பிரக்ஞானந்தா எனக்கு நண்பன்!

பிரக்ஞானந்தா எனக்கு நண்பன்!
Updated on
2 min read

இன்று இந்திய மகளிர் செஸ் முகமாக அறியப்படும் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, அர்ஜுனா விருது உள்படப் பல விருதுகளைப் பெற்றவர். சர்வதேச செஸ் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று, வெற்றிகளைக் குவித்துவரும் வைஷாலியின் பேட்டி.

செஸ் மீது ஆர்வம் வந்தது எப்படி? - சிறு வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பேன். இதனால், படிப்பில் எனக்கு ஆர்வ மில்லாமல் போய்விடுமோ என்று என் பெற்றோருக்குப் பயம். அதிலிருந்து என்னைத் திசை திருப்ப செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டனர். அப்படித்தான் செஸ் அறிமுகமானது. அதுமட்டுமல்ல, புதிர்களை விடுவிப்பதில் ஈர்ப்பு இருந்தது. அதுவும் செஸ்ஸை இறுகப் பற்றிக்கொள்ள ஒரு காரணம்.

முதன்முதலில் செஸ்ஸைக் கையில் எடுத்த வைஷாலிக்கும் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கும் இடையே என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்? - சிறு வயதில் செஸ் விளையாடும் போது இனம் புரியாத மகிழ்ச்சி கிடைக்கும். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. வளர்ந்த பிறகு பட்டங்களைப் பெறுவதற்காக விளையாடத் தொடங் கினேன். வெற்றி ஒன்றே இலக்காக இருந்தது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிறகும் அதே மனநிலைதான் நீடித்தது. ஆனால், சமீபமாக என்னுடைய அணுகுமுறையில் மாற்றம் வந்துள்ளது. பட்டங்களின் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் செஸ் விளையாட்டை ரசித்து விளையாட ஆரம்பித்துள்ளேன்.

செஸ் பயணத்தில் உங்கள் பெற்றோரின் பங்கு பற்றிச் செல்லுங்கள்... நானும் தம்பியும் சாதனைகளைப் படைப்பதற்கு எங்கள் பெற்றோரே முதல் காரணம். அப்பா ரமேஷ் பாபு வங்கியில் பணிபுரிகிறார். அவர்தான் எங்கள் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறார். வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும்போது அம்மா நாகலட்சுமி எங்களுடன் வருவார்.

வெளிநாடுகளில் போட்டி நடக்கும்போது உணவு எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். சாப்பாடு சரியில்லை என்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, போட்டியில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதனால் அம்மாவே எங்களுக்குச் சமைத்துக் கொடுத்துவிடுவார்.

இரண்டு கிராண்ட் மாஸ்டர்கள் ஒரே வீட்டில் இருக்கிறீர்கள். அந்த அனுபவம்? - பிரக் எனக்கு நல்ல நண்பன். அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே செல்லச் சண்டைகள், கிண்டல்கள் எல்லாம் நடக்கும். எதைப் பற்றியும் அவருடன் பேசலாம். சின்ன வயதிலிருந்து செஸ்ஸுடன் பயணிப் பதால் எங்களுடைய உரையாடல் பெரும்பாலும் செஸ்ஸைச் சுற்றியே இருக்கும்.

அதுதான் எங்களை மற்ற அக்கா - தம்பியிடமிருந்து வேறு படுத்துகிறது. விளையாட்டு சார்ந்து எங்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால், ஒருவருக்கு இன்னொருவர் துணையாக இருக்க என்றுமே தவறியதில்லை. செஸ்ஸைப் பற்றி அவருடன் உரையாடுவது எனக்கு உதவியாக இருந்திருக்கிறது.

மறக்க முடியாத வெற்றி? - கிராண்ட் மாஸ்டர் நிலையை அடையவேண்டும் என்பது என் நீண்டகாலக் கனவு. அது சமீபத்தில்தான் நிறைவேறியது. அந்தப் பட்டம் கிடைத்தபோது பெரும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெற்றேன். கடந்த வருடம் ‘மகளிர் கிராண்ட் ஸ்விஸ்’ போட்டியில் வெற்றி பெற்றேன். இந்த வெற்றி மூலம் ‘கனடா வுமன் கேண்டிடேட்ஸ்’ போட்டிக்குத் தேர்வாக முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in