எனக்குச் சர்வமும் தாளமயம்! | காபி வித் அம்ரித் ராம்நாத்

எனக்குச் சர்வமும் தாளமயம்! | காபி வித் அம்ரித் ராம்நாத்
Updated on
2 min read

2024இல் வெளியான ‘வருஷங்களுக்கு சேஷம்’ என்கிற மலையாள திரைப் படத்தில் ரசிக்கும்படியான பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் விரைவில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். ‘காதல் அலைபாயுதே’, ‘மனசே…’ பாடல்களைப் போன்று தமிழ் சுயாதீன இசைப் பாடல்களை அவ்வப்போது தனது யூடியூப் பக்கத்தில் வெளியிடும் இவர், பிரபல கர்னாடக இசைக் கலைஞர், திரைப்படப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன்.

இசை மெட்டுகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தவரோடு காபிக் கோப்பையுடன் ஓர் உரையாடல்:

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - சிறு வயது முதல் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் ‘சமத்துப் பையன்’ நான். இரவில் இசைப்பணி தொடர்ந்தாலும், அடுத்த நாள் காலை சூரிய வணக்கம் மட்டும் ‘மிஸ்’ ஆகாது.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - சரியான ‘ஒர்க் அவுட்’ இருந்தால்தான் பிடித்ததைச் சாப்பிட முடியும்.

தனித்துவமான பழக்கம்? - ‘சோலோ’வாக காரில் ஒரு ‘லாங் டிரைவ்’ போயிட்டு வந்தால்போதும், ‘ஆல் இஸ் வெல்’.

மறக்க முடியாத தருணம்? - அம்மாவின் வரிகளில், என்னுடைய இசையில் உருவான ‘ஞாபகம்’ பாட்டுக்காகத் திரையில் தோன்றியத் தருணம், ரொம்பவே ’எமோஷனல் மொமெண்ட்’.

இந்த வேலை இல்லையெனில்? - எனக்குச் சர்வமும் தாளமயம்! ஒரு வேளை இது இல்லையெனில் ஓவியனாகி இருப்பேன்.

எதிர்காலக் கனவு? - இசைத் துறையில் வளரணும். சொந்தமாக ஒரு படம் இயக்கும் திட்டமும் உள்ளது.

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - தினமும் ஒரு திரைப்படம் பார்க்கும் மொரட்டு ‘மூவி பஃப்’ நான்.

பொழுதுபோக்கு? - சாப்பிடப் பிடிக்கும். அதுவும் ஒரு ‘ஹாபி’தானே?

பிடித்த சமூக வலைதளம்? - சோஷியல் மீடியாவில் அவ்வளவு ஆர்வம் இல்லை. என்றாலும், ’ஸ்பாடிஃபை’ மட்டும் அதிகம் பயன்படுத்துவேன்.

நெருங்கிய நண்பர்? - இசையும், இசை இல்லாத அனைத்து விஷயங்களைப் பற்றியும் அம்மாவிடம்தான் பகிர்ந்துகொள்வேன். இது இப்படி, அவர் அப்படி என முன்தீர்மானமின்றிப் பழகும் அம்மாதான் என்னுடைய ‘குளோஸ் ஃபிரெண்ட்’. என்னுடைய முயற்சிகளுக்கு எப்போதும் ஊக்கமளித்து என்னோடு உடன்நிற்பவர்.

மனதில் பதிந்த பாடல்? - இப்போதைக்கு ‘ராவணன்’ படத்தில் வரும் ‘நான் வருவேனே’ பாடல். அம்மா பாடிய ‘சக்கர முத்தே’ என்கிற திரைப்படம் அல்லாத ஒரு பாட்டு ‘ஆல்வேஸ் ஃபேவரைட்’.

சமீபத்தில் வெளியான இசைப்பாடல் பற்றி? - சாதி, மதம், மொழி, எல்லைகள் கடந்தது, ‘காதல்’. அதுவும் காலத்தால் அழிக்க முடியாத முதல் காதலைப் பற்றிய ஒரு பாடல்தான் ‘காதல் அலைபாயுதே’. நினைவுகளைக் கிளறிவிடும் ஒரு ஜாலியான பாட்டு.

மறக்க முடியாத தேதி? - 2023, மார்ச் 23. ‘வருஷங்களுக்கு சேஷம்’ படத்தில் இசையமைப்பாளராக ‘கமிட்’ ஆன நாள்.

திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்? - வீட்டிலிருந்து நடந்துபோகும் தூரத்தில் உள்ள கடற்கரையில்தான் ‘லிவ்விங்ஸ்டன்’.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in