

ஒரு உணவகத்துக்கு உண்டான எந்த அடையாளமும் இன்றிக் காட்சியளிக்கிறது அந்த கிராமத்து உணவகம். இங்கு வைக்கும் மீன் குழம்புக்கு அடிமையானோர் ஏராளம்.
மீன் குழம்பு, மீன் பொரியலுக்கென்று பிரசித்தி பெற்ற அந்தக் கிராமத்து உணவகம், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இடையன்குடியில் அமைந்திருக்கிறது.
‘ஹோட்டல் ராஜன்’ என்ற அழுக்கடைந்த சிறிய பெயர்ப் பலகை அடையாளம் காட்டுகிறது.
இந்த உணவகத்தை நடத்துபவர் ஜெபசிங் ஜேக்கப் (65). இங்குப் பரிமாறப்படும் சோறு, கறி, கூட்டு, மீன் குழம்பு, மீன் பொரியல் என்று அனைத்தையும் அவரே சமைக்கிறார்.
உணவகத்தில் இருக்கும் 2 மேஜைகளைத் துடைத்து, தண்ணீர் வைத்து, இலைபோட்டு, உணவு பரிமாறி, குழம்பு ஊற்றி, கூட்டு வைப்பது வரை அனைத்தையும் அவரே செய்கிறார். வாடிக்கையாளர் சேவையில் குறை வைத்துவிடக் கூடாது என்பது அவர் ஓடியாடி வேலைசெய்வதில் தெரிகிறது. விறகு அடுப்பில்தான் சமையல்.
வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளாத ஜெபசிங் ஜேக்கப், தனது வீட்டின் முன்புறத்தை உணவகமாக மாற்றி, 36 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்களுக்குச் சுடச்சுடப் பரிமாறுவது இவரின் தொழில் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது.
ஜெபசிங்கின் ரசிகர்கள்
இதற்காக, குழம்புச் சட்டி எப்போதும் அடுப்பில்தான் இருக்கும். பரிமாறும் நேரத்துக்கு இடையில், அவ்வப்போது அடுப்பையும் கவனித்துக்கொள்கிறார். அந்த உணவகத்தின் மகத்துவம் உணர்ந்தவர்கள், அப்பகுதிக்குச் சென்றால் அங்குச் சாப்பிடாமல் திரும்புவதில்லை. மீன் குழம்பின் உண்மையான ருசியை நாவில் நிற்கவைக்கும் ஜெபசிங் ஜேக்கப்புக்கு என்று தனி ரசிகர்களே இருக்கிறார்கள். இங்கு தூய திரித்துவ ஆலயத்தின் அருகிலுள்ள சி.சி.எம். மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மதிய வேளையில் இங்குவந்து நீண்டநேரம் காத்திருந்து மீன் பொறியல், குழம்புடன் சாப்பிட்டுச் செல்கின்றனர்.
கிரைண்டருக்கு வேலையில்லை
வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்த பரபரப்பான வேளையில் அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த இவர், இடையன்குடியில் விமலா என்பவரைத் திருமணம் செய்தபின், இங்கேயே தங்கிப் பிழைப்பு நடத்திவருகிறார். இவருக்கு 6 பிள்ளைகள். தனக்குப் பின் யாரும் ஹோட்டல் தொழிலுக்கு வரமாட்டார்கள் என்கிறார். உணவகத்தில் குழம்பு, கூட்டு போன்ற சமையல் பொருட்களைத் தயாரிப்பதில், மனைவி விமலா உதவி செய்வதாகக் குறிப்பிட்டார்.
“மசாலா எதையும் கிரைண்டரில் அரைப்பதில்லை. அது குழம்புக்கும் கூட்டுக்கும் சுவை சேர்க்காது. எனவே அம்மியில் அரைத்துப் பக்குவமாக எடுக்கிறோம். அருகிலுள்ள கடலோரக் கிராமங்களில் இருந்து மீன்கள் வாங்கி வந்து குழம்பு வைத்தும், பொரித்தும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறேன். வாடிக்கையாளர்கள் திருப்தியாகச் சாப்பிடுவதில் எனக்கு வயிறு நிறைகிறது” என்றார்.
மீன் குழம்பு, மீன் பொரியலுடன் மதிய சாப்பாடு விலை ரூ. 40 மட்டுமே. ஜெபசிங் ஜேக்கப் பரிமாறும் மீன் குழம்பு, மீன் பொரியலின் சுவை நாக்கில் பல மணி நேரத்துக்கு நர்த்தனமாடும் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.