Last Updated : 07 Sep, 2018 10:35 AM

 

Published : 07 Sep 2018 10:35 AM
Last Updated : 07 Sep 2018 10:35 AM

‘வெயிட்’டான விளையாட்டு!

நடந்து முடிந்த 2018-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 69 பதக்கங்களை வென்று சாதித்திருக்கிறது இந்தியா. அதிலும் இந்திய அளவில் தமிழக வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்திருப்பது கூடுதல் பெருமிதம். இந்தோனேசியாவின் ஜகார்தா, பாலெம்பெங் நகரங்களில் இந்த ஆசியப் போட்டிகள் நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அந்த நாட்டின் பண்டங் நகரில் வேறொரு ‘வெயிட்’டான ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. அதில் பங்கேற்றுத் தங்கம் பதக்கம் வென்றிருக்கிறார் தமிழக வீரர் சுதர்சன்.

 அந்த ‘வெயிட்’டான விளையாட்டின் பெயர் ‘கெட்டில்பெல்’. புது மாதிரியான பளுதூக்கும் போட்டி  இது. பார்ப்பதற்குத் தேநீர்க் குடுவையைப் போல் லேசாகத்தான் தெரிகிறது. ஆனால், பாறாங்கல்லைப் போன்ற கனமான இரும்புக் குடுவைகள் இவை. ஏதோ கலர்கலரா கைப்பிடி வைத்த பந்துகள் இருக்கின்றன என்று நினைத்தால், ஒவ்வொரு வண்ணமும் அதன் எடையைக் குறிக்கிறது. இளஞ்சிவப்பு – 8 கிலோ, நீலம் – 12 கிலோ, மஞ்சள் – 16 கிலோ, ஊதா -  20 கிலோ, பச்சை -  24 கிலோ, ஆரஞ்சு – 28 கிலோ, சிவப்பு – 32 கிலோ, சாம்பல் - 36 கிலோ

அதிலும் ஆண்கள் போட்டிக்கான தொடக்க எடை 16 கிலோவிலிருந்துதான் தொடங்குகிறது. ஒரு கைப்பிடியுடன்கூடிய இந்த கெட்டில்பெல்லைத் தூக்குவதற்கென அடிப்படையாக  ‘ஸ்னேட்ச்’, ‘ஜெர்க்’, ‘லாங்க் சைக்கிள்’ ஆகிய மூன்று விதிமுறைகள் உள்ளன. ஒரு கையால் ஒரு கெட்டில்பெல்லைத் தலைக்கு மேலே தூக்கிவைத்திருக்க வேண்டும். பின்பு காலின் முட்டிகளுக்கு இடையில் ஒரே அசைவில் கொண்டுவந்து மீண்டும் தலைக்கு மேல் தூக்குவதுதான் ‘ஸ்னாட்ச்’. சற்று அலட்சியமாக இந்த எடையைத் தூக்கினாலும் உடலுக்கு சேதம் விளைவிக்கும்  ஆபத்தும் இருக்கிறது.

அடுத்து, ஒரு கையில் ஒரு கெட்டில்பெல்லை நெஞ்சோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும். பின்பு அலேக்காகத் தலைக்கு மேல் தூக்க வேண்டும். மீண்டும் நெஞ்சோடு அணைத்துக்கொள்வதுபோலக் கீழே கொண்டுவர வேண்டும். வீடியோவில் பார்க்கும்போதே நமக்கே மனம் படபடவென்கிறது. அடுத்து, ஒரு கையில் ஒரு கெட்டில்பெல்லை கால் மூட்டுகளுக்கு இடையிலிருந்து நெஞ்சுக்கு அருகே தூக்கி, அதே வேகத்தில் தலைக்கு மேல் தூக்க வேண்டும்.

இந்த மூன்று வகையான சுற்றுகளையும் இரண்டு கைகளிலும் செய்யும் வகையறாவும் உண்டு. ஒவ்வொரு பிரிவும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு நடத்தப்படும். இதில் பளுவைச் சுழற்றும் விதம், தூக்கும் வேகம், ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுசெல்லும் போக்கு ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 புதுபுதுசா தினுசுதினுசா விளையாட்டுகளைக் கண்டுபிடிக்கிறாங்களே என்று யோசிக்கிறீர்களா? கெட்டில்பெல் ஒன்றும் திடீரென முளைத்த விளையாட்டல்ல. ரஷ்யாவில் 1948-ல் ‘கைர்வாய்’ விளையாட்டு என்ற பெயரில் முதல் கெட்டில்பெல் போட்டி நடத்தப்பட்டது. ராணுவ வீரர்களுக்குப் பலனளிக்கக்கூடிய உடற்பயிற்சியாகவும் விளையாட்டாகவும் இது இருந்தது. அவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும் என்ற நோக்கத்தில்தான் இப்படியொரு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1970-களில் தேசிய அளவிலான விளையாட்டாக இது உருவெடுத்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனிலும் 2003-ல் அமெரிக்காவிலும் கவனம் பெறத் தொடங்கியது.

தற்போது பல நாட்டு வீரர்கள் பங்கேற்கும் அளவுக்கு கெட்டில்பெல் வளர்ந்திருக்கிறது. அப்படி ஆசிய அளவில் நடந்த போட்டியில்தான் தமிழக வீரர் சுதர்சன் தங்கப் பதக்கம் வென்று காட்டியிருக்கிறார். ‘The Absolute Winner’ என்ற பட்டத்தையும் இந்த போட்டியில் பெற்றிருக்கிறார்.சுதர்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x