

இந்தியக் கைப்பந்து அணியை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறார் சேலத்தைச் சேர்ந்த ஷாலினி. கைப்பந்து விளையாட ஊர் ஊராகப் பறந்துகொண்டிருக்கிறார். ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஷாலினி, வளரத் துடிக்கும் இளம் பெண்களுக்கெல்லாம் ஓர் உதாரணம்.
ஷாலினி பள்ளியில் படித்தபோது, கைப்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தான் விவசாயியாக இருந்தாலும், மகள் விளையாட்டு மீது காட்டிய ஆர்வத்துக்குத் தடை போடவில்லை அவருடைய அப்பா சரவணன். அவரும் பயிற்சியாளர் சேகரும் கைப்பந்து விளையாட்டுப் பயிற்சிக்கு ஷாலினியை அழைத்துச் சென்றனர். அப்பாவின் ஆசியோடு விளையாட ஆரம்பித்த ஷாலினி இன்று இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அவரது கடுமையான உழைப்பே காரணம்.
பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட்டைத் தொடங்கினார் அவர். இப்போது மாவட்டம், மாநிலம் என்ற கட்டங்களைத் தாண்டி தேசிய அளவில் உயர்ந்து நிற்கிறார். 2013-ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு கைப்பந்து அணியில் இடம்பெற்று மகாராஷ்டிராவில் நடந்த போட்டியிலும், அதன் பின் உத்தரகாண்ட், கர்நாடகம், கேரளம் எனப் பல்வேறு மாநிலங்களில் தமிழக அணியின் சார்பில் களமிறங்கி, தனது திறமையை நிரூபித்து அசத்தியிருக்கிறார் ஷாலினி.
தனது தனித்திறனால் பலரின் கவனத்தை ஈர்த்த ஷாலினிக்கு, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த தேசிய அணிக்கான தேர்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த 100க்கும் மேற்பட்டோரில் 24 பேர் தேசிய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களில் சேலம் ஷாலினியுடன், சென்னை ஜோதியும் இருந்தார்.
அதன் பின்னர், ஆசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க, 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிக்கான தேர்வு புனேவில் நடந்தது. கோழிக்கோட்டில் தேர்வுசெய்யப்பட்ட 24 வீரர்கள் பங்கேற்ற தகுதிப் போட்டிகளில், சிறப்பாக விளையாடிய 12 பேர் கண்டறியப்பட்டு, இந்திய அணி உருவாக்கப்பட்டது. இந்த 12 பேரில் ஒருவர் என்ற இடத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஷாலினிக்கு, இந்திய அணிக்கே தலைமையேற்கும் வாய்ப்பு தேடி வந்தது மிகப் பெரிய கவுரவம். அண்மையில் அவரது தலைமையில் வியட்நாமில் நடந்த ஆசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 11-வது இடம்பிடித்து நாடு திரும்பியிருக்கிறது ஷாலினி தலைமையிலான இந்திய அணி.
சேலம் திரும்பிய அவரிடம் படிப்புக்கும் பங்கம் வராமல் கைப்பந்து விளையாட்டுக்கும் பாதகம் வராமல் எப்படி விளையாடி வளர்ந்தீர்கள் என்று கேட்டோம். “விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பிலே சராசரிதான் நான். பத்தாவதுல 460 மார்க்கும் பிளஸ் 2விலே 990 மார்க்கும் எடுத்தேன். பயிற்சிக்குச் சென்றாலும் படிப்பின் மீதும் ஒரு கண் வைத்திருந்தேன். இரண்டையும் சமமாகப் பாவித்து நேரம் ஒதுக்கினேன்” என்கிறார் ஷாலினி.
வியட்நாம் போட்டி சற்று ஏமாற்றம் அளித்திருந்தாலும், அடுத்ததாக இந்தோனேஷியாவிலே நடக்க உள்ள போட்டிக்காக் காத்திருக்கிறார் ஷாலினி. இந்தப் போட்டியிலே கலந்துகொண்டு சிறப்பாகச் செயல்படுவோம் என்று உற்சாகமாகச் சொல்கிறார். பெண் பிள்ளைகளைப் பெற்றோர் தைரியமாக விளையாட அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தீர்க்கமாகச் சொல்கிறார் அவர்.