நடுவுல கொஞ்சம் ‘குவிஸ்’ காலம்!

நடுவுல கொஞ்சம் ‘குவிஸ்’ காலம்!
Updated on
2 min read

நண்பர்கள் கூட்டம் ஒன்று கூடினால் என்ன செய்யும்? அரட்டை அடிக்கும், பாட்டுப் பாடும், நடனம் ஆடும், சினிமாவுக்குச் செல்லும், ஒளிப்படங்களை ‘கிளிக்’கி இன்ஸ்டகிராமில் பதிவிடும். இதெல்லாம் வழக்கமாக நடைபெறும் விஷயங்கள்தாம் என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால், விதிவிலக்காகச் சில இளைஞர்கள், ஏதாவது ஓரிடத்தில் கூடி ‘குவிஸ்’ விளையாடிப் பொழுதைப் போக்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

‘குவிஸ்’ மாஸ்டர் அபிஷேக்: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக் பரத்குமார். 2020இல் கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டுக்குள் முடங்கியிருந்த தருணம். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘குவிஸ்’ பாணியில் சில கேள்விகளைப் பகிரத் தொடங்கினார். ஒரு சில நண்பர்கள் ஆர்வத்தோடு பதிலளிக்க, தொடர்ந்து இது போன்று ஆன்லைனில் ‘குவிஸ்’களைப் பதிவிட்டு வந்தார்.

இன்ஸ்டகிராமில் இப்படித் தொடங்கிய இவருடைய பயணம் ‘ஆஃப்லை’னிலும் தடம் பதிக்க உதவியது. தற்போது சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், பொது இடங்கள், குடும்ப விழாக்கள் எனப் பலதரப்பட்ட இடங்களிலும் ‘குவிஸ்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார் அபிஷேக்.

டிரெண்டாகும் ‘குவிஸ்’ - “பள்ளிப்படிப்பு முதலே ‘குவிஸ்’ போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தது. ஆனால், படிப்பை முடித்த பிறகு ‘குவி’ஸில் பங்கேற்க சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கரோனா பொது முடக்கத்தின்போது நேரத்தைக் கழிக்கச் சமையல், உள்ளரங்கே விளையாட்டு என ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைக் கையில் எடுத்தார்கள். எனக்கு 80ஸ், 90ஸ் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கப் பிடிக்கும்.

அதனால் இந்தப் பாடல்களை வைத்து இன்ஸ்டகிராமில் சில கேள்விகளைப் பதிவு செய்தேன். எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து இசை, விளையாட்டு, சினிமா, ‘வெப்-சீரீஸ்’ எனப் பல்வேறு தலைப்புகளில் ‘குவிஸ்’ கேள்விகளைப் பதிவிடுமாறு நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்போது ஆரம்பித்து இதுவரை 245 ‘இன்ஸ்டகிராம் குவிஸ்’களைத் தொகுத்துள்ளேன்” என்கிறார் அபிஷேக்.

இப்படி ஆரம்பித்த அபிஷேக் பரத்குமாரின் ‘குவிஸ்’ பயணம் ஆஃப்லைனுக்கும் பின்னர் மாறியது. பொதுஅறிவு வினா-விடை முதல் கிரிக்கெட், இளையராஜா, ‘தல-தளபதி’ எனப் பல்வேறு தலைப்புகளிலும் ‘குவிஸ்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார் அபிஷேக். இந்த நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு இருக்கிறதா?

“‘குவிஸ்’ ஒருவருடைய மூளைக்கு வேலை தரும், சிந்திக்கத் தூண்டும். சிறியவர் முதல் பெரியவர் வரை ‘குவிஸ்’ போட்டி என்றால் உற்சாகம் அடைவார்கள். இரண்டு அல்லது மூன்று பேராகச் சேர்ந்து ஒரு அணியாக விளையாடும்போது அறிவும் வளரும், பொழுதும் கழியும். இதனால், இந்தப் புதிய ‘குவிஸ்’ கலாச்சாரத்துக்குத் தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது” என்கிறார் அபிஷேக்.

அபிஷேக் பரத்குமார்
அபிஷேக் பரத்குமார்

பேப்பர்-பேனா ‘குவிஸ்’ - 40-50 ஆண்டுகால பழமையான ‘குவிஸ்’ கலாச்சாரம் என்றால் கேள்விகள் கேட்கும்போது பேனாவால் பேப்பரில் பதில் எழுதுவதுதான் முறை. இந்த முறையை அடித்துக்கொள்ள முடியாது என்கிறார் அபிஷேக்.

“குவிஸ் நடத்த அதிக எண்ணிக்கையிலான ஆள்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒரு வேளை, அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இருக்கும்போது அணிகளாகப் பிரித்து ‘குவிஸ்’ நடத்துவேன். இதில் முதல் சுற்று எப்போதும் பேப்பர் - பேனாவில் பதில் எழுதும் சுற்றுதான். இதிலிருந்து தேர்வு செய்து அடுத்த கட்டமாக ‘ராபிட் - ஃபயர்’, ‘பஸ்ஸர்’ சுற்றுகளை நடத்தி, இறுதியாக வெற்றி பெறும் அணியைத் தேர்வு செய்வோம்.

இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த சமூக வலைதளமான இன்ஸ்டகிராமில்கூட ‘குவிஸ்’ எனும் ஆப்ஷன் உண்டு. பயனர் தனக்குப் பிடித்த கேள்விகளைப் பதிவு செய்து, பகிரலாம். ஆனால், என்னதான் டிஜிட்டல் வளர்ச்சி கண்டுவிட்டாலும் ‘பேப்பர் - பேனா குவிஸ்’ முறைக்கு ஈடாகாது. இதனால், சில மணி நேரம் திறன்பேசியைத் தள்ளிவைத்துவிட்டு மூளைக்கு வேலை தருவது நல்லதுதானே? நண்பர்களுடன் சேர்ந்து ‘குவிஸ்’ஸில் பங்கேற்கும்போது கண்டிப்பாக சுவாரசியம் கூடும்” என்கிறார் அபிஷேக்.

ஒரு ‘குவிஸ்’ நிகழ்ச்சிக்கான கேள்வி - பதில்களைத் தயாரிக்க 7 - 14 நாள்கள் எடுத்துக்கொள்கிறார் அபிஷேக். தலைப்பைச் சுற்றி முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு கேள்விகளைத் திரட்டி, சரியான பதில்களைச் சேகரித்து சுவாரசியமான முறையில் ‘குவிஸ்’ போட்டியைத் தொகுத்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், இந்த ‘குவிஸ் மாஸ்டர்’.

‘குவிஸ் மாஸ்டர்’ அபிஹேக்கின் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பின்தொடர: https://www.instagram.com/quizmasterab/?g=5

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in