சுதாகரின் கிரேசி கார்கள்!

சுதாகரின் கிரேசி கார்கள்!
Updated on
1 min read

ஹலோ துறு துறு இளைஞர்களே! நீங்கள் கார் விரும்பிகளா? ஆமாம் என்றால், எடுத்த எடுப்பில் எத்தனை கார்களின் பெயர்களை உங்களால் மடமடவெனச் சொல்ல முடியும்? பத்து? இருபது? சரி ஃப்ரீயா விடுங்க. திடீர்னு கார்களைப் பத்தி கேட்கிறேனேன்னு பார்க்குறீங்களா?

ஹைதராபாத் நகரில் சுதாகர் என்பவர் தனது வீட்டிலேயே 200 கார்களை வடிவமைத்திருக்கிறார். அதுவும் விதவிதமான, பல வடிவங்களில். பெண்கள் அணியும் ஹை ஹீல்ஸ் ஷூ, ஆண்களின் ஸ்போர்ட்ஸ் ஷு, பர்கர், ஹாண்ட்பேக், ஹெல்மெட், நிகான் கேமரா, புத்தகம், டைனிங் டேபிள், சோஃபா, மேற்கத்திய கழிப்பறை இப்படி 200 வடிவங்களில் கார்களை சுதாகர் உருவாக்கியிருக்கிறார்.

தியேட்டரா, மெக்கானிக் கடையா?

பள்ளி காலத்திலேயே கார்கள் மீது ஆசை கொண்ட சுதாகர் தற்போது ஒரு பிரம்மாண்டமான கார் அருங்காட்சியகத்தை நிறுவியிருக்கிறார். இளமைக் காலத்தில், தன் நண்பர்கள் ஜாலியாக சினிமா பார்க்கச் செல்லும்போதுகூட இவர் மட்டும் அவர்களிடமிருந்து நழுவி மெக்கானிக் கடைக்குச் சென்றுவிடுவாராம். இதனால் தெரு ஓரங்களில் வேலை பார்க்கும் கார் மெக்கானிக்குகளிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார். “அவர்களுடைய தொழில் திறமையைக் கண்டு சில நேரங்களில் பிரமித்துப் போய் இருக்கிறேன்.” என்கிறார் சுதாகர்.

14 வயதில் முதல் கார்

முதல் காரை வடிவமைத்தபோது சுதாகரின் வயது 14. சாதாரணப் பள்ளி மாணவனாக இருந்த அவரிடம் கைச்செலவுக்குக்கூடப் பணம் இருக்காது. அந்த நிலையில் அருகிலிருந்த குப்பைக்கூளங்களில் கிடந்த உடைந்த கார் பாகங்களை ஒவ்வொன்றாகத் தேடி, பொறுக்கி எடுத்து தன் முதல் காரை வடிவமைத்திருக்கிறார்.

கின்னஸ், லிம்கா சாதனையாளர்

இவ்வாறு உதிரி பாகங்களிலிருந்து கார்களை உருவாக்கத் தொடங்கிய இவர், இன்று ஜொலிக்கும் 200 கார்களைக் கொண்ட அருங்காட்சியகத்தை நிறுவும் நிலைக்கு உயர்ந்துள்ளார். ஹைதராபாத் நகரில் கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு பரந்து விரிந்த நிலப்பரப்பில் இருக்கிறது இவருடைய கார் அருங்காட்சியகம். உலகிலேயே கைகளால் உருவான கார்களைக் கொண்ட முதல் அருங்காட்சியகம் இதுதான்.

தினம் தினம் நூற்றுக்கணக்கான வாகன ஆர்வலர்கள் இந்த கார் அருங்காட்சியத்தைப் பார்க்க வருகிறார்கள். சுதாகரின் புகழ் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அவருடைய கார்கள் பொதுமக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அவற்றை விற்காமல் கண்காட்சிக்கு மட்டுமே வைத்து வருகிறார் இவர். ஒவ்வொரு காரையும் தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அவர் செலவழிக்கிறார்.

வீட்டிலே தயாரிக்கப்பட்ட கார்களைக் கொண்ட உலகின் முதல் அருங் காட்சியம் என்ற பெருமைக்காக சுதாகர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும், லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார்.

சுதாகரின் அதிசய கார்களைக் கண்டுகளிக்க http://youtu.be/j1AfmVX3IQY

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in