப் பையனின் உருவமும் குரலும்தான் அவருடைய அடையாளம். உடையிலும் நடையிலும் நடனத்திலும் ஒருவித அலட்சியம். ஆனால், அவர் மேடை ஏறிப் பாடினால் இசை ரசிகர்கள் பித்துப்பிடித்து ‘ஜஸ்டின்…ஜஸ்டின்’ என முழங்குகிறார்கள். உலகெங்கிலும் இன்று அவருக்குப் பின்னால் கோடிக்கணக்கான இசை பக்தர்கள்.
பதின் பருவப் பெண்கள் இந்த இசை இளவரசனுக்கான அடிமை சாசனத்தை மானசீகமாக எழுதித் தந்துவிட்டார்கள். இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடருபவர்கள் மட்டும் 8 கோடிக்கும் மேல். ஒவ்வோர் இசைக் கச்சேரியிலும் அதிர்ஷ்டசாலி இசை ரசிகை ஒருவரை மேடை ஏற்றி அவருக்குப் பூங்கொத்துப் பரிசளித்துப் பாடுவது அவருடைய வழக்கம். கனடாவைச் சேர்ந்த இந்தக் கானக் குயிலுக்கு இன்று லட்சக்கணக்கான இந்திய இசை பிரேமிகள். அதுவே முதன்முறையாக இந்தியாவைத் தேடி சர்வதேச பாப் இசை நட்சத்திரமான ஜஸ்டின் பீபரை கடந்த வாரம் வரவழைத்தது. அப்போது, ‘பேபி’, ‘பாய் ஃபிரண்ட்’, ‘வாட் டூ யூ மீன்?’ என மடை திறந்த இசை பிரவாகமாகக் காதலை கொட்டித் தீர்த்தார் ஜஸ்டின்.
புகழின் உச்சம்
அற்புதமான பாடகர், அசத்தலான நடனக் கலைஞர், டிரம்ஸ், கிட்டார் என இசைக் கருவிகளையும் அநாயாசமாக வாசிப்பவர் இப்படிப் பல முகங்கள் கொண்ட பிரமாதமான இசைக் கலைஞராக இளம் இதயங்கள் அவரைக் கொண்டாடுகின்றன.
23 வயதான ஜஸ்டின் 12 வயதிலேயே அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பாடி, ‘பிறவி இசைக் கலைஞர்’ எனப் பாராட்டுப் பெற்றார். அதை அடுத்து அவருடைய தாய், யூ டியூபில் ஜஸ்டின் ஆடிப் பாடும் வீடியோவைப் பதிவிட்டார். அதனால் ஈர்க்கப்பட்ட பலரில் ஒருவர் பிரபல ‘ராப் அண்டு பாப்’ பாடகர் அஷூர். அவர் நேரடியாக ஜஸ்டீனைத் தன் இசை சீடனாக ஏற்றுக்கொண்டார்.
2008-ல் யூ டியூப்பில் பிரபல ஆங்கிலப் பாடல்களின் கவர் வெர்ஷன்களைப் பாடிக் கவனம் பெற்றார். அடுத்த ஆண்டு தன்னுடைய முதல் ஒரிஜினல் ஆல்பமான ‘ஒன் டைம்’-ஐ (‘One Time’) யூ டியூபிலேயே வெளியிட்டார். அவருடைய ‘பேபி’ (Baby) பாடல் மட்டுமே யூ டியூபில் 100 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. 2010-க்குப் பிறகு புகழின் உச்சத்தை எட்டியவர் ஒரே ஆண்டில் 127 இசை நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்குப் பிரபலமானார்.
பாவனை ஒன்றே போதுமே!
இந்நிலையில் தன்னுடைய புதிய இசை ஆல்பமான ‘பர்பஸ்’-ஐ (Purpose) பிரபலப்படுத்த உலக இசைச் சுற்றுப் பயணத்தை 2016 மார்ச்சில் தொடங்கினார். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தொடங்கிய அந்தச் சுற்றுப் பயணம் மே 10 அன்று மும்பை நகரின் டி ஒய் பாட்டீல் அரங்குக்கு வந்தடைந்தது. அடுத்ததாகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். முதன்முறையாக இந்தியாவுக்கு வந்த பாப் இளவரசனின் இசை மழையில் நனைய அரங்கில் 45 ஆயிரத்துக்கும் மேலானோர் பல மணி நேரம் காத்திருந்தனர். யூ டியூபின் மூலமாகவே தனக்கென மிகப் பெரிய இளைஞர் கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டவர் தன்னுடைய இந்திய ரசிகர்களை நேரில் முதன்முறையாகச் சந்தித்தார். அப்போது கிட்டத்தட்ட 12 பாடல்களைப் பாடினார். ஆனால், அவற்றில் எட்டுப் பாடல்களுக்கு வாய் மட்டுமே அசைத்தார், உண்மையாகப் பாடவே இல்லை என்கிற மிகப் பெரிய சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
ஒரிஜினல் பாடலைப் பின்னணியில் போட்டுவிட்டுப் பாடுவதுபோல வெறுமனே பாவனை செய்து ஏமாற்றிவிட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். முக்கியமாக டிவிட்டரில் கடுமையாக இது ‘டிரால்’ செய்யப்பட்டது. ஆனால் இப்படியெல்லாம் சாடுபவர்கள் பத்திரிகையாளர்களும் இசை விமர்சகர்களும்தான். தங்களை பிளீபர்ஸ் (Beliebers) எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஜஸ்டின் ரசிகர்களுக்கு இது ஒரு குறையாகவே இல்லை. “எங்களுடைய கனவு இசை நாயகன் எங்களைக் கண்ணோடு கண் பார்த்துப் பாடிய பாவனை ஒன்றே போதுமே” என்கிறார்களாம்!