Published : 22 Aug 2014 00:00 am

Updated : 22 Aug 2014 14:47 pm

 

Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 02:47 PM

டிகிரி இளைஞர்களின் டிகிரி காஃபி...

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் உள்ள இளைஞர்கள் ரெஃப்ரஷ்மன்டுக்காக எப்போதாவது டிகிரி காஃபி குடிப்பார்கள். ஆனால், இந்த டிகிரி படித்த இளைஞர்கள் ‘டிகிரி காஃபி' தயாரிப்பையே தங்கள் தொழிலாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஜெயராமன் (27), குருநாதன்(27), வெற்றிச்செல்வன்(28) ஆகிய மூவரும் இன்ஜினீயரிங் முடித்துவிட்டுத் தங்கள் துறை சார்ந்த வேலையிலும் சேர்ந்தார்கள். ஆனால், ஒரு காலகட்டத்தில் வேலையை உதறிவிட்டு மூவரும் இணைந்து 'கான்செப்டோ டெலிகசிஸ்' என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இதன் இரண்டு அங்கங்கள் காப்பி குடில், எக்ஸ்குளூசிவ்.


சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும், அதுவும் உணவு சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என எது உந்து சக்தியாக அமைந்தது. சொந்த தொழில் புரிவதில் உள்ள சவால்களும், சந்தோஷங்களும் என்ன? உங்களை இணைத்த மையப்புள்ளி எது? எதிர்கால திட்டம் பற்றிக் கூறவும் என அவர்களிடம் கேட்டபோது சுறுசுறுப்பாக சுடச்சுட தகவல்கள் பல அளித்தனர்.

‘‘நாங்கள் மூவருமே பள்ளிக்கூட சினேகிதர்கள். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக சேர்ந்து விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவோம். எங்கள் மூவருக்கும் பிடித்த பொதுவான விஷயம் காபி. நல்ல காபியைத் தேடி பலமுறை அலைந்திருக்கிறோம்.

ஆனால், பின்னாளில் வேலைக்குச் சென்ற பிறகு, எங்கள் பணியிடத்திற்கு அருகில் உள்ள காபி பாரிலேயே தான் காபி குடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அந்தக் கடையில் சுத்தம் பார்க்க முடியாது, சிகரெட் புகை இருக்கிறதே என சுகாதாரம் பேண முடியாது. இதுபற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம். அப்போதுதான் நாம் மூவரும் இணைந்து ஏன் காஃபி ஷாப் ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் உதித்தது.

‘ரெஃப்ரஷ்மன்ட்'

இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் நிறைய மெனக்கிடுதல் இருந்தது. ஒரு சர்வே செய்தோம், நீங்கள் ரெஃப்ரஷ்மன்ட்டுக்காக என்ன குடிக்க விரும்புவீர்கள் எனக் கேட்டபோது 95% பேர் நல்ல காபி எனப் பதிலளித்தனர்.

சரியான பாதையிலேயே செல்கிறோம் எனக் களத்தில் இறங்கினோம். முதல் அவுட்லெட்டைத் தஞ்சையில் சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கினோம். இப்போது சென்னை, ஈரோடு, கொல்கத்தா என மொத்தம் 7 கிளைகள் இருக்கின்றன.

உடல்நலன் முக்கியம்

நாங்கள் காபி ஷாப் ஆரம்பிக்கும் போதே அது மேற்கத்திய காபி ஷாப் போல இருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தோம். அதற்கேற்பவே, சுக்கு காப்பி, பனங்கற்கண்டு பால், கிரீன் டீ என உடல்நலத்திற்குச் சிறந்த பானங்களைத் தேர்வு செய்தோம்.

எங்களது அவுட்லெட்டுகள் கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகளில் இருக்கின்றன. இளைஞர்கள் இந்த ஹெல்த் டிரிங்கை மிகவும் ரசிக்கின்றனர். இன்னொரு முக்கிய விஷயம், மற்ற டீ ஸ்டால்களைப் போல் எங்கள் காபி குடிலில் நாங்கள் புகையிலைப் பொருட்களை அனுமதிப்பதில்லை என்றார் ‘கான்செப்டோ டெலிகசிஸ்' இயக்குநர் ஜெயராமன்.

இதேபோல், குறைந்த விலையில் சத்தான உணவு என்ன வழங்கலாம் என்று யோசித்தபோது விளைந்ததே ‘எக்ஸ்குளூசிவ்' கான்செப்ட். முட்டையை வைத்துக்கொண்டு 30-க்கும் மேலான வெரைட்டி தருகிறோம்.

ஒவ்வொரு சின்ன ரெஃப்ரஷ்மன்ட்டும் ரியல் ரெஃப்ரஷ்மன்ட்டாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். வாழ்க்கையில் இப்படிப்பட்ட சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வேண்டும். அதை நாங்கள் எங்களுக்குச் சாதகமான தொழிலாக மாற்றிக்கொண்டோம்.

காபி குடில் நல்ல வரவேற்பு பெற்று 100 கிளைகளாவது தொடங்க வேண்டும். நிறைய தொழில் முனைவோர் உருவாக வேண்டும். இதுவே எங்கள் இலக்கு’’, என்கிறார்கள். அவர்கள் பேச்சில் டிகிரி காபிக்கு இணையான திடமும், சுவையும் இருந்தன.

தவறவிடாதீர்!


    டிகிரி காஃபிஇளைஞர்கள்உடல்நலன்ரெஃப்ரஷ்மன்ட்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x