வித்தியாசமான பிரண்ட்ஸ் டே கொண்டாட்டம்

வித்தியாசமான பிரண்ட்ஸ் டே கொண்டாட்டம்
Updated on
2 min read

ஜாலியாக பிரண்ட்ஸுடன் சாட்டிங்கில் ஈடுபடும் அதே நேரத்தில் முகம் தெரியாதவர்களையும் நண்பர்களாகவே கருதுகிறார்கள் இந்த இளைஞர்கள். இதைத்தான் இன்று, சதா சர்வ காலமும் சோஸியல் மீடியாவில் முடங்கிக் கிடக்கும் பலரும் செய்கின்றனரே எனத் தோன்றலாம். ஆனால், இவர்கள் வெறும் கூட்டுப்புழுக்கள் அல்ல. பட்டாம்பூச்சிகள். பறந்து திரிந்து பலர் வாழ்வில் வண்ணத்தைப் பூசும் வேலையைக் குஷியாகச் செய்கிறார்கள்.

பிரண்ட்ஸ் டே அன்று கைகளில் வண்ணக் கயிறு கட்டுவதில் தொடங்கி ஷாப்பிங் மால், சினிபிளக்ஸ் எனக் குதூகலித்த இளைஞர்கள் மத்தியில் இவர்கள் முற்றிலும் வித்தியாசமான கொண்டாட்டத்தில் என்கேஜ்டாக இருந்தார்கள்.

தாங்கள் சேகரித்து, ரக வாரியாகப் பிரித்துவைத்திருந்த ஆடைகளையும், சமைத்து வைத்திருந்த உணவையும் எடுத்துக் கொண்டு சாலையோரங்களிலும், ரயில், பேருந்து நிலையங்களிலும் இருந்த ஆதரவற்றோருக்கு அளித்துள்ளனர். நண்பர்களுடன் இணைந்து முகவரி இல்லாத முகங்களுக்குச் செய்த மிகச்சிறிய அந்த உதவிதான் அவர்களுக்கான நண்பர்கள் தினக் கொண்டாட்டம்.

சமூக நலம்

இக்னைட் பவுண்டேஷன் என்ற சமூகநலத் தொண்டு இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களில் பலர் படித்துக்கொண்டிருக்கின்றனர், சிலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிவருகின்றனர். இவற்றை எல்லாம் தலைமை ஏற்று நடத்துகிறார் கார்த்திக் (26).

அவரிடம் பேசியபோது, “சும்மா வெட்டியா பொழுத போக்குவது மட்டும் பிரண்ட்ஷிப் இல்ல; லைப்ல சந்தோஷம் இல்லாதவங்களுக்கு எங்களால முடிஞ்ச உதவியைச் செய்றோம். அவங்க எங்களுக்கு நண்பர்களாயிட்றாங்க. அப்போது கிடைக்கும் சந்தோஷத்தை அடிச்சிக்கவே முடியாது” என்கிறார்.

சென்னை அண்ணா பல்கலையில், கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்த கார்த்திக் 2012-ல் கடைசி வருடம் படித்தபோது நண்பர்களுடன் இணைந்து இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளார். முறைப்படி பதிவுசெய்யப்பட்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. https://www.facebook.com/Ignitefoundation என்பதே இவர்களது பேஸ்புக் முகவரி, www.ignitefoundation.in என்பது இவர்களது இணைய முகவரி. இந்த அமைப்பின் நோக்கம் ஸ்டூடன்ட் சோஸியல் ரெஸ்பான்ஸிபிளிட்டியை (SSR) உருவாக்குவதே.

பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில், அந்நிறுவனங்களே ஊழியர்கள் மாதம் ஒருமுறை சமூக தொண்டாற்ற ஊக்குவிக்கின்றன. இதை (CSR) கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி என்கிறார்கள். அவர்கள் அதை முழுமூச்சாகச் செயல்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறிதான். சமூக சேவைமீது ஆர்வமோ, அது பற்றிய அறிமுகமோ இல்லாதவர்களைத் திடீரென அச்சேவையில் ஈடுபடுத் தினால் எப்படிச் சமூக பொறுப்பு வரும் என்னும் கார்த்திக்கின் கேள்வி அர்த்தமுள்ளது.

நோக்கம்

மாணவர் பருவத்தில் இருந்தே சேவை எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும்; மாணவர்களிடம் தீப்பொறியைத் தூவ வேண்டும் என்ற இலக்குடன் இக்னைட் அமைப்பைத் தொடங்கியதாகக் கூறுகிறார் கார்த்திக். சிறு துளி பெரு வெள்ளமாவதைப் போல், சிறு தீப்பொறி பல விளக்குகளைத் தூண்டும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியிருப்பதாகவும் பகிர்ந்துகொள்கிறார்.

இவரது நண்பர்கள் தின மெஸேஜ், “நட்புறவு என்பது ஒரு நெட்வொர்க் எக்ஸ்பேன்ஷன். முகவரி இல்லாத முகங்களில் மலர்ச்சி ஏற்படுத்த வேண்டும்” என்பதே.

இளைஞர்கள் என்றால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருப்பார்கள். அவர்களுக்குப் பொறுப்பு இல்லை. அவர்களுக்குச் சமூக அக்கறை இல்லை என்றெல்லாம் சலித்துக் கொள்ள அவசியமே இல்லை. ‘சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி’யுடன் செயல்படும் இளைஞர்கள் இருப்பதை இவர்கள் உறுதிசெய்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in