

‘எஞ்சாயி எஞ்சாமி’, ‘ஒரசாத…’, ‘ராட்டி’ போன்று பல சுயாதீன ‘ஹிட்’ பாடல்களையும், அண்மையில் வெளியான ‘நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படத்தையும் இயக்கியவர் அமித் கிருஷ்ணன். உலகத் தரத்தில், தனித்துவமான பாணியில் பாடல் காட்சிகளை உருவாக்கும் அமித்தோடு காபிக் கோப்பையுடன் ஓர் உரையாடல்.
சூரிய உதயத்தைப் பார்க்கும் பழக்கம் உண்டா? - ‘ஷூட்’ இருந்தால் பார்ப்பேன். இல்லையெனில் காலை 9 மணிக்குத்தான் பொழுது விடியும்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - வீட்டிலேயே கொஞ்சம் ‘ஒர்க்-அவுட்’; கொஞ்சம் ’ஃபாஸ்டிங்.’
தனித்துவமான பழக்கம்? - எந்தவொரு விஷயத்தையும் காட்சிப்படுத்தி பார்க்கும் பழக்கம் உண்டு என்பதால் மண்டைக்குள் ‘கிரியேட்டிவ் விஷூவல்’ டிரெய்ன் மாதிரி ஓடிக்கொண்டே இருக்கும்.
மறக்க முடியாத தருணம்? - குழந்தை பிறந்த தருணம். இப்போது அவனுக்கு ஒரு வயது.
இந்த வேலை இல்லையெனில்? - ‘செஃப்’ ஆகி துபாய் அல்லது அமெரிக்காவில் கடையைத் திறந்திருப்பேன்! ஐடியா இல்லாம போச்சு!
எதிர்காலக் கனவு? - வெள்ளித் திரையில் ‘இயக்குநர் அமித் கிருஷ்ணன்’னு என்னோட பெயரைப் பார்க்கணும்.
புத்தக வாசிப்பா,திரை அனுபவமா? - எப்போதும் படங்கள், படங்கள், படங்கள்தான்.ஏன்னா, ‘விஷூவல்’ஸை நோட் பண்ணணும்ல.
பொழுதுபோக்கு? - என் மகன் ‘பூமி’யோடு நேரம் போவதே தெரியாது!
பிடித்த சமூக வலைதளம்? - இன்ஸ்டகிராமும் யூடியூபும். ஆனால், ‘9Gag' எனும் தளம் செய்திகளை மீம் வடிவில் தருகிறது. இதுதான் இப்போதைய ஃபேவரைட்!
உறங்கவிடாதது? - என்னுடைய இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளியாகும் வரை ‘நோ’ தூக்கம்.
ஓரே நம்பிக்கை? - ரிட்லி ஸ்காட் போல 40களிலும் இயக்குநர் ஆகலாமே!
மறக்கவே முடியாத நபர்? - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. 10 ஆண்டுகள் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். யூடியூபுக்காக முதல் முதலில் 4கே தொழில்நுட்பத்தில் நான் உருவாக்கிய வீடியோ ரஹ்மானுக்காகத்தான்.
மனதில் பதிந்த சொல்? - கிளாப்-போர்டைக் கையில் வைத்துக்கொண்டு சூட்டிங் ஸ்பாட்டில் நான் சொல்லும் ‘ஆக்ஷன் - கட்.’
மறக்க முடியாத தேதி? - 2020, டிசம்பர் 26. கரோனாவால் 50 பேரோடு நடந்து முடிந்த என்னுடைய டும் டும் டும்...
திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்? - உலகம் முழுக்கச் சுற்றினாலும் சென்னைக்கு வந்து வீட்டுக்குள் புகுந்தால்தான் சுகம்.
‘அமித் கிருஷ்ணன்’ - ஒரே வரியில்? - வேலைன்னு வந்துட்டா கெட்டிக்காரன்.