

செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் திவ்யா துரைசாமி. பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி, படிப்படியாக உயர்ந்து இன்று வெள்ளித்திரையிலும் அடையாளம் பெற்றுவருகிறார். ஒரு மாலை வேளையில் திவ்யாவுடனான உரையாடல்:
சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - சூரிய உதயமெல்லாம் பார்க்குறது இல்ல. ஆனா சூரியன், நிலா, நட்சத்திரம், வானத்தைப் பார்த்து, கன்னத்தில் போட்டுக்கொள்வேன்.
‘வொர்க் அவுட்’டா அல்லது ‘டயட்’டா? - வீட்டிலேயே ‘வொர்க் அவுட்’தான் செய்வேன். ஒரு நாளைக்கு இரண்டு வேளைதான் சாப்பாடு. இரவு 7 மணிக்கு மேலே நோ சாப்பாடு.
தனித்துவமான பழக்கம் ஒன்று? - ரொம்ப டைம் கீப் அப் பண்ணுவேன். பங்சுவாலிட்டி பொண்ணு நான், தெரியுமா.
கம்-பேக் தருணம்? - சாதிக்க வேண்டும் என்கிற அளவுக்கு மனசுல எதுவும் இல்ல. ஆனா, நம்ம பேரைச் சொன்னா எல்லாத்துக்கும் தெரியற மாதிரி நடிக்கணும்னு ஆசை இருக்கு.
இந்த வேலை இல்லையென்றால்? - எனக்கு சினிமாவை விட்டா பார்க்க வேற வேலைகள் இருக்கு. ஆனா, வேற வேலை பார்க்க விருப்பம்தான் இல்ல. ஒருவேளை விரும்பினா ஹோம் மேக்கர் ஆயிடுவேன்.
எதிர்காலக் கனவு? - மனசுக்கு நிறைவான வாழ்க்கையை வாழணும்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - இப்போ வாசிப்பு குறைஞ்சிடுச்சி. சினிமா பார்க்குறதும் இல்ல. எதிலும் இண்ட்ரஸ்ட் இல்லாத நிலைக்குப் போயிட்டேன்.
பொழுதுபோக்கு? - 24*7 வீட்டுல சும்மாவே இருப்பேன். அப்படி இருக்குறது ரொம்பப் பிடிக்கும்.
பிடித்த சமூக வலைதளம் எது? ஏன்? - குறிப்பிட்டு எதுவும் இல்ல. எல்லாமும் பயன்படுத்துவேன். ஆனா, எல்லாமே நம்ம டைம்மை விழுங்குது.
உறங்கவிடாத ஒன்று? - என் தனிப்பட்ட வாழ்க்கை. வாழ்க்கையில லட்சியம், குறிக்கோள், திட்டம் எல்லாத்தையும்விட நம் குடும்பம் முக்கியம்னு நினைக்கிற ஆள் நான். அது சரியா இருந்தா, மற்ற எல்லாத்தையும் அமைதியா தேடிக்கலாம்.
மறக்கவே முடியாத நபர்? - இருக்காங்க. என் வாழ்க்கையில் நம்பவே முடியாத அதிசயத்தை ஏற்படுத்திய ஒரு சுவாமிஜி.
மனதில் பதிந்த வாசகம் அல்லது சொல்? - நாம என்ன பண்ணாலும் கண்டிப்பா நமக்கும் அதுவே திரும்ப நடக்கும். எல்லாம் காரணத்துக்காகவே நடக்கிறது.
மறக்க முடியாத தேதி? - எதையும் பெரிதாக நினைவில் வைத்துக்கொள்வ தில்லை.
திரும்பத்திரும்பப் போகுமிடம்? - திருவண்ணாமலை கிரிவலம்.
இதுதான் நான்...? - ஒரு சின்ன தப்பைக்கூட மறந்தும் செய்துவிடாமல், ரொம்ப சரியா அறத்தோட வாழணும்னு நினைச்சுக்கிட்டுதான் தினமும் எழுந்திருப்பேன். சிறந்த மனிதரா வாழ்வதுதான் என் நோக்கம்.