

யூடியூப் கோலோச்சிவரும் இந்தக் காலத்தில், ‘ஃபுட் விளாகர்ஸ்’களாக இருப்பவர்கள் ஏராளம். புது உணவகங்களை, உணவு வகைகளைத் தேடிச் சென்று ‘ரிவ்யூ’ சொல்லும் இந்த ‘விளாகர்ஸ்’ கூட்டத்துக்கு மத்தியில், விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து, ‘குக்கிங் விளாக்’ நடத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கணேஷ் நந்தகுமார். வழக்கமான ‘ரெசிபி’ காணொளிகளைப் போல அல்லாமல், எளிமையாகவும் சுவையாகவும் சமைக்கக்கூடிய ‘பேச்சிலர்’ ரக சமையல் ‘ரெசிபி’களை வழங்குவது இவரது சிறப்பு. இதனால், இவருடைய இன்ஸ்டகிராமை நாடுவோரும் அதிகரித்துள்ளனர்.
எளிமையாகச் சமைக்கலாம்!: சென்னையில் காட்சித் தொடர்பியல் படிப்பைப் படித்துவிட்டு, புனே திரைப்படக் கல்லூரியில் தற்போது மேற்படிப்பைத் தொடர்கிறார் கணேஷ் நந்தகுமார் (24). இதனால் படப்பிடிப்பு, படத்தொகுப்புப் பணிகளும் இவருக்கு அத்துப்படி. பெரும்பாலானோரைப் போல ‘ஃபுட் விளாக’ராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர், பிறகு சமையலின் பக்கம் தனது ஆர்வத்தைத் திருப்பியிருக்கிறார். ஏன் இந்த ‘குக்கிங் விளாக்’ அவதாரம்?
“சிறு வயது முதலே சமைப்பதில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது சமையல் அறைக்குச் சென்று, தேவையானதைச் சமைத்துச் சாப்பிட அம்மாவும் உற்சாகப்படுத்தியே வந்தார். கல்லூரிப் படிப்பை விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்பதால், நானே சமைக்க முடிவெடுத்தேன். ஒரு நாள் இயல்பாக நான் சமைத்த உணவின் காணொளியை இன்ஸ்டகிராமில் பதிவு செய்தபோது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், அவ்வப்போது நான் சமைக்கும் உணவு வகைகளை இன்ஸ்டகிராமில் பதிவு செய்யத் தொடங்கினேன். மிகவும் ஆடம்பரமான சமையலெல்லாம் எனக்குத் தெரியாது. என்னிடம் இருக்கும் ஒரு மின் அடுப்பு, சமையல் ‘பான்’ ஆகியவற்றைக் கொண்டே எளிமையான ‘பேச்சிலர்’ சமையல்தான் செய்து வருகிறேன். வழக்கமான சமையலை எவ்வளவு எளிமைப்படுத்த முடியுமோ அவ்வளவு எளிமைப்படுத்திச் சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் சமைக்கிறேன். இது என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள், விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கும் ஒத்துப்போகிறது என்பதால்தான் என்னுடைய சமையல் காணொளிகள் ஹிட் ஆகின்றன” என்று தன்னுடைய சமையல் புராணத்தைச் சொல்கிறார் கணேஷ்.
சமூக வலைதளத்தில் சமையல்: ஓர் உணவு வகையைச் சமைப்பதற்குத் தேவையான பொருள்கள் என்னென்ன, எப்படிச் சமைப்பது என்பதை வழக்கமான பாணியில் சொல்வதைத் தவிர்க்கிறார் கணேஷ். இவரது காணொளிகள் அதிகபட்சமாக 1 நிமிடத்தைக்கூடத் தாண்டுவதில்லை. நேரடியாகச் சமையல் பாத்திரத்தை ‘ஃபோகஸ்’ செய்யும் கேமராவும் விறுவிறுப்பான படத்தொகுப்பும் அமையப்பெற்ற இவரது காணொளிகள் வெறும் 30 விநாடிகளுக்குள் ஓர் உணவு வகையை விளக்குகிறது. இந்தப் பாணியைப் பின்பற்றக் காரணம் என்ன?
“யூடியூபில் நிறைய சமையல் காணொளிகளைப் பார்க்கும் பழக்கம் எனக்கும் உண்டு. இதில் சிலர் வளவளவென பேசிக்கொண்டு ‘ரெசிபி’யைச் சொல்வதில் தாமதப்படுத்துவர். எரிச்சலை ஏற்படுத்தும் இந்தப் பாணியை என்னுடைய காணொளிகளில் தவிர்க்க வேண்டும் என நினைத்தேன். இதனால் ‘ஷார்ட்’ காணொளிகளாக ரெசிபிகளைப் பதிவு செய்கிறேன். சமைப்பது, படம்பிடிப்பது, படத்தொகுப்பு என அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். காணொளிகள் தயாரிப்பதில் அனுபவம் இருப்பதால், ‘குக்கிங் விளாக்’ செய்வதில் பெரிய சவால்கள் ஏதுமில்லை. இன்ஸ்டகிராமில் பதிவுசெய்ய வேண்டுமென்பதற்காகச் சமைப்பதில்லை. நாள்தோறும் விடுதியில் நான் சமைத்துச் சாப்பிட நினைக்கும் உணவு வகைகளையே ஆவணப்படுத்துகிறேன், இன்ஸ்டகிராமிலும் பகிர்கிறேன்” என்கிறார் கணேஷ்.
ஆண்களும் சமைக்கலாம்: குழம்பு வகைகள், முட்டை உணவு வகைகள், பர்கர், நூடுல்ஸ் எனச் சகலமும் சமைத்து அசத்துகிறார் கணேஷ். சமையல் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல எனச் சொல்லும் அவர், கூடவே ஒரு செய்தியையும் பகிர்கிறார். “என்னைப் பொறுத்தவரை சாப்பிடத் தெரிந்த அனைவரும் சமைக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். சமையல் என்பது உயிர் வாழ்வதற்கான ஒரு திறன்தானே (survival skill) தவிர, இது பெண்களுக்கானது, ஆண்களுக்கானது எனப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. இதுவரை நான் பதிவுசெய்த காணொளிகளைப் பார்த்து என் வயதையொட்டிய நண்பர்கள் யாரும் ‘ஓர் ஆண் சமைக்கலாமா?’ என்கிற கேள்வியைக் கேட்டதில்லை. மாறாக, என்னுடன் சேர்ந்து விடுதியில் ஆண் நண்பர்கள் பலரும் சமைக்கின்றனர். ஆண்கள் சமைக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை இந்தத் தலைமுறையினர் எடுப்பதில்லை. மாற்றம் தொடங்கிவிட்டது. சாப்பிட விரும்பும், சமைக்க விரும்பும் யாவரும் சமைக்கலாம்” என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் கணேஷ்.