

அண்மையில் வெளியான ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. இதில் ‘கொட்டுக்காளி’ படம் பின்னணி இசையைச் சேர்க்காமல் ‘லைவ் சவுண்ட்’டில் படத்தைக் காட்டியது பலருடைய கவனத்தைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுக்குமே ஒலிக் கலவை (Sound mixing) பணிகளைச் செய்தவர்,புதுச்சேரியைச் சேர்ந்த சுரேன்.ஜி.
கதையின் ஒலி: இந்த இரண்டு படங்களுக்கு முன்பாகவே ‘இறுதிச்சுற்று’, ‘காலா’, ‘மாமன்னன்’ உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலி வடிவமைப்பாளராகவும் (Sound designer), ஒலி கலவையாளராகவும் (Sound mixer) பணியாற்றியவர். ஒரு திரைப்படத்தில் ஒளிப்பதிவுக்கு நிகராக ஒலிப்பதிவும் முக்கியமானது. இதில் மேற் கொள்ளப்படும் ‘ஒலிக் கலவை’ குறித்து சுரேன் விரிவாகப் பேசினார்.
“வசனங்கள் அடங்கிய ‘டப்பிங் டிராக்’, இசைப் பாடல்கள், பின்னணி இசை ஆகியவை ஒரு திரைப்படத்தின் ஒலிகள் என வைத்துக்கொள்வோம். இந்த மூன்றும் வெவ்வேறு டிராக்குகளாக ஒலிக் கலவையாளரிடம் வந்து சேரும். படத்தொகுப்புப் பணிகளுக்குப் பிறகு, ஒரு படத்தில் ‘டப்பிங் டிராக்கின்’ சத்தம் எந்த அளவு கேட்க வேண்டும் என்பதில் தொடங்கி பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றின் ஒலி அளவுகளைத் தீர்மனிப்பதுதான் ஒலிக் கலவையின் பிரதான பணி.
ஒரு படத்தின் கதைக் களத்துக்கேற்ப தேவையான அளவில் ஏற்ற, இறக்கத்தோடு சில இடங்களில் நிசப்தத்தையும் பொருத்த வேண்டியது ஒலிக் கலவையில் முக்கியம். படத்தின் இயக்குநர் எதிர்பார்த்தபடி கதைக்கும், கதையின் உணர்வுகளுக்கும் பலம் சேர்க்கக்கூடிய ஒலியைத் திரையில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் இலக்கு” என்று விளக்குகிறார் சுரேன்.
கூட்டு முயற்சி: பொறியியல் படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு வந்துவிட்ட சுரேன், தமிழ் சினிமாவின் ஒலிப்பதிவுத் துறையில் உதவியாளராகத்தான் தன்னுடைய பணியைத் தொடங்கினார். 2013 இல் வெளியான ‘வணக்கம் சென்னை’தான் அவருடைய முதல் படம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிக் கலவையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இயக்கம், இசை, ஒளி, நடிப்பு போன்று சினிமாவின் மற்ற துறைகளைப் போல அதிகம் வெளிச்சம் விழாத ஒலிப்பதிவுத் துறையின் பணிகள் மிகவும் சுவாரசியமானதும், சவால் நிறைந்ததும்கூட. அந்தச் சவாலுக்குத் தீனிபோடும் வகையில் தன் திறமையை ‘கொட்டுக்காளி’யில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
“ஒரு திரைப்படத்தின் ஒலி என்பது ஒரு தனி உலகம். அந்த ஒலி சார்ந்த வேலைப்பாடு படப்பிடிப்புக்குப் பிறகு ஸ்டுடியோவில்தான் நடைபெறும் என்கிற பிம்பம் உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் படப்பிடிப்புத் தளத்திலிருந்தே ஒலிப்பதிவு வேலைகளைத் தொடங்குகிறோம். திரைக்கதையைப் படித்துவிட்டு அதற்கேற்ப சில முன்னேற் பாடுகளோடு படப்பிடிப்பு தளத்திலேயே சில நுணுக்கமான ஒலிகளைப் பதிவு செய்துவிடுவோம்.
‘கொட்டுக்காளி’யில் இயக்குநர் வினோத் ராஜின் திட்டத்துக்கேற்ப, இசை இல்லாமல் ‘லைவ் சவுண்ட்’ கொண்டு படத்தின் ஒலிப்பதிவை மேற்கொண்டோம். கதை நடைபெறும் நிலத்தின் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய ஒலிகள், திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வசனங்கள் ஆகியவை மட்டுமின்றி குறிப்பாக ஆட்டோவின் ஒலி, காற்றின் ஒலி, ஒருவர் நடந்து செல்லும்போது எழக்கூடிய ஒலி, தேங்காய் உடைக்கும்போது வரக்கூடிய ஒலி, பூச்சிகளின் சத்தம் என ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பதிவு செய்தோம்.
இப்படி ஒவ்வொரு படத்தின் தன்மைக்கேற்ப ஒலியை உருவாக்குவோம். தவிர, தேவைப்பட்டால் ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் டிஜிட்டல் தளத்திலிருந்தும் ஒலிகளைப் பயன்படுத்துவோம். இப்படி படிப்படியாக ஒலியை உருவாக்குபவர்தான் ஒலி வடிவமைப்பாளர். என்னோடு சேர்ந்து அழகியகூத்தன் என்பவர் ஒலி வடிவமைப் பாளராக இப்படத்தில் பணியாற்றினார். ‘கொட்டுக்காளி’யின் தீவிரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான இடங்களில் மட்டும் ஒலிகளைப் புகுத்தினோம்” என்கிறார் சுரேன்.
திரைக்குப் பின் வேலை: “பொதுவாகப் படக்காட்சி நேரடியாகப் படம் பார்ப்பவரின் மனதில் பதியுமென்றால், ஒலிகள் ஆழ் மனதில் மறைமுகமாகப் பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருக்கும். ஒரு திரைப்படத்தின் ஒலி உங்களை உலுக்கவும் செய்யும், ஆசுவாசப்படுத்தவும் செய்யும். படத்தின் உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ள உதவும் ஒலி சார்ந்த வேலைப்பாடுகளில் அதீத கவனம் தேவை” என்பதை அழுத்திச் சொல்லும் சுரேன், “இத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் இருப்ப”தாகவும் கூறுகிறார்.
“சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். ஒரு படத்தின் ஒலி சார்ந்த பணிகளை நிறைவுசெய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும். ‘லைவ் சவுண்ட்’ பதிவு செய்வது தொடங்கி, ‘டப்பிங்’, ஒலிகளை உருவாக்கக்கூடிய ‘ஃபாலி’ (Foley), ஒலி வடிவமைப்பு, ஒலிக் கலவை என ஒவ்வொன்றும் தனித்துறை. இதில் நிபுணத்துவம் பெற்று திரைப்படங்களில் ஒலிப்பதிவுத் துறையில் பணியாற்றலாம்” என்கிறார் சுரேன்.