

ஜப்பானின் பிரபல இயக்குநர் ஹயாவொ மியாசாகியின் கிப்லி ஸ்டைல் அனிமேகள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. இதற்குக் காரணம் ‘சாட் ஜிபிடி’. 'தங்கள் ஒளிப்படங்களை கிப்லி அனிமே வடிவில் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்’ என்கிற அறிவிப்பை அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தளம் அறிவித்ததுதான் தாமதம்.
பிரபலங்கள் தொடங்கி சாமானியர்வரை கிப்லி படங்களால் சமூக வலைதளங்களை நிறைத்துவிட்டனர். இதற்குக் காரணம் அந்த ஓவியங்களில் உள்ள தனித்துவமான ஈர்ப்பு. இந்த ஓவியங்கள் 40 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் உருவான கிப்லி அனிமேவின் வடிவத்தில் அமைந்திருந்தன. இது ஒருபுறம் இருக்க, மியாசாகியின் படைப்புகளை ஏ.ஐ. தளங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
கிப்லி டிரெண்ட்: கிப்லி அனிமே என்றால் என்ன எனக் கேட்கிறீர்களா? அதற்கு அனிமேகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் வெளியான அனிமேஷன் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, ஜப்பானியர்கள் உருவாக்கிய அனிமேஷன் வடிவமே அனிமே.
கார்ட்டூனும் அனிமேயும் ஒன்றுதான் என்றாலும், கதை நகரும் போக்கிலும், கதாபாத்திர உருவாக்கத்திலும் அனிமேகள் அனைத்து வயதினரையும் கவர்கின்றன. கார்ட்டூன்கள் - குழந்தைகளுக்கானவை என்றால், அனிமேகள் அனைவருக்குமானவை. டிஸ்னி தயாரிப்பு நிறுவனம், கார்ட்டூன்களின் முகமாக அறியப்படுவதுபோல அனிமே தயாரிப்புகளில் ஜப்பானின் கிப்லி ஸ்டுடியோ முதன்மையானது. கிப்லி ஸ்டுடியோ வெளியிடும் அனிமேஷன் படங்களே கிப்லி அனிமே.
மியாசாகி யார்? - ‘கிப்லி’ ஸ்டுடியோவை இயக்குநர் தகஹாடா இசாவோ, தயாரிப்பாளர் தோஷியோ சுசுகியுடன் இணைந்து 1984இல் ஹயாவொ மியாசாகி (Hayao Miyazaki) தொடங்கினார். இத்தாலிய விமானப் படையின் கிப்லி விமானத்தினால் ஈர்க்கப்பட்டு, அந்தப் பெயரையே தன் நிறுவனத்துக்கு மியாசாகி சூட்டினார்.
கிப்லி நிறுவனத்தின் அனிமே படைப்புகளில் செயற்கைத்தன்மை இருக்கக் கூடாது என்பதற்காகக் கணினியைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க கைகளாலே ஓவியங்களை வரைந்த மியாசாகி, இதற்காகப் பல வருடங்களைச் செலவிட்டிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரின் அவலங்களையும், எளிய மக்களையும் குழந்தைகளையும் போர்கள் எப்படி வதைக்கின்றன என்பதை ‘Grave of the Fireflies’ என்கிற படத்தில் மியாசாகி காட்டியிருந்தார். இவருடைய ’தி பாய் அண்ட் தி ஹெரன்’ படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இவருடைய கிப்லி அனிமே ஓவியங்கள்தான் இன்று உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கின்றன.
பொழுதுபோக்கிற்காக கிப்லி அனிமே படங்களை ஏ.ஐ. தளங்கள் உருவாக்கியிருந்தாலும், படைப்பாளர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஏ.ஐ. நிறுவனங்களின் இந்த அணுகுமுறை மியாசாகி போன்ற படைப்பாளிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்; இதன் மூலம் பல வருட உழைப்பு திருடப்படுகிறது என உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரத்தில், ’இது பயனர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு அனுபவம் மட்டுமே. மியாசாகியின் படைப்புகளைப் போல் தத்ரூபமாக ஏ.ஐ-யால் உருவாக்கிவிட முடியாது’ எனக் கிப்லி டிரெண்டுக்கு ஆதரவுக் கரங்களும் நீள்கின்றன.
மியாசாகிக்கு ஈடாகுமா? - கிப்லி அனிமே டிரெண்ட் குறித்து மியாசாகி இதுவரை எந்தக் கருத்தையும் கூறவில்லை. எனினும், பல ஆண்டுகளுக்கு முன்னர், கணினிகளால் உருவாக்கப்படும் அனிமேஷன் குறித்த கேள்விக்கு மியாசாகி அளித்த பதில் இன்றைக்கும் பொருந்தும். “நீங்கள் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தாதவரை அவை பயனுள்ளதாகவே இருக்கும். ஆனால், ஓவியம் வரைவதில் திறமையே இல்லாத ஒருவர், நமக்குத் தேவையான அறிவை கணினி ஈடுசெய்யும் என நினைக்கிறார் என்றால், அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது” என்று மியாசாகி கூறியிருந்தார்.
அது கிப்லி அனிமே டிரெண்டுக்கும் நிச்சயம் பொருந்தும். வருங்காலத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுநீள அனிமேஷன் படங்கள் உருவாக்கப்படலாம். ஆனால், தன் கற்பனைகளுக்கு உயிர் கொடுத்த மியாசாகியின் படைப்புகளை ஏ.ஐ.யினால் ஈடுசெய்வது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை.