

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் சாதித்த கண்ணகி நகர் கார்த்திகா, வடுவூர் அபினேஷ், திருநெல்வேலி எட்வினா ஜேசன், கோவில்பட்டி மகாராஜன்தான் இந்த வாரத்தின் வைரல் நட்சத்திரங்கள். ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் விளையாட இந்தியாவிலிருந்து 222 இளம் வீரர், வீராங்கனைகள் தகுதிப் பெற்றிருந்தனர். இதில் 30க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதித்த இளம்படையில் தமிழகத்தைச் சேர்ந்த நால்வரும் அடக்கம்.
கண்ணகி நகர் ‘எக்ஸ்பிரஸ்’ - கபடி போட்டியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கங்களைத் தட்டிவந்தது. ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்ற மகளிர் கபடி அணிக்குத் துணை கேப்டனாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகா. இவர், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். புயல் வேகத்தில் எதிரணியைக் கலங்கடிக்கும் ரைடர். அதனால், கார்த்திகா ‘எக்ஸ்பிரஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.