

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் வந்தாலே ஓவியர்களும் வர்ணனையாளர்களும் ‘இங்க்டோபர்’ (Inktober) சவாலை கையில் எடுத்துவிடுகிறார்கள். ஓவியக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக, அக்டோபர் முழுவதும் தினமும் ஒரு படைப்பை ஓவியக் கலைஞர்கள் பகிர வேண்டும் என்பதுதான் அந்தச் சவால். ஆனால், அக்டோபரில் மட்டுமல்ல, தனது ஓவியப் படைப்புகளில் ஆண்டுதோறும் புதுமையான முயற்சிகளைப் புகுத்திவருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர் மரியான் பிரிட்டோ.
பூக்கதைகள்: பொறியாளர், ஃபிரெஞ்சு மொழி கற்பிப்பவர், ஓவியக் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர் மரியான். ‘பாக்கெட்’ அளவு நோட்டு புத்தகத்தில் பூக்களை மையமாகக் கொண்டு இவர் வரையும் ஓவியங்களுக்கு சமூக வலைதளங்களில் ஏக வரவேற்பு. சாதாரணமாக எடுக்கப்படும் ‘பூ’ ஒளிப்படங்களை மெருகேற்றி, கற்பனைக் கதைகளை உருவாக்கி அதை ஓவியமாக வரைகிறார் இவர். ‘மலர் குளியல்’, ‘மலர் முறுக்கு’, ‘மலர் ஊஞ்சல்’ என ஓவியங்களை வரைந்து வரும் இவர், 100 ஓவியங்களை வரையத் திட்டமிட்டிருக்கிறாராம். தனது நண்பர்கள் ‘கிளிக்’கியுள்ள ஒளிப்படங்களைப் பூக்கதைகளாக வரைந்து வருகிறார். அதென்ன பூக்கதை?
“எண்ணற்ற வகைகளிலும், வண்ணங்களிலும் இயற்கைப் பரிசளித்திருக்கும் பூக்களைக் கொண்டு கதை சொல்லும் முயற்சிதான் இந்த ‘பூக்கதைகள்’. கடந்த ஆண்டு ‘மேகக் கதைகள்’ எனும் தலைப்பில் மேக ஒளிப்படங்களைச் சுற்றி கதைகளை டிஜிட்டலில் ஓவியங்களை உருவாக்கினேன். இம்முறை ‘பூ’ ஒளிப்படங்கள். இவற்றுக்கு ‘வாட்டர்-கலர்’ பயன்படுத்துகிறேன். ஒரு முறுக்கை பிழியும்போது அதிலிருந்து பூக்கள் விழுவது போல கற்பனைக் கதைகளை வரைகிறேன். ஓவியத்தின் வழியே பார்த்தவுடன் ‘ஒரு வரிக் கதை’யை மற்றவர்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதில் சவால் அதிகம்” என்று விவரிக்கிறார் மரியான்.
பயிற்சி வேண்டும்: உலகம் முழுவதும் பிரபலமான ‘இங்க்டோபர்’ சவாலை ஓவியக் கலைஞர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானலும் முயலலாம். ஆனால், ஒரு மாதம் மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் கற்பனை வளமும் ஓவியம் வரைவதிலும் முன்னேற்றம் ஏற்படும் என்கிறார் மரியான். “முன்பு காகிதத்தில் வரைந்தோம், தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்டன.
ஆனால், எந்தத் தளமானாலும் ஓர் ஓவியர் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாள்தோறும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி, ஏதாவது ஓர் ஓவியத்தை வரைந்து பழகினால், கற்பனைத் திறனும் ஓவியம் வரையும் நுண்ணுக்கமும் முன்னேற்றம் அடையும்” என்கிறார் மரியான்.
‘இங்க்டோபர்’ சவாலை அக்டோபரில் ஏற்கத் தயாரா?