பைக் பரிதாபங்கள்! | ஈராயிரத்தில் ஒருவன்

பைக் பரிதாபங்கள்! | ஈராயிரத்தில் ஒருவன்
Updated on
2 min read

‘எம்.டி. பிளாக் பைக் வெச்சிருக்க பசங்க எல்லாம் தங்கம், அழகு! அந்த மாதிரி பையன்லாம் கிடைக்கமாட்றானே' என வெட்கமும் அங்கலாய்ப்புமாக ஓர் ஈராயிரக் குமரி மைக்கின் முன் பேசும் காணொளிக்கு இன்ஸ்டகிராமில் ஹார்ட்டின்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இதோ, இங்கு பக்கத்து தெருவில் எம்.டி. பைக் வாங்கி தந்தால்தான், கல்லூரிக்குப் போவேன் எனக் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறான், ஒரு தம்பி. இதுவே வண்ணத்துப்பூச்சி விளைவு எனப்படுகிறது.

வண்ணத்துப்பூச்சி விளைவு: பொதுவாக, பைக் மீதான ஆர்வ மென்பது எல்லாத் தலைமுறையின ரிடமும் இருந்திருக்கிறது. `டபுள் சைலன்ஸரோட ஜாவா பைக் நிற்குற தோரணையில குதிரை தோத்துரும்' என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா. கையில் காசு இருந்தும், நல்ல மைலேஜ் தரும் புது ரக பைக்குகள் சந்தையில் இருந்தும் தேடிப் பிடித்து ஒரு சுசுகி மேக்ஸ் ஆர் 100 பைக்கை வாங்கி வந்தார். அதன் 2 ஸ்ட்ரோக் இன்ஜினின் இசையை ரசிப்பதற்காகவே, காலை வேளைகளில் தன்னந்தனியாக எங்கேயாவது போய் வருவார்.

ஹாரன் அடித்தபடி தெருவுக்குள் திரும்புபவரின் முகம் அவ்வளவு பிரகாசமாக இருக்கும். என் அப்பாவிடம் இருந்துதான் எனக்கு பைக் ஆர்வம் தொற்றிக்கொண்டது. தொலைவில் வரும் பைக்கின் டூம் ஹெட் வடிவத்தை வைத்தே, பைக்கை்க் கண்டறியும் லாகவம் எனக்குக் கைகூடியிருந்தது.

இந்தக் காலக்கட்டத்தில்தான் `பொல் லாதவன்' திரைப்படமும் வெளியானது. பைக் மீது ஆர்வம் கொண்டவர்கள் படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள். பின்னந் தலையில் ஃபங்கும், கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையும், முழுக்கைக் கறுப்புச் சட்டையும் வாங்கி அணிந்துவிட்டு அடுத்து பல்சர் பைக்கிற்காக வீட்டில் அடம்பிடிக்கத் தொடங்கினார்கள். பல்சர் மட்டுமல்லாது அபாச்சி, எஃப் ஸி, ஃபிளேம், கரிஷ்மா, சிபிஸி எக்ஸ்ட்ரீம் என உயர் ரக பைக்கு கள் நம் ஊர் தெருக்களில் அதிகமாயின.

வண்ணத்துப்பூச்சி விளைவாக `பல்ஸர்' மணி, `அபாச்சி' குமார், `யமஹா' டேவிட் என 18, 19 வயது இளைஞர்களின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் தெரு சுவர்களில் அதிகமாயின. உடன் படித்த நண்பர்கள், தெருவைச் சேர்ந்த அண்ணன்கள், தம்பிகள், உறவுக்காரர்கள் என பைக் விபத்தில் பலரும் பலியாகத் தொடங்கினர். சென்ற வாரம், நண்பனின் தம்பி ஒருவன் ஸ்டன்ட் செய்கிறேன் பேர்வழி எனப் பைக்கை பாலத்திலிருந்து கவிழ்த்துவிட்டான். பைக்கை இரும்புக்கடையில் போட்டுவிட்டு, தம்பியின் காலில் இரும்பு பிளேட் வைத்திருக்கிறார்கள்.

பைக் ரீல்ஸ்: பைக் வாங்கி தரவில்லை எனில் ஏதாவது செய்துகொள்வேன் என எதையாவது சொல்லி மிரட்ட, பெற்றோர்களும் தாலி முதற்கொண்டு அடமானம் வைத்து பைக் வாங்கித் தந்துவிடுகிறார்கள். ஷோரூமில் சோகம் தோய்ந்த முகத்தோடு அப்பா கையெழுத்துப் போடும் காட்சியைப் படம்பிடித்து `நாம ஜெயிச்சிட்டோம் மாறா' என வீடியோவைப் போட்டுவிட்டு, `இது அப்பாவின் பரிசு' என பைக்கின் பின்னால் ஸ்டிக்கரும் ஒட்டிக்கொள்கிறார்கள். ஙே..!

நெரிசலான சாலைகளில் பைக்கில் 100 கி.மீ. வேகத்தில் இண்டு இடுக்குகளில் புகுந்து செல்லும் வீடியோக்கள், போக்குவரத்து காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டுத் தப்பியோடும் வீடியோக்கள், ஸ்டன்ட் செய்வதாகப் பெண்கள் கல்லூரி வாசலின் முன் சர்க்கஸ் செய்யும் வீடியோக்கள், ‘அப்போது அவர்கள் யாருடா இந்தா ஜோக்கர்’ எனத் திரும்பிப் பார்த்தால் அதை ஸ்லோமோஷனில் படம்பிடித்து காதல் பாட்டுடன் பகிரும் வீடியோக்கள் என இன்ஸ்டா, யூடியூபைத் திறந்தாலே பைக் சம்பந்தபட்ட ரீல்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கில் ஹார்ட்டின்களை அள்ளியிருக்கின்றன.

`மஜா மாமே, மிட்டா, ஸோ, போட்டு தாக்கு, மெரட்டி விடு மாப்ள, ரவுஸு' எனத் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கமென்ட்கள் பறக்கின்றன! அப்படி கமென்ட் போடும் பெயர்களைப் படித்தபோதுதான் காலச்சக்கரம் நெஞ்சில் ஏறி உருண்டது. `எம்.டி' மணி, `கே.டி.எம்.' குமார், `யமஹா' டேவிட்! கவனம் நண்பர்களே, நூறைத் தாண்டினால் நூற்றியெட்டு வந்துவிடும். உங்களது பைக் நண்பர்கள், `இறந்திடவா நீ பிறந்தாய்...' பாட்டோடு ரீல்ஸ் ஒன்றைப் போட்டுவிட்டு அடுத்த ரேஸுக்குக் கிளம்பிவிடுவார்கள்.

(வருவான்)

- iamsuriyaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in