

தவறு, நாம் எல்லோரும் செய்யுற ஒண்ணுதான். ஆனால் தவறுகளைச் சுட்டிக் காண்பிக்கிறது. சந்தேகமே வேண்டாம். பெரும்பாலும் நாம் யாரும் அதைச் செய்வது கிடையாது. நமக்கு எதுக்குத் தேவையில்லாத வேலை எனக் கடந்துவிடுவோம். ஆனால் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், டுவீட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பெருக்கத்துக்குப் பிறகு இப்படியான தவறுகளை ‘சுட்டோ சுட்டோ’ எனச் சுட்டிக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டோம். இது நல்லதா, கெட்டதா என்பதல்ல விஷயம். அதில் உள்ள சுவாரஸ்யம்தான் விஷயம்.
இப்படிச் சுட்டிக் காண்பிப்பதில் முக்கியமானவை சினிமா தவறுகள். படம் சரியா எடுக்கவில்லை என்றாலும், சரியா நடிக்கவில்லை என்றாலும் அவ்வளவுதான் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் மீமீஸ் உருவாக்குபவர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்தத் திறமைகளுக்கு அவர்கள் இந்தியாவில், உலகத்திலேயே இருக்க வேண்டிய ஆட்கள் இல்லை. அவர்களுக்காக தனியான ஒரு அறிவுலகம் உருவாக வேண்டும். இந்த தவறுகள் சுட்டிக் காண்பிப்பதில் பழைய, புது படம் என்பதெல்லாம் பொருட்டில்லை.
சினிமாவின் கண்டியுனிட்டி தவறுகளைச் சுட்டிக் காண்பிப்பது இப்போது ஒரு ட்ரெண்ட். இணையத்தில் Mistakes in Tamil cinema எனத் தட்டச்சு செய்தாலே நூற்றுக்கணக்கான வீடியோ, படங்கள் இது தொடர்பாகக் கிடைக்கின்றன. பேஸ்புக்கில் இதற்கெனத் தனிப் பக்கங்களே உள்ளன.
என்ன மாதிரியான தவறுகள்? உதாரணத்துக்கு ஹீரோ ரெட் கலர் ஸ்பிளண்டர் பைக்கில் போகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் ஒரு சந்து திரும்பியதும் ரெட் கலர் ஸ்பிளண்டர் ப்ளூ கலர் ஆனால்கூடப் பரவாயில்லை. ஆனால் ஸ்பிளண்டர் பைக்கே யுனிகானாக மாறிவிடும். இதெல்லாம் கண்டியூனிட்டியைக் குறித்துவைக்காததால் நிகழும் தவறுகள்.
கண்டியூனிட்டி என்பது சினிமா வேலைகளுள் ஒன்று. இதைக் கவனித்துக்கொள்ளத் தனியான உதவி இயக்குநர்கள் இருப்பார்கள். ஒரு காட்சியில் நடிகர்கள் என்ன சட்டை அணிந்திருந்தார்கள் என்பதிலிருந்து அவர் கையில் வாட்ச் இருந்ததா, கையில் கயிறு கட்டியிருந்தாரா, பொட்டு வைத்திருந்தாரா, வளையல் என்ன கலரில் போட்டிருந்தார், தலை எப்படி வாரியிருந்தார் என்பதுவரை எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அந்தக் காட்சிக்கான பின்னணியில் என்னென்ன இருந்தன என்பதைக் குறிப்பதும் அவசியம். அந்தக் காட்சியின் பின்னணியில் காலண்டர் இருக்கிறது என்றால் அது காட்டும் தேதி என்ன, காலண்டரின் படம் என்ன என எல்லாவற்றையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
எதற்காகக் குறித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி இருக்கிறது. உதாரணமாக 1-ம் தேதி, காலை 10 மணிக்கு ஒரு காட்சியை எடுக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினிடம் காதலைத் தெரிவிக்க வருகிறார். இடம் ராயப்பேட்டை மணிக் கூண்டு அருகில் என வைத்துக்கொள்வோம். அந்தக் காட்சியின் விடுபட்ட ஒரு ஷாட்டைக் குழுவினர் மீண்டும் எடுக்க நினைக்கிறார்கள் என்றால் அந்தக் காட்சியில் என்னென்ன இருந்தன, ஹீரோ என்ன சட்டை, பேண்ட் அணிந்திருந்தார், ஹீரோயின் என்ன ஆடை அணிந்திருந்தார், கலர் என்ன, மணிக்கூண்டு காண்பித்த மணி என்ன என எல்லாவற்றையும் குறித்துவைத்தால்தானே அதைத் திரும்ப எடுக்க முடியும்?
கன்டினியூட்டி குறித்து இயக்குநர் கே.பாக்யராஜ் எதிர்கொண்ட ஒரு சம்பவம் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி ஒரு கறுப்பு நிறக் கோழியை எடுத்துக்கொண்டு கால்நடை மருத்துவரிடத்தில் வருவார். அந்தக் காட்சியைப் படமாக்கிவிட்டுக் குழுவினர் வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறார்கள்.
அந்தப் படத்தின் இயக்குநர் பாரதிராஜா அந்தக் காட்சியைத் திரும்ப எடுக்க நினைக்கிறார். ஆனால் கறுப்பு நிறக் கோழியை அந்த ஊரிலேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். வந்த இடத்தில் கறுப்புக் கோழி கிடைக்கவில்லை. இயக்குநருக்குத் தெரிந்தால் கோபிப்பார் என்பதால் ஒரு சாம்பல் கோழியைப் பிடித்து கறுப்பு பெயிண்ட் அடித்துக்கொடுத்துவிடுகிறார் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ். ஆனால் இந்தக் கறுப்பு பெயிண்ட் விஷயம் ஸ்ரீதேவி மூலமாக அம்பலப்பட்டுவிட்டது.