

செப்டம்பர் 19. அசாம் பாடகர் ஜூபின் கார்க்கின் மறைவுச் செய்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன. ரசிகர்களின் கண்ணீர் படங்களும், காணொளிகளும் அதிகம் தென்பட்டன. அசாம் முழுவதும் சோகத்தில் மூழ்கியிருந்ததைத் தொலைவிலிருந்தும்கூட உணர முடிந்தது. கலைக்கு அப்பால் பாடகர், பாடலாசிரியர், இசை யமைப்பாளர், நடிகர் எனப் பன்முகமாக இயங்கியவர், ஜூபின் கார்க்.
இந்தி, அசாமி, வங்காளம் மட்டுமல்லாமல் தமிழ், மலையாள மொழிகளிலும் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். 38,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ள அவர், சிங்கப்பூர் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 52 வயதான ஜூபினின் இறுதி ஊர்வலத்துக்கு அசாமில் திரண்ட மக்கள், அவரின் பாடல்களைப் பாடி வழியனுப்பி வைத்தது சமூக ஊடகங்களில் வைரலானது.
‘ஜூபின் தா’ (’தா’ என்றால் அசாம் மொழியில் அண்ணன்) எனச் செல்லமாக அழைக்கப்படும் ஜூபின், அசாமின் அடையாளமாக வாழ்ந்தவர் என்பது அவர் மறைவுக்குப் பிறகே மற்ற மாநிலங்களில் உணரப்பட்டது. ‘யா அலி’ (கேங்ஸ்டர்), ‘தில் து ஹி பாதா’ (கிரிஷ் 3) போன்று பாலிவுட்டில் பிரலமான பல பாடல்களை பாடியவர்.
ஆனால், பாலிவுட்டிலேயே தங்கிவிடாமல், மீண்டும் தன் மாநிலத்துக்குத் திரும்பி அங்கேயே தனது பணிகளைத் தொடர்ந்தார். பாடுவது, இசையமைப்பதோடு நில்லாமல் தேவைப்படுவோருக்கு நிறைய உதவியது, சமூக நலனுக்குக் குரல் கொடுத்தது, விலங்குகள், இயற்கை நல ஆர்வலராக இருந்தது எனக் கலைக்கு அப்பால் மக்களில் ஒருவராக வாழ்ந்திருக்கிறார்.
புதுப் புரட்சி: 1990களின் தொடக்கத்தில் ஜூபினின் இசைப் பயணம் தொடங்கியது. அசாமின் பாரம்பரிய இசைப் பாணி, ராக், பாப் என மேற்கத்திய நவீன இசையைக் கலந்து புதுமையை உண்டாக்கியதில் ஜூபினின் பங்கு அதிகம். 30 ஆண்டுகள் தாண்டிய கலைப் பயணத்தில் அவருடைய ஏராளமான பாடல்கள் அசாமின் மரபு, அடையாளத்தைக் கொண்டாடும் வகையில் இருந்தாலும், சமூக அநீதி, நல்லிணக்கம், ஒற்றுமையைக் கெடுக்கும் பிளவு அரசியல் போன்றவற்றை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் விதத்திலும் இருந்தது, தனிச் சிறப்பு.
“நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. ஆனால், பணம் தந்தால் எந்தக் கட்சிக்கும் பாடுவேன். முதலில் நான் ஒரு பாடகர்” என்று ஒரு முறை பேசியிருந்தார் ஜூபின். ஆனால், அவரின் செயல்பாடுகளிலும் அவர் இயற்றிய தனி இசைப் பாடல்களின் மூலமாகவும் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ரசிகர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.
தனது இயற்பெயரான ‘ஜிபன் பொர்தாகூர்’ என்பதைத் துறந்து, மேற்கத்தியச் செவ்வியல் இசை மேதை ஜூபின் மேத்தாவின் பெயரைத் தழுவி, ஜூபின் கார்க் எனத் திரைப்பெயரைச் சூட்டிக்கொண்டார். சாதிய அடையாளங்களைத் துறந்து, ‘மனிதமே’ தன் அடையாளம் என்பதை வெளிப்படையாக அறிவித்த ஜூபினின் மறைவுக்கு வேற்றுமைகளைக் கடந்து அனைவரும் ஒன்றுகூடியது, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மற்றொரு வாய்ப்பு. மறைந்தும் வாழ்வார்கள் மக்கள் கலைஞர்கள்!