

மார்ச் முதல் ஐ.பி.எல் மாதம்! இத்தோடு 18ஆவது சீசன் என்பதை நினைத்துப் பார்க்கவே தலைசுற்றுகிறது. காலத்தின் பற்சக்கரங்கள் முன்னும் பின்னும் மோதி களிமண்ணாகப் பின்னிப் பிசைந்து தரையில் சொத்தென விழுகிறது. ஒரு பக்கம் சச்சின் காலம், இன்னொரு பக்கம் ரோஹித் காலம் என எழுதப்பட்டிருக்கும் காகித மடிப்பை விரிக்க விரிக்க அவ்வளவு அகலமாக விரிகிறது. அதில் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட அத்தனை தருணங்களும், கூடவே பழைய கையெழுத்தும் நினைவுகளைக் கிளப்புகின்றன.
பிரீமியர் லீக், லா லீகா, பன்டஸ் லீக் எனக் கால்பந்து கிளப் போட்டிகளைப் பார்த்து வெதும்பி, ரியல் மாட்ரிட், பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் என கிளப் அணிகளைப் பார்த்துக் கண்ணீர் வடித்து, இதெல்லாம் எப்போது கிரிக்கெட்டுக்குள் வரும் என்று நொந்து போனது ஒரு காலம். எப்போது ஆதர்ச கிளப் அணியின் வண்ணத்தில் நம்முடைய அறை, உடை, உடைமை எல்லாவற்றையும் மாற்றுவது என ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், 2007 வாக்கில் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவின் யோசனையில் இந்தியன் கிரிக்கெட் லீக் எனப்படும் ஐ.சி.எல். உதித்தது.