

வீட்டுக்கொரு மரம் வளர்க்கிறோமோ இல்லையோ, வீட்டுக்கொரு இன்ஜினீயரை வளர்க்கிறோம். தடுக்கி விழுந்தால், பொறியியல் பட்டதாரி என்று தமிழகத்தின் நிலைமை மாறிவிட்டது. இப்படிப் பொறியியல் படிப்பவர்களில் பலர், தங்களுடைய கனவைப் புதைத்துக்கொண்டு நிர்பந்தத்தால் இதைப் படித்துவருகிறார்கள் என்பது இன்னும் கொடுமை. ஆனால், கனவு மெய்ப்படும் தருணத்தை யாரோ நமக்குத் தரப் போவதில்லை. அதை நாம்தான் எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற புத்துணர்வூட்டும் மெசேஜைச் சொல்கிறது ‘சூப்பர் டீலக்ஸ் இன்ஜினீயர்’ அனிமேஷன் வீடியோ.
ஏதேதோ வேலை செய்துகொண்டிருந்த சில இளைஞர்கள், 2015-ல் ஒன்றுகூடித் தங்களுடைய சினிமா காதலைக் கொண்டாடும் விதமாக ‘ஃபுல்லி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். திரைப்படங்கள் சார்ந்த டீ ஷர்ட்களை வடிவமைப்பதுதான் இவர்கள் தேர்ந்தெடுத்த கனவுத் தொழில்.
அதெல்லாம் சரி, அதென்ன ’சூப்பர் டீலக்ஸ் இன்ஜினீயர்?’ ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ட்ரெய்லரில், “ஒரு நாள், ஒரு ஆண், ஒரு மலை பாதையில தனியா போகையில…” என்று நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் ஒலித்த வசனத்தை மையமாக வைத்துதான் தங்களுடைய கதையைப் புனைந்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். 3 நிமிட அனிமேஷன் படமாக எடுத்து அசத்தியது மட்டுமல்லாமல், நடிகை சமந்தாவுக்கு தங்கள் நிறுவனம் வடிவமைத்த டீ ஷர்ட்டையும் பரிசளித்து அவரையும் ‘சூப்பர்’ என்று சொல்ல வைத்துவிட்டார்கள்.