

ஒரு சாதனையை ஒருமுறை படைப்பதற்கே பெரும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், நேபாளத்தைச் சேர்ந்த கமி ரிட்டா, ஒரே சாதனையை 29 முறை செய்து புதிய உச்சத்தை அடைந்துள்ளார். உலகின் உயரமான சிகரமான எவரெஸ்டில் 29 முறை ஏறி இவர் சாதனை படைத்துள்ளார், எவரெஸ்ட் சிகரம் 8,850 மீட்டர் உயரம் கொண்டது.
இந்தச் சிகரத்தில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர், வீராங்கனைகள் ஏறிச் சாதனை படைத்திருக்கிறார்கள். கமி ரிட்டா இதை ஒரு பொழுதுபோக்குப் போலச் செய்து சாதனை மேல் சாதனை படைத்துவருகிறார்.
1992ஆம் ஆண்டில் தன்னுடைய 22ஆவது வயதில் கமி ரிட்டா மலையேற்ற வாழ்க்கையைத் தொடங்கினார். தீவிரப் பயிற்சிக்குப் பிறகு முதல் முறையாக 1994இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை இவர் அடைந்தார்.
அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் இவர். அந்த வகையில் இந்த ஆண்டில் சில தினங்களுக்கு முன்பு 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்துக்குச் சென்று சாதனை படைத்தார் கமி ரிட்டா.
கமி ரிட்டாவின் சாதனைகளைத் தொடர்ந்து, அவரை ‘எவரெஸ்ட் மேன்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். கமி ரிட்டாவைப் போலவே நேபாளத்தைச் சேர்ந்த பசாங் தவா என்பவரும் 27 முறை எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்று வந்திருக்கிறார்.
இப்படியும் ஒரு ரசிகர்! - ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இந்தத் தொடரோடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ். தோனி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்காகவே ரசிகர் கூட்டம் கூடிவிடுகிறது.
அதேபோல சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் இங்கு ஆஜராகிவிடுகிறார்கள். இவர்களைப் போல அல்லாமல் டெல்லியைச் சேர்ந்த கெளரவ் என்கிற தீவிர ரசிகர், எம்.எஸ். தோனியைக் காணவே டெல்லியிலிருந்து 2,206 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்துச் சென்னைக்கு வந்துள்ளார்.
தோனியுடன் ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் சைக்கிளில் வந்துள்ளார் கெளரவ். 26 நாள்கள் சைக்கிளில் பயணம் செய்து, மே 12 அன்று சென்னை சேப்பாக்கத்துக்கு வந்துசேர்ந்தார். அன்றைய தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியைக் கண்ட அவர், எதிர்பார்த்தது போல தோனியுடன் ஒளிப்படம் எடுக்க முடியவில்லை.
எப்படியும் சென்னை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும் என்று நம்பும் கெளரவ், அப்போது சென்னை வரும் தோனியுடன் ஒளிப்படம் எடுத்து ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காக சென்னையிலேயே டேரா போட்டிருக்கிறார். டெல்லியிலிருந்து சென்னை வரையிலான பயணத்தையும் வீடியோவாக்கி, அதை அவ்வப்போது இன்ஸ்டகிராமிலும் பதிவேற்றி வருகிறார் கெளரவ்.