

உணவை நன்றாக ஒரு கட்டு கட்டும்போது, ‘இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது...’ என்கிற திரைப்படப் பாடலை ஓடவிட்டு, இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் பதிவிடுபவர்கள் ஏராளம். இளைய தலைமுறையினரின் ‘ஹாங்-அவுட் ஸ்பாட்’களாக இருப்பது ‘கஃபே’கள்தான் என்றாலும் புதுமையான உணவு வகைகளைத் தேடிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சென்னை ‘ஃபூடி’களுக்கான சில பரிந்துரைகள்:
‘கில்ட்-ஃப்ரீ’ உணவுகள்: ஒவ்வொரு முறையும் ‘அட்டி’ சேர்ந்து, வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு கூட்டத்தில் ஒருவர் இப்படிப் புலம்புவார், “மச்சான்... இனிமே இப்படிச் சாப்பிடவே கூடாது. இனிமே ‘ஜிம்’ போகப்போறேன்” என்று! இந்த புலம்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்திருக்கின்றன ‘கில்ட்-ஃப்ரீ’ உணவு வகைகள்.
அதென்ன ‘கில்ட்-ஃப்ரீ’ உணவு? ‘வெள்ளை’ப் பொருள்கள் சேர்க்காமல் சமைக்கப்படும் உணவு வகைகளாம் அவை. அதாவது, அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, பால் பொருள்கள் சேர்க்காமல் சமைக்கப்படும் உணவு வகைகள். இந்தப் பொருள்களுக்கு மாற்றாக பாதாம் பால், சீரகச் சம்பா அரிசி, காய்கறிகள், பழங்கள், கோதுமையில் இருக்கும் ‘குளுட்டன்’ என்கிற ஒரு வகையான புரதம் இல்லாத ‘ப்ரீ சாஸ்’ வகைகள் சேர்த்து உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகள் ஆரோக்கியமானதாக இருப்பது மட்டுமல்லாமல் ருசியிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது தனிச்சிறப்பு. தாவர அடிப்படையிலான புரதங்கள் (Plant based protein) நிறைந்த பொருள்களைக் கொண்டு பீட்சா, பர்கர், சாலட்கூடத் தயாரிக்க முடியும் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஈக்கோ-லைஃப் உணவகத்தின் உரிமையாளர் ஜிக்னேஷ்.
“ருசியாகச் சாப்பிட வேண்டும். ஆனால், சாப்பிட்ட பிறகு உடல் ஆரோக்கியம் குறித்து வருந்தக் கூடாது. இப்படிப்பட்ட ஒரு மெனுவைத்தான் ஈக்கோ-லைஃப் உணவகத்தில் தயாரித்திருக்கிறோம். ஆரோக்கியமான உணவு வகைகள் ருசியில்லாமல் இருக்கும் என்கிற பிம்பத்தை உடைக்க வேண்டும். அண்மைக் காலமாக ‘கில்ட்-ஃப்ரீ’ உணவு வகைகள் அதிகம் பரவலாகி வருகின்றன. உடலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘ப்ளேட்டர்’, ‘ரைஸ் பவுல்’, ‘பாஸ்தா’, ‘ரோல்’ வகைகளுக்கு இளையோர் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. வழக்கமான உணவு வகைகளுக்கு விலக்கு அளித்து, அவ்வப்போது ஆரோக்கியமான இந்த உணவு வகைகளையும் ருசித்துப் பார்க்கலாமே!” என்கிறார் ஜிக்னேஷ்.
உலக உணவு வகைகள்: ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா எனக் கண்டங்கள் தாண்டி பிரபலமாக இருக்கக்கூடிய உணவு வகைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘மெக்ஸ் இட் அப்’ உணவகம். ‘வீகன்’ உணவு வகைகள் தொடங்கி சிக்கன் பாணிபூரி முதல் பீஃப் பர்கர் வரை பல புதுமையான உணவு வகைகள் இங்கு விற்பனையாகின்றன. இந்தோனேசியாவின் ‘நாசி கோரங்’, வியட்நாமின் தேங்காய் காபி, அமெரிக்காவின் பிரபல ‘பரிட்டோ பவுல்’ போன்ற உணவு வகைகள் இதில் அடங்கும். இடத்துக்கேற்ப அந்தந்த ஊர்களில் எந்தச் சுவையில் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றனவோ, கிட்டத்தட்ட அதே சுவையைத் தர முயல்கிறார்கள். உள்ளூர் உணவு வகைகளைச் சாப்பிட்டுச் சலித்துப் போனவர்களுக்கு இதுபோன்ற சர்வதேச உணவு வகைகள் ஒரு நல்ல மாற்று. ‘ஃபூடி’களில் புதியன விரும்பிகளுக்கான ஏற்ற இடம் இந்த ‘மெக்ஸ் இட் அப்’.
‘பட்ஜெட் ஸ்பாட்’ - பல உணவகங்கள் புதிதாகத் தோன்றினாலும், ‘பட்ஜெட்’ உணவகங்களுக்கான மவுசு மட்டும் என்றைக்குமே குறைவதில்லை. இப்போதெல்லாம் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி இன்ஸ்டகிராம் ஒளிப்படங்கள் எடுக்க ஏதுவான சூழல் உள்ளதா என்பதுதான் ‘ஃபூடி’களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதைப் பூர்த்தி செய்யும் விதமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிசைனும், ‘சாஸ்’ வகைகளும், சைவ உணவு வகைகளின் ‘ஃபாஸ்ட்-ஃபுட்’டாகவும் விளங்குகிறது சென்னை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள ‘ஜிக்கிஸ்’ உணவகம்.
வழக்கமான ‘ஃபாஸ்ட்-ஃபுட்’ கடைகளைப் போல அல்லாமல் மிளிரும் உள்புற டிசைனும், உட்கார இடமும் கொண்ட ஓர் உணவக அமைப்பிலான இடம்தான் ‘ஜிக்கிஸ்’. பர்கர் சாண்ட்விச் சேர்ந்த பர்கர்விச் எனப்படும் புது வகை உணவும், சிப்ஸ், பீட்சா வகைகளும் மெனுவில் அடக்கம். ஒளிப்படங்களை ‘கிளிக்’க்கிக் கொண்டே நண்பர்களோடு அரட்டையும் சுவையான உணவும் ஒருசேர அமையப் பெற்றால், அந்தத் தருணத்தைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா!