ஒரு தாரகையின் தூரிகை சவால்!

ஒரு தாரகையின் தூரிகை சவால்!
Updated on
2 min read

அக்டோபர் மாதம் முழுவதும் ஓவியம் வரைவதை ‘இங்க்டோபர்’ சவாலாகப் பின்பற்றுகிறார்கள், ஓவியர்கள். அந்த வகையில் 31 நாள்கள் என வரையறுக்கப்பட்ட ‘இங்க்டோபர்’ சவாலை 100 நாள்களுக்கு நீட்டிக்கத் திட்டமிட்டிருக்கிறார் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞர், வித்யா பெனோ. வண்ணப் பூக்கள், 90ஸ் கிட்ஸ் நினைவுகள், மனிதர்கள், விலங்குகள் என எதையும் தனித்துவமாக வரைவதில் கெட்டிக்காரரான இவரது ஓவியங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ரகம்.

100 நாள்கள் 100 ஓவியங்கள்: மென்பொருள் பொறியாளரான வித்யாவுக்குச் சிறு வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் அதிகம். படிப்பு, அலுவலகப் பணிகளைத் தாண்டி நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்து ஓவியக் கலையை மெருகேற்றிக் கொண்டார். அதென்ன 100 நாள்கள் சவால்?

“பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஓவியத்தில் ஆர்வமிருந்ததால் சொந்தமாக ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன். கரோனா பொது முடக்கத்தில் நேரத்தை வீணடிக்காமல் இருக்க மீண்டும் ஓவியக் கலையைக் கையில் எடுத்தேன். ஓவியத்தில் தேர்ச்சி பெற வேண்டுமானால், பயிற்சி அவசியம். இதுவே ‘இங்க்டோப’ரின் மையக் கருத்தும்கூட.

நாளொன்றுக்கு ஓர் ஓவியம் என 30 நாள்கள் தொடர்ந்து ஓர் திறனைப் பயிற்சி செய்யும்போது, முடிவில் உங்களது திறன் முன்னேற்றம் அடைந்திருக்கும், சுய பகுப்பாய்வு செய்துகொள்ள முடியும். இந்த 30 நாள்கள் சவாலை நான் 100 நாள்களாக நீட்டித்துக்கொண்டேன்” என்று விவரிக்கிறார் வித்யா.

வித்யா பெனோ
வித்யா பெனோ

‘பிராம்ப்ட்’ என்றால்?

‘இங்க்டோபர்’ தொடங்குவதற்கு முன்பே இந்தச் சவாலைத் தொடங்கிவிட்ட வித்யா, வெற்றிகரமாக நாற்பது நாள்களைக் கடந்துவிட்டார். ‘ப்ரோ கிரியேட்’ எனும் மென்பொருளைப் பயன்படுத்தி டிஜிட்டலில் வரையும் வித்யா, வித்தியாசமாக யோசித்துத் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்.

“பொதுவாக இங்க்டோபர் மாதத்தின்போது சர்வதேச அளவில் ஓவியக் கலைஞர்களுக்கான ‘பிராம்ப்ட்’ ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதாவது, நாள்தோறும் என்ன கருப்பொருளில் வரைய வேண்டும் என்கிற தலைப்பை ‘பிராம்ப்ட்’ என்பார்கள்.

ஆனால், பெரும்பாலும் அந்த ‘பிராம்ப்ட்’ தலைப்புகளைப் பின்பற்றாமல் என்னுடைய பலம், பலவீனத்தைப் பொறுத்து எனக்கு விருப்பமான தலைப்புகளை நானே தேர்வு செய்து வரைவேன். இப்படித்தான் ‘90ஸ் கிட்ஸ் நினைவுகள்’ எனும் தலைப்பில் 30 ஓவியங்களை 2022இல் வரைந்தேன். இம்முறை அப்படித் தலைப்புக்குள் அடைபடாமல் மனதுக்குப் பிடித்தவற்றை வரைகிறேன்” என்கிறார் வித்யா.

இடைவெளி தவறில்லை: ‘Vidhyaawsm' என்கிற தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஓவியங்களைப் பதிவேற்றுகிறார் வித்யா. திறன்பேசியில் மூழ்கிக்கிடக்கும் சிறுவன், பூவோடு உரையாடும் சிறுமி, ‘பூ’ இறக்கை கொண்ட டிராகன் போன்ற ஓவியங்கள் இவரது பக்கத்தை ஆக்கிரமித்துள்ளன. பொதுவாக ‘இங்க்டோபர்’ சவாலைப் பொறுத்தவரை 31 நாள்களும் இடைவெளி இல்லாமல் வரைய வேண்டும் என்பதே இலக்கு. ஆனால், அப்படியான விதிமுறை எல்லாம் இல்லை என்கிறார் வித்யா.

“பயிற்சி செய்யவும் திறனை வளர்த்துக் கொள்ளவே இங்க்டோபர் சவாலை ஓவியர்கள் ஏற்கிறார்கள். ஆனால், இடைவெளி இல்லாமல் வரைய வேண்டுமென்பது ஒருவித மன அழுத்தத்தைத் தரலாம். அதற்குள் சிக்கிவிடாமல் இருப்பதே நல்லது. இதனால், ஓரிரு நாள்கள் இடைவெளி எடுப்பதில் தவறில்லை. இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரைய உட்காரும்போது சிறப்பான படைப்பை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ள வேண்டும்” என்று இங்டோபர் ஓவியர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் வித்யா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in